திராவிட இயக்கப் பதிப்பு செம்மல் பண்னை முத்துகிருஷ்ணன் – இராச இளங்கோவன் புகழாராம் !
திராவிடப் பண்ணை முத்துகிருஷ்ணன் நூற்றாண்டு விழா – செண்பகத் தமிழ் – இராசு. இளங்கோவன்
அங்குசம் சமூக நல அறக்கட்டளைத் தொடர்ந்து நடத்தி வரும் யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடையின் 27ஆம் நிகழ்வு 12.07.2025ஆம் நாள் “திராவிடப் பண்ணை முத்துக்கிருஷ்ணன் – 100” நூற்றாண்டு விழாவாக நடைபெற்றது. இவ் விழாவிற்குத் திருச்சி திருவரங்கம் செண்பகத் தமிழரங்கின் இயக்குநர், தமிழ்ச்செம்மல் இராச இளங்கோவன் அவர்கள் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் சிறப்பு விருந்தினரை அவைக்கு அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்ச்சியின் புரவலர் பேராசிரியர் ரெ.நல்லமுத்து பயனடை அணிவித்து சிறப்பு செய்தார். பெரியார் விருதாளர் திருச்சி தி.அன்பழகன் நூல்களைப் பரிசாக வழங்கினார்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் தன்னுடைய தொடக்க உரையில்,“சென்னையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் 21 வயதான சின்ன அண்ணாமலையைப் பொறுப்பாளராகக் கொண்டு தமிழ்ப் பண்ணை என்னும் பதிப்பகத்தை 1942இல் தொடங்கினர். அந்தப் பதிப்பகத்தின் பணி, புராண இதிகாசங்களை தமிழ் இலக்கியம் என்ற பெயரில் வெளியிடுவதாக இருந்தது. தொடர்ந்து கடவுள் நம்பிக்கை குறித்த நூல்களை வெளியிடுவது. தமிழ் என்றாலே பக்திதான் அதைத் தாண்டி தமிழில் எதுவுமில்லை என்று தமிழ்ப்பண்ணை செயலாற்றி வந்துகொண்டிருந்தது. அப்போது அண்ணா திராவிடர் கழகத்தில்தான் இருந்து கொண்டு, தலைமையின் எந்த அனுமதியையும் பெறாமல் , தமிழ்ப்பண்ணைக்கு எதிராகத் திராவிடப் பண்ணை என்ற பதிப்பகத்தை அமைக்கவேண்டும் என்று எண்ணினார். அப்போது திராவிடவியல் கருத்திலை சின்னசின்ன வெளியீடாக வெளியிட்டு வந்த திருச்சியைச் சார்ந்தத 21 வயது நிரம்பிய தனக்கு முன்பே அறிமுகமான முத்துகிருஷ்ணனைத் திராவிடப் பண்ணை பதிப்பத்திற்குப் பொறுப்பாளராக நியமித்தார். திராவிடப் பண்ணையின் செயல்பாடுகளுக்குக் கட்சியிலிருந்து நிதி ஒதுக்கியதாக தகவல்கள் இல்லை. முத்துகிருஷ்ணன் அவர்கள் தன் சொந்த நிதியிலிருந்து திராவிடப் பண்ணை பதிப்பகத்தைத் தொடங்கினார்.

புராண, இதிகாசகங்களுக்கு எதிரான நூல்களை வெளியிட்டார். சுயமரியாதை, பகுத்தறிவு, தன்மானம் இவற்றைப் பறைசாற்றும் நூல்கள் என 50க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டார். ஒவ்வொரு நூல்களும் பல பதிப்புகளைக் கண்டு வெளிவந்தன. இதனால் முத்துகிருஷ்ணன் பிற்காலத்தில் திராவிடப் பண்ணை என்ற அடைமொழியோடு திராவிடப் பண்ணை முத்துகிருஷ்ணன் என்று அழைக்கப்பட்டார். திராவிட இயக்கம் உணர்ச்சிவயமான அமைப்பு என்பதைத் தாண்டி அறிவுவயமானதும் என்பதை நிலைநிறுத்திய பெருமை திராவிடப் பண்ணை முத்துக்கிருஷ்ணன் அவர்களே சாரும்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து சிறப்புரையாற்றிய இராச இளங்கோவன்,“திராவிட இயக்கத்திற்குப் பெருமை சேர்த்தவர் திராவிடப் பண்ணை முத்துகிருஷ்ணன். அவரின் நூற்றாண்டு விழாவில் என்னை உரையாற்ற அழைத்து, வாய்ப்பு தந்த யாவரும் கேளீர் – தமிழியல் பொதுமேடை அமைப்பினருக்கும் அங்குசம் சமூக நல அறக்கட்டளைக்கும் என்ற நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். திருவரங்கத்தில் செண்பக தமிழரங்கு என்னும் தமிழ் இலக்கிய அமைப்பைத் தொடர்ந்து நடத்தி வருகிறேன். இந்த அமைப்பைத் தொடங்கியவர் என் தந்தையார் வழக்கறிஞர் இராசவேலு. அவர் மறைவுக்குப் பின் அந்த அமைப்பைத் தொய்வில்லாது நடத்தி வருகிறேன். அந்த அமைப்பின் இயக்குநராகவும் இருந்து வருகிறேன்.
