நிகிதா சொன்ன அந்த “Dirty Animal” யார்? அஜித்தை கொன்றது தனிப்படையா? கூலிப்படையா ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அஜித்தை கொன்றது தனிப்படையா? கூலிப்படையா?

யார் இந்த நிக்கிதா? யார் அந்த “எக்ஸ் அதிகாரி”?

Sri Kumaran Mini HAll Trichy

சிவகங்கை அஜித்குமாரின் கொலையை எல்லோரும் கொட்டடிக் கொலை என்றே வகைப்படுத்துகிறார்கள். அஜித்தின் மரணத்திற்கு காரணமானவர்கள் காக்கிச் சட்டை அணிந்த காவலர்கள் என்பதாலேயே, இது காவல் நிலைய மரணமாகிவிடாது. தனிப்படை போலீசாரின் கஸ்டடியில் தம்பி அஜித்குமார் அனு அனுவாக எதிர்கொண்ட அந்த ரணம் மிகுந்த சித்திரவதைகளை ”லாக்கப் டெத்” என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கிவிடவும் முடியாது.

தனிப்படையா ? கூலிப்படையா?

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

சும்மா ஜெர்க் காட்ட … ஒரு கையை மட்டும் எடுக்க … ஆளை தூக்க … ஆள் அட்ரஸே இல்லாமல் ஆக்க … என ஒவ்வொன்றுக்கும் ஒரு ரேட் பேசி, பல்வேறு காரணங்களுக்காக பேட்டை ரவுடிகளால் அமர்த்தப்படும் “கூலிப்படை”களைப் போலவே, போலீசு உயர் அதிகாரிகள் தங்களது தனிப்பட்ட கேடான நோக்கத்திற்காக கீழ்நிலை காவலர்களை ஏவிய கொடுபாதக செயல்தான் அஜித்துக்கு நேர்ந்த கொடுந்துயரம். ”தனிப்படை போலீசு” என்ற பெயரும் அவர்களது ”காக்கிச் சீருடை” – இந்த இரண்டை தவிர வேறு என்ன வேறுபாடு சொல்லுங்கள்? மிளகாய்ப்பொடி உள்ளிட்ட மூன்றாம்தர சித்திரவதைகளையும் ”போலீசு விசாரணை முறை” என்ற வரையறைக்குள் சேர்க்கத்தான் வேண்டுமா, என்ன?

நிகிதா குடும்பத்தினர்
நிகிதா குடும்பத்தினர்

போலீஸ் நிலையத்தில் முறையான புகாரே வந்து சேராமல்; அவ்வாறு வந்ததாக சொல்லப்படும் புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர்.கூட பதிவு செய்யப்படாமல்; அவ்வளவு அவசரம் அவசரமாக தனிப்படை போலீசை அனுப்பி வைத்து விசாரிக்கும் அளவுக்கு என்ன முக்கியத்துவம் இந்த வழக்கில்? ”கூட்ட நெரிசலில் சிக்கி தோடு காணாமல் போய்விட்டது; செயினை பறித்துச் சென்றுவிட்டார்கள்” என்று போலீசில் புகார் கொடுக்கச் சென்ற பெண்களிடம் பேசி பாருங்கள். ”எங்கேயோ தொலைச்சிட்டு, எங்க உசிர எடுக்க வந்துட்டியா? போம்மா, ஐயா இல்லை அப்புறமா வா” என்று ஏட்டய்யாவால் துரத்திவிடப்பட்ட சம்பவங்களை நினைவுகூர்வார்கள். அது கால் அல்லது அரை பவுன் தோடு. இது ஒன்பதரை பவுன். பவுனின் அளவு கூடுதல் என்பதால் அல்ல, இந்த முக்கியத்துவம். அதிகார போதையில் ஆடிய ஆட்டத்தின் தவிர்க்கவியலாத விளைவுதான் இந்த சம்பவம்.

யார் அந்த ”எக்ஸ்” அதிகாரி?

