புது ராமர் கோவில் ரெடி – புதிய மசூதி ?
புது ராமர் கோவில் ரெடி.
புதிய மசூதி?
டிசம்பர் 6. இன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள். பாபர் மசூதி 16 ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னர் பாபர் ஆணையின் பேரில் அவரது தளபதி மீர் பக்கியால் கட்டப்பட்டதாகும்.
ஆனாலும், நவம்பர் 9, 2019 அன்று உச்சநீதி மன்றம் , பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவிலை கட்ட அனுமதி அளித்தது. அதேவேளை பாபர் மசூதி கட்டுவதற்கு, உ.பி அரசு ஐந்து ஏக்கர் நிலம் தரவேண்டும்! என தீர்ப்பளித்தது.
இதோ, ராமர் கோவில் கட்டும்பணி முடிவடைந்து 2024, ஜனவரி மாதம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையே சாதனையாகக்கூறி, நடைபெற இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜக பிரச்சாரம் செய்யவிருக்கிறது.
சரி, உச்சநீதி மன்றம் பாபர் மசூதி கட்ட ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கச் சொன்னதே! அங்கு மசூதி கட்டப்படுகிறதா ?
இது குறித்து The Wire, Times of India, பிஸ்னெஸ் ஸ்டேண்டர்ட். காம் ஆகிய இணைய இதழ்கள் வழியாகத் திரட்டிய சில விவரங்களை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
உச்சநீதி மன்றம் மசூதி கட்ட இடம் ஒதுக்க சொன்னாலும் இந்துத்துவா அமைப்புகள் இதை விரும்பவில்லை. அதே போல் சில இசுலாமிய அமைப்புகளும் நிலம் பெறுவது குறித்து மாற்று கருத்தைக் கொண்டிருந்தன.
இத்தீர்ப்பை ஒட்டி, வக்ஃப் சட்டம் மற்றும் ஷரியாவின் படி, ஒரு மசூதியை விற்கவோ (அ) வேறு பயன்பாட்டுக்கோ, (அ) வேறு எந்த இடத்திற்கோ மாற்ற முடியாது! என்று அவர்கள் வாதிட்டனர்.
அதேவேளை, உ.பி மத்திய சன்னி வக்ஃப் வாரியம் இணக்கமான போக்கை கடைபிடிக்க விரும்பி, இந்த முடிவை வரவேற்றது.
மசூதி கட்டுமானப் பணிகளைக் கையாளுவதற்காக இந்தோ-இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை (IICF) உருவாக்கப்பட்டது.
மசூதி கட்ட ஏதுவான இடத்தை இசுலாமியர்களுக்கு வழங்க உ.பியை ஆளும் யோகி ஆதித்யநாத் அரசுக்கு மனப்பூர்வமாக விரும்பவில்லை. நீதிமன்றம் சொல்லிவிட்டதே என்பதற்காக அயோத்தி நகருக்கு வெளியே, தன்னிபூர் எனும் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை வழங்கியது.
பாபர் மசூதி இருந்த இடத்திலிருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் இவ்விடம் உள்ளது. சரியான சாலை வசதி இல்லை. குறுகலான வழித்தடமே உள்ளது.
மேலும் இது விவசாய நிலம். என்பதால், மசூதி கட்ட அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் (ஏடிஏ) தடையில்லா சான்று பெறுவதில் இடையூறு ஏற்பட்டது. தீயணைப்புத் துறையிடமும் தடையில்லாச் சான்று வாங்குவதில் பிரச்சனை. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் உ.பி மத்திய சன்னி வக்ஃப் வாரியம் இவ்விடத்தைப் பெற்றுக்கொள்ள சம்மதித்தது.
இங்கு கட்டப்படும் மசூதிக்கு பாபர் பெயரோ, வேறு எந்த முகலாய அரசர் பெயரோ வைக்கமாட்டோம்! எனக்கூறி 2021 ஜனவரி 26 ஆம் தேதி மசூதிக்கு அடிக்கல் நாட்டியது IICF அறக்கட்டளை.
கட்டப்பட இருக்கிற மசூதிக்கு இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் அடையாளமாகத் திகழ்ந்த மௌல்வி அகமதுல்லா ஷாவின் பெயர் வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலத்தில், மசூதியோடு, இந்தோ-இஸ்லாமிக் ஆராய்ச்சி மையம், ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ஒரு நூலகம், ஒரு அருங்காட்சியகம், ஒரு சமூக சமையலறை மற்றும் ஒரு கலாச்சார மையம் ஆகியவையும் கட்ட திட்டமிடப்பட்டிருந்தது.
