திருமண வீட்டில் ஏன் கருவாட்டு குழம்பு பரிமாறப்படுவதில்லை ?
சென்னையில் “நீலம்” அரங்கில் ஜனவரி 18 நடந்த “நெய்தல் கைமனம்” நூல் வெளியீடு நிகழ்வு ஓர் இனிமையான அனுபவம். எந்த பகட்டும் இல்லாமல் இயல்பாக நடந்த ஒரு நிகழ்ச்சி. தொடங்கிய ஒரு மணி நேரத்தில் நூல் வெளியீடு முடிந்தது.
நூற்றுக்கும் அதிகமான பார்வையாளர்கள். அனைவருமே செயல்பட்டாளர்கள். பல்வேறு துறைகளின் ஆளுமைகள். நூலை அறிமுகப்படுத்தி பேசியவர்கள் இயல்பான கள அரசியலை முன் வைத்து பண்பாட்டு தளத்தில் “நெய்தல் கைமனம்” ஏற்படுத்தும் அரசியலை பேசினார்கள்.
உழைக்கும் மக்கள் வாழ்வியலின் அரசியலை விவாதிப்பது சென்னையில் மிகவும் அரிதான ஒன்றாகும். ஒற்றைப் பண்பாட்டு தேசமாக இந்தியாவை மாற்றத் துடிக்கும் ஆணவங்களுக்கு மக்கள் தங்களது உணவு மூலம் பதில் சொல்ல முடியும் என்பதே பேச்சின் சாரமாக இருந்தது.
நாங்கள் என்றுமே ஒன்று அல்ல. நொச்சிக்குப்பம் அக்கா கடை சமையல் தொடங்கி பழவேற்காடு குடிசைக்குள் சமைக்கும் எனது அம்மாவின் சமையல் வரை பன்முகத் தன்மையின் வெளிப்பாடுகள்.
எப்படி விதவிதமாக சமைத்தாலும் ஒன்றாக கூடி சோறு சாப்பிடுகிறோமோ அதே போல பல மொழி, பல இறை நம்பிக்கை, பல பழக்க வழக்கங்கள் இவற்றுடன் கூடி வாழும் இந்தியாவை சிதைத்து, ஒற்றைப் பண்பாட்டு இந்தியா என்று பேச முற்பட்டால் எனது இறால் ஊறுகாயும், கருவாடு தொக்கும் தகுந்த பதிலடி கொடுத்து, இந்த தேசத்தையும் மக்களின் பண்பாட்டு உரிமையையும் காக்கும் என்ற பெரும் நம்பிக்கையை “நெய்தல் கைமனம்” தருகிறது என்று நூல் அறிமுகத்தில் பேசினார்கள். நெத்திலி மீன் குழம்பு மணம் போல பேச்சும் நிகழ்ச்சியும் பெரும் மனநிறைவைத் தந்தது.
தமிழில் நூல் வெளியிடும் பதிப்பாளர்கள் மிகவும் நியாயமான விலை என்பது பக்கத்திற்கு ஒரு ரூபாய். அப்படி என்றால் கூட “நெய்தல் கைமனம்” நூல் குறைந்தது ₹350 என்று விலை வைத்திருக்க வேண்டும்.
ஆங்கிலம் என்றால் பக்கத்திற்கு ₹3/- என்பதே பொதுவான விலை.
அப்படி என்றால் குறைந்தது ₹900/- என்று விலை இருக்க வேண்டும்.
Layout and designing சேர்க்காமல் உற்பத்தி செலவு நிச்சயம் ஒரு புத்தகத்திற்கு ₹350/- ஆகி இருக்கும் என்பது எனது கணிப்பு. அது இல்லாமல், இதில் பங்களிப்பு செய்தவர்களுக்கு புத்தகத்தின் ஒரு படி தர வேண்டும். அந்த செலவும் உற்பத்தி செலவில் சேர்த்தால் இன்னும் உற்பத்தி விலை அதிகமாகும்.