இன்று, நேற்றல்ல. இது போலீசு துறையில் ஆண்டாண்டு காலம் இங்கொன்றும் அங்கொன்றுமாக நிகழும் ஒன்றுதான். சமீபத்தில், தனது நெருங்கிய தோழி கேட்டுக் கொண்டதற்கிணங்க அரசு வாகனத்தை அனுப்பி வைத்த விவகாரத்தில் சிக்கினார், ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராம். கிட்டத்தட்ட அதே பாணியில், பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் அந்த பெண்மணி ஒருவருக்காக, அரசு வாகனத்தோடு கூலிப்படையாக நால்வரையும் சேர்த்தே அனுப்பி வைத்திருக்கிறார் இன்னும் வெளிச்சத்துக்கு வராத அந்த “எக்ஸ்” அதிகாரி.

ஐ.ஏ.எஸ். அதிகாரியான பொன்னைய்யா உடன் நிகிதா அப்பா
ஐ.ஏ.எஸ். அதிகாரியான பொன்னைய்யா உடன் நிகிதா அப்பா

இந்த விவகாரத்தை தொடர்ந்து, ”சட்டப்பூர்வமல்லாத தனிப்படைகளை கலைத்துவிடுமாறு” உத்தரவு பிறப்பித்திருக்கிறார் டிஜிபி சங்கர்ஜிவால். ”பொதுமக்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும்; புகாரை பெற்றவுடன் சி.எஸ்.ஆர். அல்லது எஃப்.ஐ.ஆர். போட்டுவிட வேண்டும்; எடுத்தவுடன் லத்திகளை பயன்படுத்தக்கூடாது” என்பது உள்ளிட்டு பல்வேறு அறிவுரைகளை வழங்கியிருக்கிறார், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்.

தனிப்படைகள் என்பது போலீசு துறையில் அவசியமான ஒன்று. வழக்கமான ஸ்டேஷன் பணிகளோடு, தனிச்சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு விவகாரங்களையும் சேர்த்து கையாளுவது என்பது சாத்தியமில்லாதது. இதன் காரணமாகவே, அந்தந்த மாவட்டத்தில் கமிஷனர் மற்றும் எஸ்.பி. தலைமையில் அவர்களின் நேரடிப்பார்வையில் தனிப்படைகள் இயங்கி வருகின்றன. இது தவிர, அந்தந்த மாவட்டத்தில் நிகழும் தனிச்சிறப்பான குற்ற சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிப்பதற்கென்றே சிறப்பு தனிப்படைகளும் அமைக்கப்படுகின்றன. இந்த பின்னணியில், இதுபோன்ற தனிப்படை போலீசாரின் நோக்கத்தையே சிதைத்துவிட்டது, இந்த சம்பவம்.

மேல் அதிகாரிகள் சொல்லி தான் எங்கள் கணவர்கள் செய்தார்கள் தனிப்படை குடும்பத்தினர்.
மேல் அதிகாரிகள் சொல்லி தான் எங்கள் கணவர்கள் செய்தார்கள் தனிப்படை குடும்பத்தினர்.

மேல் அதிகாரி ”எதை சொன்னாலும்” செய்துவிடுவார்களா?

அடுத்து, மேல் அதிகாரிகள் சொன்னதால் செய்தார்கள். இதற்கு அவர்களை பொறுப்பாக்க முடியுமா? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. ”உயர் அதிகாரிகள் சொல்லித்தான் என் புருஷன் செஞ்சாரு. எங்களுக்கும் குடும்பம் இருக்கு.”னு சட்டம் பேசும் அந்த காவலர்களது மனைவிமார்களின் வலியும் வேதனையும் புரிந்துகொள்ளக்கூடியதுதான். அதேசமயம், இந்த இடத்தில், மேல் அதிகாரி ”எதை சொன்னாலும் செய்துவிடுவார்களா?” என்ற எதிர்க்கேள்வியைத்தான் முன்வைக்க வேண்டியிருக்கிறது.