திருவரங்கப் பகுதியில்1950 – 70 காலக்கட்டத்தில் என் தந்தையார் இராசவேலு அவர்கள் வழக்கறிஞராக இருந்துகொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் செயல்பட்டு வந்தார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் அன்பைப் பெற்றவர். 70களில் தந்தை பெரியார் கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்து திருவரங்கம் வருகிறார். என் தந்தையார் பெரியாரை மரியாதை நிமித்தம் சந்திக்கிறார். அப்போது தந்தை பெரியார் சொல்கிறார்,“நீங்கள் அறங்காவலராக உள்ள திருவரங்கத்தில் போராட்டத்தை நடத்தவில்லை. போராட்டத்தை மன்னார்குடிக்கு மாற்றிவிட்டேன்” என்று. அந்த அளவுக்குப் பெரியாரின் நன்மதிப்பைப் பெற்ற என் தந்தையாரின் அடிச்சுவட்டில் வாழ்ந்து வரும் நான், திராவிட இயக்கத்தில் அதன் கொள்கைகளை, கோட்பாடுகளை அச்சிட்டு வெளியிட்டு அரும்பணியாற்றிய திராவிடப் பண்ணை முத்துகிருஷ்ணன் குறித்து உரையாற்றுவது திராவிட இயக்கச் சிந்தனைகளை ஏற்றிருக்கும் எனக்குப் பெருமை தரும் ஒன்றாகவே கருதுகிறேன்.
இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க கண்டி நகரில் வீராசாமி பொன்னம்மாள் இணையருக்கு மூத்த மகனாக 1921ஆம் ஆண்டு பிறந்தவர்தான் முத்துகிருஷ்ணன். இவருக்கு 3 கோதரர்கள் 3 சகோதரிகள். முத்துகிருஷ்ணன் பள்ளிக்கூடம் சென்று முறையாகப் படிக்கவில்லை. தன் மயற்சியால் தானே எழுத்துக்கூட்டிப் படிக்கக் கற்றுகொண்டு, இளமையில் நூல்களைப் படிக்கவும், நூல்களை எழுதவும் கற்றுக்கொண்டார். 1932ஆம் ஆண்டு வாக்கியில் முத்துகிருஷ்ணன் குடும்பத்தினர் தமிழகத்தின் திருச்சியில் குடியேறுகின்றனர். இவரது குடும்பம் தொடக்கத்தில் தெப்பக்குளம் ஆண்ணாள் தெருவின் கடையில் உள்ள பாபு ரோட்டில் குடியிருந்தனர். இக் குடும்பத்தினர் சுருட்டு விற்கும் தொழிலைச் செய்து வந்தனர். பின்னர் சிறுசிறு புத்தகங்களை அச்சடித்து விற்பனை செய்து வந்தனர்.