இதன் பொருட்டு , அருங்காட்சியகம் மற்றும் காப்பகங்களின் ஆலோசகராக வரலாறு மற்றும் சர்வதேச உறவுகளில் நிபுணரான பேராசிரியர் புஷ்பேஷ் பந்த், நியமிக்கப்பட்டார். பேராசிரியர் எஸ்.எம்.அக்தர் மசூதியை வடிவமைத்தார்.
மருத்துவமனை 100 படுக்கைகள் கொண்டதாகவும், சமுதாய சமையலறையில் தினமும் 1,000 ஏழைகளுக்கு உணவு சமைக்கவும், பின்னர் 2,000 பேருக்கு உணவளிக்கும் வகையில் விரிவுபடுத்தவும் திட்டமிட்டிருந்தார்கள்.
இவையனைத்தும் 2023 க்குள் கட்டி முடிக்கப்படும் எனவும் இந்தோ-இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை (IICF) தெரிவித்திருந்தது.
இத்திட்டத்துக்காக 300 கோடி நிதி திரட்டவும் IICF எண்ணியிருந்தது. இதற்கான கட்டிட வரைபடங்களை பரிசீலித்த அயோத்தி மேம்பாட்டு ஆணையம் (ADA) ,ரூ 12 கோடி டெபாசிட் செய்யும்படி IICF யிடம் கேட்டது.
ஆனால் IICF ஆல் அதுவரை 50 லட்சம் மட்டுமே நிதி சேகரிக்க முடிந்திருந்தது. இதற்கிடையே, தீயணைப்புத் துறை தடையில்லாச் சான்றிதழில் வழங்குவதற்கு , மசூதி வளாகத்தின் அணுகுச் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனை விதித்தது.
இதற்கும் அதிக நிதி தேவைப்படுகிறது. ஆகவே, நிதிப் பற்றாக்குறையின் காரணமாக, மருத்துவமனை, நூலகம், அருங்காட்சியகம் மற்றும் சமுதாய சமையல் கூடம் கட்டும் திட்டம் ஆகியவற்றை ஐஐசிஎஃப் ஒத்திவைத்துள்ளது.
மேலும், மசூதியை மட்டும் கட்டுவதற்கான வரைபடத்தையும் திருத்தியது. மசூதியைக் கட்டத் தொடங்கினால் நிதியைத் திரட்டிவிட முடியும் என அது நம்புகிறது. ஆனால் இதற்கு முஸ்லீம்கள் மத்தியில்கூட பெரிய அளவு ஆதரவு இல்லை.
‘பாபர் மசூதி வழக்கில் நீதிக்கு பதிலாக, ஐந்து ஏக்கர் நிலத்தை ஏற்றுக்கொள்வது என்பது முஸ்லிம் சமூகத்திற்கு நீதி தேவையில்லை! என்பதை ஏற்றுக்கொள்வதற்கு சமம் . மேலும் நாட்டில் இசுலாமியர்கள் இரண்டாம் நிலை குடிமக்களாக்கப்படுவது சட்டப் பூர்வமாக்கப்பட்டுள்ளது.’ என்கிறார் எழுத்தாளர் கஜாலா வஹாப்.
இங்கு மசூதி கட்டுவதை ஆதரித்தால், எதிர்காலத்தில் மற்ற மசூதிகள் இடம் பெயர்வதற்கும் வழி வகுக்கும். என பெரும்பாலான முஸ்லீம்கள் கருதுவதால்தான் ஐஐசிஎஃப்புக்கு போதிய அளவு ஆதரவு உருவாகவில்லை.
இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு பதிலாக புதிய மசூதியை அரசு கட்டித்தரும் என டிசம்பர் 6, 1992 இல் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் உறுதியளித்திருந்தார். எனவே அவ்விடத்தில் மசூதியை கட்டித்தருகிற பொறுப்பை அரசு ஏற்பதுதான் நியாயமானதாக இருக்கும்.
சமீபத்தில் ஏற்பட்ட சென்னை வெள்ளத்தில் பல மசூதிகள் பொதுமக்கள் தங்குவதற்கு ஏதுவாக திறந்துவிடப்பட்டன. உணவு வழங்கப்பட்டது.
அயோத்தியில் கட்டப்பட இருக்கும் புதிய மசூதியிலும் மருத்துவமனை, உணவுக்கூடம் என சிந்திக்கும் இசுலாமியர்களின் இணக்க மனதை இந்திய சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.
டிசம்பர் 6 முஸ்லீம் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் காயத்தை ஆற்ற இந்தியர்கள், உள்ளன்போடு சிந்திக்க வேண்டும்.
–