இந்த பொழப்புக்கு … வேற வேலை பார்க்கலாம் !
ஒரு முன்னணி யூடுயூப் சேனலில் இருந்து பேசினார்கள். “சார் நீங்க மூத்த பத்திரிகையாளர், முப்பது வருடத்துக்கும் மேலான அனுபவம் இருக்கிறது. சினிமா நட்சத்திரங்களில் பெரும்பாலானவர்களை தனிப்பட்ட முறையில் உங்களுக்குத் தெரியும். ஆனால், உங்கள் யூடியூப் சேனல் (cinemaoliperukki) வியூவர்ஸ் சில ஆயிரங்களைத் தாண்டவில்லை.
எங்கள் சேனலில் வந்து பேசுங்கள், ஒரு எபிசோடுக்கு 3 ஆயிரம் ரூபாய் தருகிறோம். ஒரே நாளில் ஐந்து எபிசோடுக்கான பதிவை முடித்து விடுவோம்” என்றார்கள்.
தற்போது கொஞ்சம் பணத்தட்டுப்பாடு இருப்பதால் நானும் சரி என்று ஒப்புக்கொண்டேன். அடுத்த நாள் பேசினார்கள் “சார் நடிகை அர்ச்சனா உங்களது தோழி தானே … அவர்களைப் பற்றி பேசுவீர்களா” என்றார்கள்.
”ஓ… தாராளமாக பேசலாமே! தேசிய விருதுகளை வென்றவர். சாவித்திரிக்குப் பிறகு, நடிப்பில் உச்சம் தொட்டவர். என் உடன்பிறவா சகோதரி அவரைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் நான் பேசுவேன்” என்றேன்.
ஒளிப்பதிவுக்கான நாளும் குறிக்கப்பட்டது. அந்த நாளில் அவர்கள் ஸ்டூடியோவுக்கு சென்றேன். புல் மேக்கப்போடு ஒரு தொகுப்பாளர் அமர்ந்திருந்தார்.

முதல் கேள்வி, “அர்ச்சனா ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?” என்றார் தொகுப்பாளர்.
“எனக்குத் தெரிந்த வரையில் என் சகோதரிக்கு நடிப்புதான் எல்லாம். அதை தாண்டித்தான் மற்ற உறவுகள் எல்லாம்” என்றேன்.
அடுத்த கேள்வி “ஒரு பெண் அதுவும் ஒரு நடிகை எப்படி திருமணம் செய்து கொள்ளாமல் வாழ முடியும்? ” என்றார்.
அவர்களது வியாபார நோக்கம் எனக்குப் புரிந்தது. டக்கென்று என் சட்டைப் பையில் குத்தப்பட்டிருந்த மைக்கை எடுத்து வீசிவிட்டு ….
”இந்த மாதிரி பேட்டிகளுக்கு பொயில்வான் பொங்கநாதன் … பொய்யாரு கோபாலு மாதிரி ஆட்களைப் போய் பாருங்கள்” என்று கூறிவிட்டு முன்பணமாக கொடுத்த பத்தாயிரம் ரூபாயை தூக்கி எறிந்து விட்டு வந்து விட்டேன்.
— மீரான் முகமது








Comments are closed, but trackbacks and pingbacks are open.