யார் இந்த ஹிரோ ஒனோடா? – Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
வரலாற்றில் இன்று செப்டம்பர் 2, 1945 ஜப்பான் சரணடைந்தவுடன் இரண்டாம் உலகப்போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது.
செப்டம்பர் 1,1939 அன்று போலந்துக்குள் நுழைந்து பிரிட்டனையும் பிரான்சையும் ஹிட்லர் வம்புக்கு இழுத்த போது ஹிட்லருக்கு இது உலக மகா யுத்தமாக மாறி அடுத்த ஆறே ஆண்டுகளில் தனது மூன்றாம் ரீக்கை ஆட்டம் காணச் செய்து தன்னையும் மாய்த்துக் கொள்ளச் செய்யும் என்றோ தனது நண்பர் முசோலினியை பொதுமக்கள் கொன்று அம்மனமாக ஊர்வலம் கூட்டிச் செல்வார்கள் என்றோ ஜப்பான் மீது உலகின் முதல் இரண்டு அணுகுண்டுகள் பரிசோதனை செய்யப்படும் என்றோ தெரிந்திருக்காது.
சரி விஷயம் அதுவல்ல…
யார் இந்த ஹிரோ ஒனாடோ?
1944 டிசம்பர் மாதம் அச்சு நாடுகள் ( ஐப்பான் – இத்தாலி- ஜெர்மனி) தங்களின் பிடியை இழந்து போரில் தோல்வி முகத்தில் இருந்த காலம்.
23 வயதே ஆன லெப்டினன்ட் ஹிரோ ஒனோடா- ஜப்பானில் இருந்து அதன் ஆளுகைக்குள் இருந்த பிலிப்பைன்ஸ் நாட்டின் லுபாங் தீவுக்கு படையுடன் அனுப்பப்படுகிறார்.
ஒனோடா- பதுங்கி திடீர் எனத் தாக்கும் கொரில்லா போர் முறையில் பயிற்சி பெற்றவர். எக்காரணம் கொண்டும் சரண் அடையக் கூடாது. தன்னுயிரையும் மாய்த்துக் கொள்ளக் கூடாது என்ற அரச கட்டளையுடனும் இறுதிவரை தீவை எதிரியின் பிடியில் செல்லாமல் காக்க வேண்டும் என்ற ஆணையுடனும் தீவில் இறங்கினார்.
ஆனால் விதி விடுமா?
அமெரிக்க படைகள் சில வாரங்களிலேயே பிப்ரவரி 1945 இல் அந்தத் தீவை ஆக்கிரமிக்க தீவின் வனாந்திரத்துக்குள் தன்னுடன் மூன்று வீரர்களுடன் புகுந்து விட்டார்.
இவரது தலைமை அதிகாரி இவரை அழைத்து ரகசியமாக கூறிய ஆணை யாதெனில் “மூன்று வருடமோ ஐந்து வருடமோ தொடர்ந்து போரிடுங்கள். நாங்கள் நம் படையுடன் திரும்பி வரும் வரை தீவைக் கைவிடாதீர்கள்”
இது தான் மேஜர் யோஷிமி டனிகுச்சி கூறிய கடைசி ஆணை. இந்த ஆணையை ஏற்று அங்கிருந்து கொரில்லா போர் தாக்குதல்களில் இவருக்கு கீழ் மற்ற மூவரும் ஈடுபட்டனர்.
ஹிரோஷிமா நாகசாகியில் இரண்டு அணுகுண்டுகள் வீசப்பட ஜப்பான் செப்டம்பர் 2 ஆம் தேதி , அதிகாரப்பூர்வமாக சரணடைந்து விட்டது.
ஆனாலும் இந்த நால்வருக்கும் அந்தச் செய்தி சென்று சேரவில்லை. அவர்கள் தொடர்ந்து போர் நடந்து கொண்டிருக்கிறது என்று நம்பி தொடர்ந்து தங்களது கொரில்லா போர் முறையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நால்வரில் , அகட்சு என்பவருக்கு சுமார் நான்கு வருடங்கள் கழித்து தான் ஞானோதயம் வந்து போர் நிச்சயம் முடிந்திருக்கும் என்ற எண்ணம் வர, மிச்ச பேரை விட்டு விட்டு தனியாக வெளி வந்தார்.