அவரவர் தகுதி மட்டத்தில் அவருக்கு மேல் தகுதி நிலையிலுள்ள உயர் அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்; மறுப்பதற்கில்லை. ஆனால், அவை சட்டத்திற்குட்பட்டதாக அமைந்திருக்க வேண்டும் என்பதைக்கூட அறியாதவர்களா, அந்த ”அப்பாவி” காவலர்கள்? எஜமான் கண் சிமிட்டிய நொடியில் இலக்கை நோக்கி விருட்டென கிளம்பும் வேட்டை நாய்களைப் போலல்லவா, இந்த விவகாரத்தில் வீரியம் காட்டியிருக்கிறார்கள். அஜித் விவகாரத்தில் நிகழ்ந்திருப்பதை வெறுமனே சட்டவிரோதமானது என்பதாக தட்டையாக சொல்லிவிட முடியுமா? குடிக்கத் தண்ணீர் கேட்டும் தராமல் தங்கள் ஆத்திரம் தீர அடித்து துவைத்தவர்களை; கல்நெஞ்சக்காரர்களையும் கரைய வைக்கும் அளவுக்கு கொடுமைகளை அரங்கேற்றிய அந்த காவலர்களை, “அப்பாவிகள்” என்றோ, ”அய்யோ பாவம்” என்றோ பரிதாபம்தான் கொள்ள முடியுமா?

தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள்
தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள்

நீதிமன்றத்தின் அறச்சீற்றம் !

அப்பட்டமான அதிகார அத்துமீறலும், அதனால் ஒரு கொலையும் விழுந்த பிறகும்கூட, குற்றமிழைத்த காவலர்களையும் அதற்கு காரணமான போலீசு உயர் அதிகாரிகளையும் பாதுகாக்கும் நோக்கில், போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகளை நீதிமன்றமே போதுமான அளவுக்கு கண்டித்திருக்கிறது. கடிந்துரைத்திருக்கிறது. வழக்கு சி.பி.ஐ. வசம் மாற்றப்பட்டாலும், நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் விசாரணையை தொடர்ந்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

“போலீசு நிலையத்தில் எதுவுமே நடக்கவில்லை அதன் சிசிசிடி காட்சிப்பதிவுகள் இருக்கிறது. எல்லாம் நடந்தது, கோயிலின் பின்புறம் உள்ள மாட்டுத் தொழுவத்தில். அதன் காட்சிப்பதிவுகள் எதுவும் இல்லையே” என்று கேள்வி எழுப்பியது தொடங்கி, “இதனையே காரணம் காட்டி விடுதலை வாங்கி கொடுத்துவிடுவீர்கள். பின்னர் அதனை காரணம் காட்டி, துறைரீதியான நடவடிக்கையை நிறுத்திவிடுவீர்கள். இதற்கிடையில், பல ரிட் மனுக்களை போட்டு பெற வேண்டிய சர்வீஸ் உள்ளிட்ட பலன்களையும் பெற்றுவிடுவீர்கள். அப்படித்தானே?” என்ற நீதிபதியின் அறச்சீற்றம் தமிழகம் இதுவரை கண்டிராத நிகழ்வு.

நிகிதா - nikitha
நிகிதா – nikitha

மிக முக்கியமாக, இந்த வழக்கு விவகாரத்தில் அஜித் மீது ஏவப்பட்ட அம்புகள் சிக்கியிருக்கிறது. அந்த அம்புகளை ஏவியவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. சம்பந்தபட்ட டி.எஸ்.பி. சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். எஸ்.பி. காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். இந்த கொந்தளிப்பான சூழலில், இதைக்கூட செய்யாது போனால், கடும் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும் என்பதற்காக முன்னெடுக்கப்படும் கண்துடைப்பு நடவடிக்கைகள் இவை. ஏ.டி.ஜி.பி. ஜெயராம் விவகாரத்தில் நிகழ்ந்ததைப் போல, இந்த விவகாரத்தில் தனிப்படைக்கு இந்த தனிச்சிறப்பான பணியை செய்யச் சொல்லி உத்தரவு பிறப்பித்த; அதுவும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யாமலேயே; லோக்கல் போலீசுக்குக்கூட தகவல் சொல்லாமலேயே; அவ்வளவு ரகசியமாகவும் அவ்வளவு அவசரம் அவசரமாகவும் செய்ய சொல்லி நிர்ப்பந்தித்த  அந்த ”அதிகாரம் மிக்க அதிகாரி” யார்? இந்த விவகாரத்தின் சூத்திரதாரியான, நிக்கிதா இன்னும் ஏன் போலீசு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படவில்லை? என்பதுதான் மையமான கேள்வியாக  முன் எழுகிறது.