தந்தை பெரியாரின் சமூக மாற்றத்திற்கான சிந்தனைகள் இளைஞனாக இருந்த முத்துகிருஷ்ணனைக் கவர்ந்தது. திராவிடர் கழகத்தின் பொருளாளராக இருந்த அண்ணாவின் பேச்சும் இவரைக் கவர்ந்தது. 18 வயதில் திருச்சிக்கு வந்த அண்ணாவைச் சந்தித்து தன்னையும் திராவிட இயக்க செயல்வீரராக இணைத்துக் கொள்கிறார். தேசிய இயக்கமான காங்கிரஸ் கட்சி சின்ன அண்ணாமலை என்னும் 21 இளைஞரைக் கொண்டு தமிழ்ப் பண்ணை என்னும் பதிப்பகத்தைத் தொடங்கியது. அதன் நோக்கம் பக்தியைப் பரப்புவதாக மட்டுமே இருந்தது. இந்தத் தமிழ்ப் பண்ணைக்கு எதிராகத்தான் அண்ணா திராவிடப் பண்ணை என்ற பதிப்பக அமைப்பைத் தொடங்கினார். அதற்கு 21 இளைஞராக இருந்த முத்துகிருஷ்ணன் என்னும் இளைஞரைப் பணியில் அமர்த்தினார். தமிழ்ப் பண்ணையின் கருத்தியலுக்கு எதிரான கடவுள் மறுப்பு, பகுத்தறிவு சிந்தனை, தன்மானம் இயக்கம் குறித்த நூல்களை திராவிடப் பண்ணை வெளியிட்டது. பல நூல்களைத் திராவிடப் பண்ணை வெளியிட்டு, திராவிட கருத்தியல்கள் பாமர மனிதரையும் சென்றெட்டுவதற்கு பேருதவியாக இருந்தது. தமிழ்ப் பண்ணை நாமக்கல் கவிஞருக்குப் பாராட்டு விழா நடத்தி பணமுடிப்பு வழங்கியது. உடனே திராவிடப் பண்ணை சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்குப் பாராட்டு விழா நடத்தி பணமுடிப்பு வழங்கியது. பண்ணை முத்துகிருஷ்ணன் பதிப்பகம் தொடங்கி நடத்துவதற்குக் கட்சியிலிருந்து எந்த நிதி ஆதாரமும் கொடுக்கப்படவில்லை. முத்துகிருஷ்ணன் அவர்களின் சொந்த நிதியில் திராவிடவியல் கருத்தியலுக்காக திராவிடப் பண்ணை நடத்தப்பட்டது என்றால் பண்ணை முத்துகிருஷ்ணன் அவர்களின் உழைப்பை நாம் அவரின் நூற்றாண்டு விழாவில் போற்றவேண்டும்.
அண்ணா அவர்களின் எழுதிய ஆரியமாயை என்னும் நூலைத் திராவிடப் பண்ணை வெளியிட்டது. அந்த நூலை அன்றைய அரசு தடை செய்தது. ஆரியமாயை எழுதியதற்காக அண்ணா மீது அரசு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. 1950இல் வழங்கப்பட்ட வழக்கின் தீர்ப்பில், நூலை எழுதிய அண்ணாவுக்கு ரூ.750/- தண்டத்தொகை விதிக்கப்பட்டது. கட்டத் தவறினால் 6 மாதம் சிறை என்றும் நூலை வெளியிட்ட திராவிடப் பண்ணை முத்துகிருஷ்ணனுக்கு ரூ.500/- தண்டத்தொகை என்றும் அறிவிக்கப்பட்டது. அண்ணா தண்டத் தொகையைக் கட்ட மறுத்து சிறை சென்றார். அப்போது உடன் இருந்த முத்துகிருஷ்ணனிடம் தண்டத் தொகையைக் கட்டி, நீங்கள் பதிப்பு பணியைப் பாருங்கள் என்ற சொன்னதன் அடிப்படையில் முத்துகிருஷ்ணன் நீதிமன்றத்தில் தண்டத்தொகையை கட்டினார். இன்றைய நிலையில் முத்துகிருஷ்ணன் செலுத்திய தொகையின் மதிப்பு சுமார் 7.50 இலட்சமாகும். அண்ணாவின் நூல்கள் மட்டுமல்லாது, நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர், மதியாகன், சி.பி.சிற்றரசு, இராம.அரங்கண்ணல், தில்லை வில்லாளன், முரசொலி மாறன் ஆகியோர் எழுதிய நூல்களையும் வெளியிட்டார்.
