அந்த சமூக ஆர்வலர் வேறு யாரும் இல்லை நான் தான் ! யூடியூபர் சவுக்கு சங்கர் மீது புகார் !
அந்த சமூக ஆர்வலர் வேறு யாரும் இல்லை நான் தான்.
2012 ஆம் ஆண்டு இருக்கும். அப்போது தான் நான் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன். மதுராந்தகத்தில் அப்போது நான் வசித்த காலம். மதுராந்தகத்தை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்தும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களில் இருந்தும் பல பெண்கள் என்னிடம் போட்டித்தேர்வுக்கு படிக்க வருவர். இதில் திருமணத்திற்கு பின்பும் பெண்கள் படிக்க வருவர்.
சில சமயங்களில் குடித்து விட்டு வந்து பயிற்சி மையத்தின் வெளியே நின்று கத்தி ஆர்பாட்டம் செய்து அவர்களை கூனிக்குறுக வைத்த கணவர்களும் உண்டு. தன் பிள்ளைக்கு தாய்ப்பால் கொடுத்து கொண்டே பாடத்தை கவனித்த பெண்களும் உண்டு. தன் பிள்ளையை ஒரு வருடம் முழுக்க தன் தோளில் சாய்த்துக்கொண்டே தினசரி பயிற்சி மையத்தில் வைக்கப்படும் தேர்வுகளை எழுதி குரூப் 2 அதிகாரியானார் என்னுடைய ஒரு மாணவி . கணவனை இழந்த கைம்பெண்கள் பலர் என்னுடைய வகுப்பறையில் பயின்று VAO-க்களாகவும், குரூப் IV அதிகாரிகளாகவும் வெற்றிபெற்று எழுந்து ஓடியதை கண்முன்னே கண்டு ரசித்தவள் நான்.
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு பயிற்சி பெற வந்த பெண் ஆசிரியர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே 2013 ஆம் ஆண்டு அதிக மதிப்பெண் பெற்று அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்டனர். சப்-இன்ஸ்பெக்டர் பயிற்சிக்கும், இரண்டாம் நிலை காவலராகவும் பயிற்சி பெற்று இன்றும் என்னுடைய மாணவர்கள் காவல் துறையில் களம்கண்டு கொண்டிருக்கின்றனர். பல மாவட்டங்களில் இருந்து வந்து என்னிடம் பயிற்சி பெற்று காவல் துறையில் பணியாற்றும் காவலர்களில் பெண்கள் மிகவும் சிறப்பானவர்கள்.
அதிலும் 2019 ஆம் ஆண்டு J1 சைதாப்பேட்டை காவல் நிலையம் அனைத்து மகளிர் W20 அப்போதைய இன்ஸ்பெக்டர் யுவராணி அவர்கள் என்னை அலைபேசியில் அழைத்து குடும்பவன் முறையில் சிக்கித்தவிக்கும் இளம் பெண் ஒருவர் புகார் அளிக்க வந்துள்ளார். பார்ப்பதற்கு நல்ல உயரம், டிப்ளமோ படித்திருக்கிறாள். ஒரே ஒரு கைக்குழந்தை. வேறு ஜாதியில் திருமணம். பெற்றோர்களின் அரவணைப்பு இல்லை. கணவனுக்கு இல்லாத பழக்கம் இல்லை. கஞ்சா, குடி என எங்கு விழுந்து கிடக்கிறான் என்றே தெரியாது. அவளை இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு தயார் செய்ய வைக்க முடியுமா என கேட்டார். அந்தப் பெண்ணுக்கு இலவசமாக பயிற்சி அளித்தேன்.
ஒரு வருடம் தினமும் பயிற்சி எடுத்துக்கொண்டார். மிகவும் நன்றாக படித்தார். அந்த பேட்ச்சில் பயின்ற அனைத்து மாணவர்களையும் விட கெட்டிக்காரி. அதிக மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெற்று காவலர் ஆனார். அன்று அவளின் எதிர்காலமும் அவளின் பெண் குழந்தையின் எதிகாலமும் உறுதி செய்யப்பட்டது. அதே ஆண்டு திருநங்கைகளின் நம்பிக்கையான கலைமாமணி சுதா அக்கா என்னிடம் ஒரு திருநங்கையை அழைத்து வந்தார்.. மிகவும் வைராக்கியமானவர். இலவச பயிற்சியை தவிர உதவி வேண்டுமா என்று கேட்டால் கூட நிராகரித்து விடுவார்.