Flats in Trichy for Sale

கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளான அஜித்குமார்
கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளான அஜித்குமார்

நடந்த விவகாரமே, வேறு :

அன்று நடந்த விவகாரமே வேறு என்கிறார்கள். போலீசார் சொல்வதைப் போல, சம்பவம் நடைபெறவில்லை என்கிறார்கள் சிலர். நிகிதா, தன் தாயாருடன் அந்த கோயிலுக்கு சென்ற சமயத்தில், அஜித்துதான் அவர்களை அணுகியிருக்கிறார். விஷேச நாளான அன்று, காலதாமதமின்றி குறுக்கு வழியில் விரைவாக கூட்டிச்சென்று சாமி தரிசனம் செய்து அனுப்பி வைக்க ரூபாய் 500 கேட்டிருக்கிறார். அவ்வளவு தர முடியாது, வேண்டுமானால் 50 ரூபாய் தருகிறேன் என்றிருக்கிறார், நிக்கிதா. இது இருவருக்கிடையிலான வாக்குவாதமாகியிருக்கிறது. ஒரு கட்டத்தில், அந்த கோயிலின் நிர்வாக அதிகாரியிடம் முறையிட்டிருக்கிறார். அவர்களும் அஜித்குமாரை திட்டியிருக்கிறார்கள். பதிலுக்கு, அதிகாரிகள் சென்ற பிறகு நிக்கித்தாவை திட்டியிருக்கிறார், அஜித். அப்போது, பணத்தை தூக்கி வீசியதாகவும் சொல்லப்படுகிறது. இருவர்களுக்கிடையில் நடைபெற்ற வாக்குவாதத்தை அங்கிருந்த வியாபாரிகள் பார்த்திருக்கிறார்கள். இந்த பின்னணியில்தான், இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்கிறார்கள்.

சீட்டிங் குடும்பம் :

நிக்கித்தாவின் தந்தை ஜெயவேல், ஓய்வுபெற்ற உதவி கலெக்டர். தாயாரும் ஓய்வுபெற்ற அரசு உயர் அதிகாரி. நிக்கித்தா, திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர். சகோதரர் கவியரசு (எ) வைபவ் சரண் கவி. அண்ணி சுகதேவி. இந்த ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் எதிராக, 2011 இலேயே ”420 கேஸ்” பதிவாகியிருக்கிறது. மதுரை – திருமங்கலம் தாலுகா, போலீசு நிலையத்தில், கடந்த 10.05.2011 அன்று பதிவான 128/11 என்ற எண் கொண்ட எஃப்.ஐ.ஆரின் படி, மேற்படி குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே அக்யூஸ்டுகள். ஏ1 சிவகாசி அம்மாள். மதுரையைச் சேர்ந்த ராஜாங்கம், அவரது மகன் தெய்வம், மற்றும் அவர்களது உறவினர் வினோத்குமார் ஆகியோர் மூவரும் சேர்ந்து கொடுத்த புகாரில் பதிவான வழக்கு அது. அப்போது துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமான அதிகாரியை வைத்து அரசு வேலை வாங்கித் தருவதாக, இலட்சக் கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு வேலையும் வாங்கித்தராமல் பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றிவிட்டார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு.

அப்போது, மதுரை எஸ்.பி.யாக அஸ்ராகார்க் இருந்த சமயத்தில் பதிவான வழக்கு. அந்த வழக்கில் மொத்தக் குடும்பமும் சிறைக்கு சென்றிருக்கிறது. இதே பாணியில் பலரை ஏமாற்றியதாகவும் தற்போது பலர் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டி வருகிறார்கள். செக்காணூரணியை சேர்ந்த செல்வம் என்பவரும் இதே பாணியில் ஏமாந்ததாக தற்போது, திருமங்கலம் உதவி ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறார். “தாலி கட்டிட்டு ஓடி போயிட்டு வரதட்சணை கேஸ் போடுறதுதான் நிக்கிதாவுக்கு வேலை”… என்பதாக, அவரால் பாதிக்கப்பட்ட திருமாறன் என்பவர் பகிரங்கமாக ஊடகங்களுக்கு பேட்டியளித்திருக்கிறார்.

நிகிதாவின் கார்
நிகிதாவின் கார்

யார் இந்த நிக்கிதா?