திருச்சி மதுரை சாலையில் (பழைய இராஜா திரையரங்கம் எதிரில்) திராவிடப் பண்ணை அலுவலகம் இயங்கி வந்தது. 1952இல் மேலரண் சாலையில் உள்ள கிலோதார் தெருவில் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகத்திற்கு வருகை தராத திமுக மற்றும் திராவிட இயக்கத் தலைவர்கள் யாரும் இல்லை என்று துணிந்து கூறும் அளவிற்கு அனைவரும் வருகை தந்தனர். அண்ணா, நாவலர், பேராசிரியர், கலைஞர் போன்ற தலைவர்கள் வரும் வேளைகளில் பண்ணை முத்துகிருஷ்ணன் வீட்டிலிருந்தே உணவு கொண்டு செல்லப்பட்டு பரிமாறப்படும் என்ற வழக்கம் இருந்தது என்பதை நினைக்கும்போது முத்துகிருஷ்ணன் அவர்களின் கொள்கை உறுதி நம்மை சிலிர்க்கவைக்கின்றது. 1957இல் குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற கலைஞர் சில மாதங்கள் கழித்து திருச்சி பயணத்தை அறிவிக்கிறார். அப்போது செய்தியாளர்கள் வினாவிற்குப் பதில் அளிக்கும்போது, திருச்சியில் பண்ணை வீட்டில்தான் தங்குவேன் என்று குறிப்பிட்டார். இந்தச் செய்தியைத் திரித்து ஒரு நாளிதழில், சட்டமன்ற உறுப்பினராகி 6 மாதங்கள்கூட ஆகாத கருணாநிதி பண்ணை வீடு வாங்குமளவிற்குச் சொத்து சேர்த்துவிட்டார் என்று செய்தி வெளியிட்டது. இதைப் பார்த்த கலைஞர், பண்ணை வீடு என்பது எங்கள் திராவிடப் பண்ணை முத்துகிருஷ்ணன் வீட்டைத்தான் குறிப்பிட்டேன் என்று சொல்லி பொய்யான செய்தியை மறுத்தார் என்பதில் முத்துகிருஷ்ணன் அவர்கள் தலைவர்கள் மீது கொண்டிருந்த பேரன்பைப் புரிந்துகொள்ளமுடிகின்றது.
அண்ணாவுக்கு மிகவும் நெருக்கமாக பண்ணை முத்துகிருஷ்ணன் அண்ணா ஆட்சிக்கு வந்தபோது, அவர் எந்தப் பதவியையும் பெற்றுக்கொள்ளவில்லை. அண்ணா மறைவுக்குப் பின் கலைஞர் ஆட்சியிலும் பண்ணை முத்துகிருஷ்ணன் எந்தப் பதவியும் பெற்றுக்கொள்ளாமல் திராவிட இயக்க உணர்வாளராக, பற்றாளராகவே இறுதிவரை வாழ்ந்தார். ஒருங்கிணைந்த திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் கழகத்தினரிடையே மோதம், கசப்புணர்ச்சி இருந்தால் கழகத்தின் சார்பில் அந்தப் பகுதிகளுக்குச் சென்று கட்சியினரை சாமாதனம் செய்யும் தூதுவராகவே இருந்து வந்தார். 21.07.1990ஆம் ஆண்டு திராவிடப் பண்ணை முத்துகிருஷ்ணன் இயற்கை எய்தினார். டிஜிட்டல் தமிழ் நூல்கள் என்னும் இணைய தளத்தில் திராவிடப் பண்ணை வெளியிட்ட அண்ணா எழுதிய ஆரியமாயை 7 இலட்சம் பேருக்கு மேல் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்ற தகவல் மூலம் திராவிடப் பண்ணை முத்துகிருஷ்ணன் இறந்தும், திராவிட இயக்கக் கருத்தியல் சிந்தனையில் உயிரோட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை அவரின் நூற்றாண்டுக்குக் கிடைத்த சிறப்பாகும்” என்று உரையை நிறைவு செய்தார்.
அங்குசம் சமூக நல அறக்கட்டளையின் தலைவர் ஜெடிஆர் சிறப்புரையாளர் இராச இளங்கோவன் அவர்களுக்கு நூல்களைப் பரிசாக வழங்கினார். இவ் விழாவில் பண்ணை முத்துகிருஷ்ணன் அவர்களின் பெயரன் கௌதம் மற்றும் முத்து தீபக் பங்கேற்றுச் சிறப்பித்தனர். முத்து தீபக் திமுக இளைஞர் அணியில் மாவட்டப் பொறுப்பில் உள்ளார். மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் உதவியாளர் அருண் அவர்களும் வருகை தந்திருந்தார். திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள் பலரும் பண்ணை முத்துகிருஷ்ணன் அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்வுக்கு வருகை தந்து, பண்ணை முத்துகிருஷ்ணன் அவர்களுக்குப் புகழ் சேர்த்தனர் என்பது வெறும் புகழ்ச்சி அல்ல. உண்மையே.
— ஆதவன்