அடுத்த ஆறு மாதங்கள் வனத்திற்குள் சுற்றித் திரிந்தவரை, பிலிப்பைன்ஸ் ராணுவம் 1950 இல் கைது செய்ய இவர் சரணடைந்து ஜப்பான் திரும்பினார்.
அவர் இது போன்று இன்னும் மூவர் இன்னும் போர் முடியவில்லை என்று நம்பிக்கொண்டு தீவில் இருக்கின்றனர் என்பதை வெளி உலகுக்குக் கூறிய பின்பு தான் இவர்கள் உயிரோடு இருப்பதே தெரிய வந்தது.
ஜப்பான் சரணாகதி அடைந்த செய்தியுடன் இந்த மூவரையும் சரணடையக் கூறி ஜப்பான் ராணுவ அதிகாரியிடம் இருந்து பெறப்பட்ட கடிதம் நோட்டீஸ்களாக மூலம் விமானத்தில் இருந்து தீவு முழுவதும் போடப்பட்டன.
ஆனால் ஒனோடோ இதை எதிரிகளின் சூழ்ச்சி என்று நம்ப மறுத்துவிட்டார். தொடர்ந்து தீவில் உள்ள மக்கள் வீடுகளில் அரிசியை திருடி உண்பது, வாழைப்பழம், மாடுகளை அடித்து கறியை காயவைத்து உண்பது, தேங்காய் போன்றவற்றை உண்டு வாழ்வது கூடவே அவ்வப்போது தீவுவாசிகளை போர் எதிரிகள் என நினைத்து கொரில்லா முறைப்படி கொல்வது என இந்த மூவரும் அட்ராசிட்டி செய்து வந்துள்ளனர்.
1950 முதல் 1953 காலங்களில் நடந்த கொரியப் போரில் பறந்து திரிந்த போர் விமானங்களை இவர்கள் ஜப்பான் படையின் எதிர்தாக்குதல் என்று எண்ணிக் கொண்டிருந்திருக்கின்றனர்.
1953 ஆம் ஆண்டு எஞ்சியிருக்கும் மூவரில் ஒருவரான கார்போரல் சோய்ச்சி என்பவர் லோக்கல் மக்களுடன் நடந்த சண்டையில் காலில் குண்டடி பட்டு 1954 ஆம் ஆண்டு இது போன்ற சண்டையில் குண்டடி பட்டு மரணமடைந்துள்ளார்.
இப்போது உயிரோடு இருப்பவர்கள் இரண்டே பேர் தான். ஓனோடோவும் நண்பர் கொசுக்காவும் மட்டுமே. அதற்கடுத்து இவர்கள் இருவரும் 1954 முதல் 1972 வரை லுபாங்க் தீவில் மறைந்து வாழ்வதும் வெளியே வந்து சிலரைக் கொல்வதும் என முப்பது பேரைக் கொன்றிருக்கின்றனர்.
இதற்கிடையே 1959 ஆம் ஜப்பான் அரசு அதிகாரப்பூர்வமாக இவர் இறந்து விட்டார் என்றும் அறிவித்து விட்டது. அக்டோபர் 1972 இல் கொசுக்காவும் பிலிப்பைன்ஸ் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்து விட அதற்கடுத்து தன்னந்தனியாக சுமார் இரண்டு வருடங்கள் காட்டுக்குள் ராணுவ வீரராக இன்னும் உலகப்போர் நடந்து வருவதாக நம்பி வாழ்ந்திருக்கிறார் ஒனோடா.
இதற்கிடையே பிலிப்பைன்ஸை சுற்றிப் பார்க்க ஜப்பானில் இருந்து வந்த யாத்திரியான சுசுகி என்பவர் 1973 இன் இறுதியில் தற்செயலாக இவரை வனத்துக்குள் சந்திக்கிறார்.
இரண்டாம் உலகப்போர் முடிந்து 29 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஜப்பான் சரணடைந்து விட்டது. நீங்களும் சரணடைந்து விடுங்கள் என்று கூறியும் ஒனோடோ “நீ சொன்னால் நான் நம்பமாட்டேன். எனக்கு ஆணை பிறப்பித்த மேஜர். யோஷிமி டனிகுச்சி கூறினால் மட்டுமே நான் நம்புவேன்” என்று அடம் பிடித்திருக்கிறார்.