கல்லூரி பேராரிசியை என்றாலும், பக்தியில் அதிக ஈடுபாடு கொண்டவர் நிக்கிதா. இதுவரை திருமணம் செய்து கொள்ளாதவர் என்பதாக சொல்லிக் கொள்கிறார். அடுத்தடுத்து, மூன்று திருமணங்கள் நடந்தும் அவை தோல்வியில் முடிந்தது என்கிறார்கள். நிக்கித்தாவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய மேலதிக விவரங்கள் நமக்கு அவசியமற்றவை.

அப்போதைய துணை முதல்வரை தெரியும் என்று சீட்டிங்கில் ஈடுபட்டது முதல், தற்போது அவரே முதல்வராக இருக்கும் நிலையில் தலைமை செயலகத்திலிருந்து ஒரு அதிகாரியின் தலையீடு இருக்கும் வரையில் செல்வாக்காக இருக்கும் நிக்கித்தாவை எல்லோரும் திமுகவின் ஆதரவாளர் என்பதாகவே முத்திரை குத்த முயல்கிறார்கள். இதனை சாக்கிட்டு, ஆளும் திமுக அரசுக்கு எதிரான அவதூறுகளை பரப்புகிறார்கள். ஆனால், உண்மையில் நிக்கித்தா, பக்கா பி.ஜே.பி. அவரது முகநூல் பதிவுகளே, இதற்கு எடுப்பான சாட்சி.

நிகிதாவின் ஹீரோ அண்ணாமலை தான்
நிகிதாவின் ஹீரோ அண்ணாமலை தான்

நெற்றி நிறைய விபூதி பூசிக்கொண்டு; வயது முதிர்ந்த தாயாரை வீல் சேரில் வைத்துக்கொண்டு கோயில் கோயிலாக அவர் வழிபட்டு வந்ததை குறை சொல்வதற்கில்லை. அந்த பக்திதான், பாஜகவின் அடையாளமாகவும் மாறியிருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற முருக மாநாட்டில், தாயாருடன் கலந்து கொண்டிருக்கிறார். கடந்த 2024, டிச-15அன்று சென்னை கலைவாணர் அரங்கில் அண்ணாமலை பங்கேற்ற பாஜக நிகழ்வு ஒன்றில், நேரடியாக பங்கேற்றிருக்கிறார். அண்ணாமலையின் பராக்கிரமங்களை பல்வேறு பதிவுகளில் பேசியிருக்கிறார். ஊறுகாய் மாமி என்று நிர்மலா சீதாராமனை வசைபாடுபவர்களை சாடி, பதிலுக்கு ”டோப்பா முடி வைத்துக் கொண்டு திரிபவர்” என்று தற்போதைய முதல்வரை நேரடியாக சாடி பதிவிட்டிருக்கிறார். இன்று, நேற்றல்ல கடந்த ஐந்தாண்டு கால சோஷியல் மீடியா பதிவுகளின் சாரம் இது.

அவசியமற்ற பதிவுகள் எதுவும் இடம்பெற்றிராத வகையில், அவ்வளவு கவனமாக பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு வந்திருக்கிறார். நிக்கித்தாவை பற்றி புரிந்து கொள்ளவும்; அவரது மன ஓட்டங்களை அறிந்து கொள்ளவும் அவரது நிலைத்தகவல்களே போதுமான சான்றாவணங்களாக அமைந்திருக்கின்றன. வளர்ப்பு நாயின் மீது பாசம் பொழிந்திருக்கிறார். ரெஸ்ட்டாரண்டுகளை நாடிச்சென்று உணவருந்துவதில் ஆர்வம் கொண்டிருக்கிறார். வயதான காலத்தில் தாயை உடன் வைத்து பராமரித்து வந்திருக்கிறார். அவர் எங்குச் சென்றாலும் தாயையும் சில நேரங்களில் வீட்டு நாயையும் உடன் அழைத்துச் செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

நிகிதாவும் பாட்டியும்
நிகிதாவும் பாட்டியும்

முதிர்கன்னிகளாக வாழ நேரிடும் பெண்ணின் வலியை, அவர்களின் வேதனையை, அவர்களை நோக்கி இந்த சமூகம் வீசும் கேள்விக் கணைகளை, அதனால் அவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை அவ்வளவு நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார். முற்போக்கான பெண்ணியவாதியின் பார்வையில் அவற்றை விமர்சன ரீதியில் அணுகியிருக்கிறார்.