வகுப்பறை வழிகாட்டுதல் மற்றும் பிஸிக்கல் ட்ரைனிங் பெற்று நன்கு படித்து 2020 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்று மாண்புமிகு முதல்வர் அவர்களின் கையால் பணி நியமன ஆணையை பெற்று இன்று காவல்துறையில் பணியாற்றி கொண்டிருக்கும் 12 திருநங்கைகளில் அவரும் ஒருவர். நான் காவல்துறையில் வழங்கப்படும் ஆனந்தம் (மனநல பயிற்சி) வகுப்புகள் எடுத்துளேன். 1000 கணக்கான பெண் காவலர்களுக்கு பயிற்சி அளித்துள்ளேன்.
கடும் சுமைகளுக்கு நடுவில் தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காகவும் தன்னை பார்த்து வளரும் தன் கிராமத்தை சேர்ந்த இளம் தலைமுறையினர் அக்கா காவல் துறையில் சேர்ந்து வேலை பார்க்கின்றாள். நாமும் படித்து அரசு வேலைக்கு போக வேண்டும் என்று இவர்களை பின்தொடர்ந்து வருவார்கள். குறிப்பாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து வந்து படித்து தேர்வில் தேர்ச்சி பெற்று காவல்துறையில் சேர்ந்து அதிகாரிகளாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். வாங்கும் சம்பளத்தை வீட்டிற்கு அனுப்பிவிட்டு கால்கடுக்க மக்களுக்காக வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இக்கட்டான காலகட்டத்தில் ஃபால்- இன் என்றால் போதும், பணிக்கு வந்து விடுவார்கள். இவர்களுக்கு நல்ல நாள், பண்டிகை எல்லாம் நம்மை போல இல்லை. அனைவரும் நன்கு படித்தவர்களும் கூட. அவர்கள் ஏன் உயர் அதிகாரிகளை அட்ஜஸ்ட் செய்து ப்ரோமோஷன் வாங்க வேண்டும்.
இரண்டாம் நிலை காவலர்கள் SI எக்ஸாம் எழுதலாம், அல்லது டிபார்ட்மென்ட் எக்ஸாம் எழுதி அடுத்த நிலைக்கு செல்லலாம். சவுக்கு சங்கர் சொல்வதை கேட்டுக்கொண்டிருக்கும் பிற்போக்கு எண்ணம் கொண்ட குடும்பங்களில் இருந்து வரும் பெண்களை படிக்க அனுப்பவே யோசிக்கக்கூடும்.
24 மணி நேரம் டியூட்டி, நைட் டியூட்டி என வேலை பார்க்கும் பெண் காவலர்கள் அனைவரின் வீட்டிலும் நிம்மதி இருக்கா என கேட்டுப்பாருங்கள். தன் பிள்ளைகள் வீட்டுக்கு வரும் நேரத்தில் பக்கத்தில் இருந்து உணவு பரிமாறி அவர்களை அரவணைக்கும் நேரத்தில் வெளியில் பந்தோபஸ்து பார்த்துக்கொண்டே தன் பிள்ளைகளை நினைத்து உருகும் தாய்மார்கள் பலர் காவல்துறையில் உள்ளனர்.
சவுக்கு சங்கர் தன் பத்திரிகை சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தவில்லை. ஆளும் கட்சியின் மீது இருக்கும் வன்மத்தை கக்குவதற்கு அனைத்து வீட்டு பெண்களையும் வாய்க்கு வந்தப்படி எல்லாம் தரக்குறைவாக எல்லை மீறி பேசிக்கொண்டே இருந்தார்.
என்னை பொறுத்த வரையில் சவுக்கு சங்கர் பல முதல் தலைமுறை பட்டதாரி பெண் பிள்ளைகளுக்கு எதிரி.இவர் பேச்சை கேட்கும் கணவர்களுக்கு சந்தேகம் கூட வரும். இவரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் சென்ற வாரமே புகார் அளித்திருந்தேன்.
ஒரு சமூக செயற்பாட்டாளராக இது என்னுடைய சமூக பொறுப்பும் கூட. போகிற போக்கில் பொத்தாம் பொதுவாக எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இன்றி பெண் சமூகம் மீது சுமத்தப்படும் இது போன்ற இழிவான கருத்துக்களை வெளியிடும் RedPix போன்ற இணைய ஊடகங்களுக்கு எதிராகவும் சட்டம் தன் கடமையை செய்யட்டும். நன்றி.
கல்யாணந்தி ச
உறுப்பினர், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம்,
தமிழ்நாடு அரசு. சமூக செயற்பாட்டாளர் | கல்வியாளர் | மனநல ஆலோசகர்.