மீண்டும் ஜப்பான் சென்ற சுசுகி, மேஜராகப் பணிபுரிந்த டனிகுச்சி தற்போது புத்தகம் விற்பவராக இருப்பதை அறிந்து அவரிடம் விஷயத்தைக் கூறி அவரையும் அழைத்துக் கொண்டு மார்ச் மாதம் 1974 ஆம் ஆண்டு ஒனோடோவை சந்திக்கிறார். முன்னாள் மேஜர் டனிகுச்சி ஆணையிட்ட பிறகே ஒமோடோவுக்கு சுயநினைவே வந்திருக்கிறது.
மிகவும் மனச்சோர்வுக்கும் ஆற்றாமைக்கும் சென்றிருக்கிறார். அவரால் ஜப்பான் சரணடைந்ததை நம்பவே முடியவில்லை. எனினும் தனது மேஜர் ஆணையிட்டதால் தனது போர் வாளை அப்போதைய பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினான்ட் மார்கோஸிடம் ஒப்படைத்து அதிகாரப்பூர்வமாக சரணடைந்தார்.
அங்கிருந்து பொது மன்னிப்பு வழங்கப்பட்டு ஜப்பானுக்கு சென்ற அவரை மக்கள் சிறப்பாக வரவேற்றனர். ஆயினும் போருக்குப் பின் அமெரிக்க மோகத்துடன் மாறிப்போயிருந்த நவீன ஜப்பானுடன் அவரால் ஒன்றிப் போக முடியவில்லை. அங்கிருந்து பிரேசிலுக்குப் பயணமாகி அங்கு ஜப்பானியக் குடியிருப்பு ஒன்றில் இறுதி வரை கால்நடை பராமரிப்பிலும் கூடவே சவாலான சூழ்நிலையில் உயிர்பிழைத்தல் குறித்த பயிற்சியும் கொடுத்த வந்தவர் 2014 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
இதில் இருந்து நான் கற்கும் படிப்பினை கால மாற்றத்திற்கு ஏற்றவாறு நமது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் எதை நம்ப வேண்டும் எதை நம்பக் கூடாது என்பதை தீர ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும்.
நாம் கற்ற விஷயம் தவறாக இருப்பின் அதில் விடாப்பிடியாக இல்லாமல் மறுகற்றலுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். ஒனோடோவின் நண்பர் ( நால்வரில் முதலில் வெளியேறியவர்) போல நிலைமையை ஆராய்ந்து சீர்தூக்கிப் பார்த்து உண்மையை உணர வேண்டும்.
எதிலும் விடாப்பிடியாக இருப்பதை விட அறிவையும் சிந்தனையையும் கொண்டு முடிவெடுக்க வேண்டும்.
நமது இந்த விடாப்பிடி குணமும் சிந்திக்காமல் ஒரே விஷயத்தை பற்று குணமும் நம்மையும் நம் சுற்றத்தையும் பாதிக்கலாம்.
ஒனோடோ- தனது அதிகாரியின் கட்டளைகளை மீறாத ராணுவ வீரராக இருக்கலாம். ஆனால் கட்டளையிட்ட அதிகாரி , ஜப்பானுக்கு எப்போதோ சென்று நூல் விற்பனை செய்யத் துவங்கி விட்டார்.

கூட இருந்த ஒரு நண்பன் தானே சிந்தித்து சென்று புது வாழ்க்கை தொடங்கி விட்டான். ஆனால் அதிகாரி கூறியதை அப்படியே செயல்படுத்தி வேறு எதைப்பற்றியும் யோசிக்காமல் தனது இளமையை முழுவதுமாகத் தொலைத்து இன்னும் முப்பது அப்பாவி தீவுவாசிகளை தனது அறியாமையால் கொன்ற ஒனோடோவிடம் இருந்து தற்காலத்திலும் நமக்கான பாடம் இருக்கிறது தானே..
ஹிரோ ஒனோடா வரலாற்றில் ஹீரோவாக சிலருக்கும் ஜீரோவாக சிலருக்கும் தெரிகிறார் என்றால் அது மிகையாகாது. காலமே பதில் சொல்லும்
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்