தனிமையில் வாடுவதையும்; தந்தையின் பாசத்திற்காக ஏங்குவதையும்; பிறரின் அன்பை எதிர்நோக்கியிருப்பதையும்; அவர் எதிர்பார்த்த அன்பு கிடைக்காத தருணங்களையும் போலியான நட்புகளையும் அவை தந்த வலிகளையும் நுட்பமாக பதிவு செய்திருக்கிறார். அவரது மனநிலையை பிரதிபலிக்கும் கண்ணாடியாகவே  திகழ்கிறது, அவரது முகநூல் பதிவுகள் அத்தனையும்.

போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படுவாரா, நிக்கிதா?

இந்த பின்புலத்திலிருந்துதான், ஜூன் 27 அன்று மாலை 6.58 மணிக்கு பதிவாகியிருக்கிறது, அந்த பதிவு. “அடுத்தவருக்காக சுயத்தை இழப்பதைவிட, சுயத்திற்காக சுயமரியாதைக்காக, அடுத்தவரை இழக்கலாம்” என்கிறது அந்தப்பதிவு. அஜித்குமாருடன் நிக்கித்தாவுக்கு வாக்குவாதம் ஏற்பட்ட அதே நாளின் பிற்பகலில் வெளியாகியிருக்கிறது, அந்தப்பதிவு.

நிகிதா சொல்லும் அந்த Dirty animal யார் ?
நிகிதா சொல்லும் அந்த Dirty animal யார் ?

அதற்கு அடுத்தநாள் ஜூன் 28 அன்று காலை 11.29 க்கு “Remember to wash your hands after touching a dirty animal” என்பதாக பதிவிட்டிருப்பதிலிருந்து, யாரை ” dirty animal” என்பதாக குறிப்பிடுகிறார், என்ற கேள்வி எழுகிறது.

இதனை தொடர்ந்து, ஜூன்28 அன்று 11.50-க்கு பதிவிட்ட நிலைத்தகவல், ஹிட்லரின் தோளில் ஒருவர் கை வைக்கிறார். திரும்பிப் பார்க்காமலேயே சொல்லுங்கள் நேதாஜி என்கிறார் ஹிட்லர். எப்படி, தோளில் கை வைத்தது நேதாஜிதான் என்கிறார் என்ற ஆச்சர்யம் அவரை சுற்றியிருப்பவர்களுக்கு ஏற்படுகிறது. அதற்கு, “நேதாஜியைத் தவிர வேறு யார் என் மீது கை வைக்க முடியும்” என்று ஹிட்லர் சொல்வதாக முடிகிறது அந்த வீடியோ வடிவிலான நிலைத்தகவல்.

நிறைவாக, அதேநாளில் “ உன் மதிப்பு உன்னை சார்ந்தது மட்டுமல்ல. உன்னை சுற்றியிருப்பவர்களை வைத்து தீர்மானிக்கப்படுகிறது” என்பதாக பதிவிடுகிறார். இவையெல்லாம், அஜித்குமாருடன் தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களின் தொடர்ச்சியாக அவருக்கு ஏற்பட்ட மனநிலையின் வெளிப்பாடாக ஏன் அமைந்திருக்கக்கூடாது? என்ற ஐயப்பாட்டை, கேள்வியை நம் முன் எழுப்புகிறது.

எது எப்படியோ? அந்தக் குறிப்பான கோயிலில், அந்தக் குறிப்பான சம்பவம் நிகழ்ந்ததாக சொல்லப்படும் நாளில், அந்தக் குறிப்பான நேரத்தில் நிக்கித்தா யாரையெல்லாம் தொடர்புகொண்டார்? அவர் எங்கெல்லாம் பயணித்தார்? என்பதையெல்லாம் போலீசார் ஆய்வுக்குட்படுத்தி, அஜித்குமாரை விசாரிக்க தனிப்படையை ஏவிய அந்த அதிகாரம் மிக்க ”அதிகாரி” யார் என்பதை கண்டறிந்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தக்கத் தண்டனை பெற்றுத்தருவது ஒன்றே, அஜித்குமாருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும். எதிர்காலத்தில், இன்னொரு அஜித்குமாரை நாம் இழக்காமல் இருப்பதற்கான பரிகாரமாகவும் அது அமையும். பார்ப்போமே, என்னதான் நடக்கிறதென்று?

–  ஆதிரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.