குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியை தொடக்கி வைத்த நீதிபதிகள் !
குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க உலக நாடுகள் போராடினாலும், இது இன்னும் பல இடங்களில் தொடர்கிறது. குழந்தைகள் உடல் ரீதியாகவும் மன ரீதியான கொடுமைகளை அனுபவிக்கிறார்கள். பள்ளிப்படிப்பு தடைபடுகிறது. உடல், மன வளர்ச்சி பாதிக்கப்பட்ட அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.
அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், வறுமை, சமத்துவமின்மை போன்ற சமூகப் பாதுகாப்பு, விழிப்புணர்வு தேவை. முதலாளிகள், தொழிலாளர்கள், சமூகத்தில் உள்ள அனைவரதும் ஒத்துழைப்பும் அவசியமாக உள்ளது. ஜூன் 12 உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாளாக அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் குழந்தைகள் தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு குழு சார்பாக கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
முன்னதாக இந்த நிகழ்ச்சியை சட்டப் பணி குழு சார்பாக மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிபதி செல்வி இலக்கியா, மற்றும் சார்பு நீதிபதி முத்து மகாராஜன், ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்து சாத்தூர் பேருந்து நிலையத்தில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகையில் கையெழுத்திட்டனர்.
இந்தப் பேரணியில் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் அரசு தொழில் பயிற்சி கல்லூரி மாணவ மாணவியர்கள் 200-க்கும் மேற்பட்டோர் சாத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து நகர் காவல் நிலையம் வரை பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் நடனமாடி ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இந்த நிகழ்வில் கோட்டாட்சியர் சிவக்குமார், வட்டாட்சியர் ராஜாமணி, போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமரன், மதிமுக மாநகரச் செயலாளர் கணேஷ் குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் தமிழ் செல்வம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
— மாரீஸ்வரன்.