புத்தகத்தின் விலையோ ₹250/- என்பது வாசகன் என்று அளவில் மகிழ்ச்சியடைந்தாலும், விலை பெரும் அதிர்ச்சிதான். மக்களிடம் உரையாடல் நிகழ்த்த பரந்த வாசிப்பு அவசியம். அதற்கு விலை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற பெரும் பொறுப்போடு பதிப்பகம் நடந்துக் கொண்டுள்ளதை உணர முடிந்தது.
ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டிய பணி.
உயிர் பதிப்பகத்திற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். எனது மனம் நிறைந்த பாராட்டு. நூலின் தொகுப்பாசிரியர்கள் அ. பகத்சிங் – ர. நிரஞ்சனா இருவரும் மக்கள் இயக்கம் உருவாக இலக்கியத்தை எப்படி பயன்படுத்த முடியும் என்பதை இந்த நூலின் வாயிலாக வெளிப்படுத்தி உள்ளார்கள்.
திருமண வீட்டில் ஏன் கருவாட்டு குழம்பு பரிமாறப்படுவதில் என்று நான் கேட்பதுண்டு. கருவாடு வறுக்கும் போது வடக்கே அருள்மிகு காமகலா காமேஸ்லரி கோயில் தொடங்கி தெற்கே அருள்மிகு பார்த்தசாரதி சாமி கோயில் வரை திருவல்லிக்கேணி முழுவதும் மணக்கும். குழந்தையாக இவற்றை ரசித்தவன்.
உணவு அரசியல் மக்களின் வாழ்வுரிமை அரசியலின் ஒரு அங்கம். “உனது உணவு பொது நிகழ்வில் உண்பதற்கு தகுந்தது அல்ல” என்ற கருத்து மனிதரை ஒருவருக்கு கீழ் மற்றவர் என்று வைக்கும் சமூகக் கட்டமைப்பின் அடிப்படை கோட்பாடு.
ஆழ் மனதில் பதிய வைத்து, ஒரு வகை உணவு பழக்கம் கொண்டவரின் வாய் வழியாகவே “இதையெல்லாம் கல்யாண விருந்தில் பரிமாறுவார்களா?” என்று கேட்கும் அளவு நம்மை நாமே சிறுமைப் படுத்திக் கொள்ளும் மனநிலையில் வைக்கப்பட்டுள்ளோம்.
இயல்பான மனிதர்களின் உணர்வுடன் உணவு அரசியலை மிகவும் நேர்த்தியாக வாசகனுக்கு அறிமுகப்படுத்தி, ஒரு சமூக உரையாடலை “நெய்தல் கைமனம்” தொடங்கி வைத்துள்ளது.
சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர் – தந்தை பெரியார் – அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் பண்பாட்டு அரசியலை விடுதலைப் போராட்ட அரசியலுடன் இணைத்து விவாதித்தனர். அவர்கள் வழியில் ஆய்வறிஞர்கள் அ. பகத்சிங் – ர. நிரஞ்சனா இந்த நூலின் வாயிலாக மிகச் சிறந்த விவாதத்தை தொடங்கி வைத்துள்ளனர். பெரும் மகிழ்ச்சியும் வாழ்த்தும்.
உயிர் பதிப்பகம் மக்களின் உணவு அரசியலுக்கு உயிர் தந்துள்ளது. காலத்தே வெளி வந்துள்ள “நெய்தல் கைமனம்” நூல் பதிப்பிற்காக உயிர் பதிப்பகத்திற்கு செம்மார்ந்த வாழ்த்துகள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கடுமையான உழைப்பைத் தந்துள்ள நூல் தொகுப்பாளர்கள், அவர்களுடன் இந்த நூலுக்கான பல வகை பங்களிப்பை தந்தவர்கள் அனைவரையும் சிறப்பிக்க நினைப்பவர்கள் ₹250/- தந்து நூலை வாங்கி வாசிக்கவும். நூலை முன் வைத்து உரையாடவும்.
குறிப்பாக ஆண்கள் சமைக்கும் போது மீன் குழம்பும், இறால் தொக்கும், நண்டு வறுவலும் எவ்வளவு ருசியாக இருக்கும் என்பதை அனுபவ ரீதியாக சமைத்துப் பார்த்து உணர “நெய்தல் கைமனம்” உதவும்.
வாசகத் தோழன்
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு