தோற்றாலும் போராடி தோற்க வேண்டும்… ஜெ உதவியாளர் பூங்குன்றன்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனின் பதிவு, அம்மாவிடம் நான் பணியாற்றிய காலத்தில் சென்னை மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவர் மனு கொடுக்க வந்திருந்தார். என்னை சந்தித்து ரத்ததான குழு அமைக்க கல்லூரியில் அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள், அதற்கு சிபாரிசு செய்ய வேண்டும் என்று அறிவுப்பூர்வமாக, அதே நேரத்தில் ஆணித்தரமாக பேசினார். நீங்கள் யார்! என்று கேட்டேன். எனது பெயர் பொன்னரசு, கள்ளக்குறிச்சி முன்னாள் ஒன்றியக் கழகச் செயலாளர் சுப்பிரமணியன் அவர்களின் மகன் என்றார். அதன்பிறகு அவர் மீது மதிப்பு கூடியது. பாசம் பிறந்தது. அவருக்கு தேவையான உதவிகளை அன்பிற்கினிய தளவாய் சுந்தரம், வேணுகோபால் ஆகியோரிடம் சொல்லி செய்து கொடுத்தேன்.
நேற்று நண்பர் பொன்னரசு அலைபேசியில் என்னை அழைத்தார். கள்ளக்குறிச்சி நகர மன்றத் தேர்தலில் 7வது வார்டில் போட்டியிடப் போவதாக அப்பா முடிவெடுத்து இருக்கிறார் என்றார். நான் சூழ்நிலை எப்படி இருக்கிறது, செலவுக்கு பணம் இருக்கிறதா? என்று கேட்டேன். கஷ்டம்தான் அண்ணா! நானும் சொன்னேன். ஆனால், அப்பா நிற்பதில் உறுதியாக இருக்கிறார். என்னடா! ஜெயிக்கிறதுக்கு மட்டும் தான் கட்சியா? தோற்றாலும் கட்சி தான். கட்சி வேஷ்டி கட்டுவது எங்கள் கௌரவம் என்றாராம். நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். அதன் பிறகு என் உள்ளமும் போராடுவது சிறந்தது என்பதை உணர்ந்தது. அவர் சொன்ன வார்த்தைகள், ‘தோற்றாலும் நாம் போராடித் தோற்க வேண்டும். ஒவ்வொருவரும் கழகத்திற்காக நாம் இருக்கிறோம் என்பதைக் காட்ட வேண்டும். சின்ன தேர்தல், பெரிய தேர்தல் என்று பார்க்க கூடாது. நாம் வெற்றி பெற்றாக வேண்டும்’. அடடா! என்ன ஆழமான வார்த்தைகள், கட்சி என் உயிர் என்ற உணர்வு, ஆரம்பகாலக் கட்சிக்காரனுக்கு இன்றும் அப்படியேதான் இருக்கிறது. புதிதாக வந்தவர்களுக்கும் அந்த உணர்வு இதைப் படிக்கும் போது வரவேண்டும். கழகத்தை உயிராய் நேசிக்கும் உங்களை வணங்குகிறேன் தந்தையே!
உடன்பிறப்பே! உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு நில்லுங்கள். நிற்கத் தயங்காதீர்கள். தகுதியானவர்களை நிறுத்துங்கள். கடினமாக உழையுங்கள். யாரோ, வெற்றி பெற நாம் ஏன் உழைக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். உங்களுக்கும் நிற்கும் வாய்ப்பு உருவாகலாம். வெற்றி பெறுவது நம் கட்சி, நம் மானம், நம் கௌரவம் என்று நினைத்துப் போராடுங்கள். வெற்றி நம் வசமாகும்.
போராடி வெற்றி பெறுவதிலும், எதிர்க்கட்சியான நிலையில் வெற்றி பெறுவதிலும் தான் வரலாறு படைக்க முடியும். கள்ளக்குறிச்சி முன்னாள் ஒன்றியக் கழகச் செயலாளர் மரியாதைக்குரிய சுப்பிரமணியன் அவர்களின் மனைவிக்கு வாய்ப்பு வழங்கப்படவும், அவர் தேர்தலில் மகத்தான வெற்றி பெறவும் இதய தெய்வங்கள் ஆசி துணை நிற்கட்டும். தேர்தலில் நிற்கும் உடன்பிறப்புகள் வெற்றி பெற என் வாழ்த்துகள். என்றும் அம்மா வழியில், உங்கள் ஜெ பூங்குன்றன் சங்கரலிங்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.