1 இலட்சம் திருட்டு – சிசிடிவி ஆதாரத்துடன் புகார் – அலைக்கழிக்கும் போலிஸ் !
சிசிடிவி ஆதாரத்துடன் புகார் கொடுத்தும், பணம் பறிகொடுத்த பெண்ணை 2 வாரங்களாக மனு ரசீது கூட கொடுக்காமல் அலைக்கழிக்கும் துறையூர் போலீசார்.
திருச்சி மாவட்டம், கண்ணனூர் கால்நடை மருத்துவமனையில் உதவியாளராக வேலை பார்த்து வருபவர் அமுதவள்ளி. இவர் கடந்த 8ந் தேதி பகல்12 மணியளவில் நாகநல்லூரில் கூடுதல் பணி நிமித்தமாக வேலை பார்த்து விட்டு துறையூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கியில் ரூ .2 லட்சம் தனது கணக்கில் எடுத்துள்ளார்.
அதில் ஒருவருக்கு தர வேண்டிய ஐம்பதாயிரத்தை வங்கியிலேயே வைத்து அவரிடம் கொடுத்து விட்டு மீதமுள்ள பணத்தை தனது ஸ்கூட்டி சீட் கவரில் மஞ்சள் பையில் சுருட்டி வைத்து வண்டியில் வந்தவர் முசிறி பிரிவு ரோடு அருகில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றுள்ளார். சாப்பிட்டு திரும்பியதும் தனது ஸ்கூட்டியின் சீட் கவரின் உள்ளே இருந்த பேனா உள்ளிட்ட பொருட்கள் கீழே விழுந்து கிடந்ததைப் பார்த்து சந்தேகமடைந்த அமுதவள்ளி, சீட் லாக்கை திறந்து உள்ளே பார்த்த போது, பணம் வைத்திருந்த மஞ்சள் பை கிழிந்த நிலையில் உள்ளே இருந்த பணம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது பற்றி கடையில் உள்ளவர்களிடம் கூறினார்.
கடையின் வெளியில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா மூலம் பதிவான காட்சிகளைப் பார்த்த போது , அவர் வண்டிக்கு அருகில் மூன்று மர்ம நபர்கள் முகக் கவசம் மற்றும் தலையில் தொப்பியுடன் கடையை நோட்டமிட்டவாறு ஒருவன் நிற்க, மற்ற இருவரில் ஒருவன் மிக நேர்த்தியாக ஸ்கூட்டி கவரின் ஓரத்தில் கையை விட்டு லாவகமாக பணத்தை எடுத்து தனது பேண்ட் பாக்கெட்டில் செருகிக் கொண்டு அங்கிருந்து மூவரும் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
சிசிடிவி பதிவுகளை எடுத்துக் கொண்ட அமுதவள்ளி துறையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளரான சந்திரகாந்த் என்பவரிடம் புகார் மனுவும் அளித்தார். புகார் மனுவும், சிசிடிவி பதிவுக் காட்சிகளையும் பெற்றுக் கொண்ட எஸ்ஐ , விசாரிக்கிறேன் , இரண்டு நாள் கழித்து வருமாறு கூறி அனுப்பியுள்ளார். இரண்டு நாள் கழித்து காவல் நிலையம் சென்ற அமுதவள்ளி ,தான் அளித்த புகார் பற்றி விளக்கம் கேட்டுள்ளார். அங்குள்ள போலீசார் நாளை வாருங்கள் எனச் சொல்லவே , எஸ்ஐ சந்திரகாந்தின் செல்போனில் தொடர்பு கொண்ட அமுதவள்ளி விளக்கம் கேட்க, அவரோ இப்போதெல்லாம் விசாரிக்க முடியாது, உங்களை யார் பணத்தை ஸ்கூட்டரில் வைக்கச் சொன்னது, எனச் சொல்லி போனை கட் செய்துள்ளார்.
இதேபோல் தொடர்ந்து அடிக்கடி பணம் பறிகொடுத்தது சம்மந்தமாக காவல் நிலையத்திற்கு போவதும், வருவதுமாக கடந்த 15 நாட்களாக கொடுத்த புகாரின் மேல் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்து வருகிறார்கள் . கொடுத்த புகாருக்கு ஆதாரமாக மனு ரசீதாவது கொடுங்க எனக் கேட்டதற்கு மனு ரசீதை வைத்து நீங்க என்ன செய்யப் போறீங்க, என ஏளனத்துடன் எஸ் ஐ உள்ளிட்ட போலீசார் கூறியுள்ளனர். மேலும் இப்புகார் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர்.
இதனால் பணத்தை பறிகொடுத்து, போலீசார் அலட்சியம் காட்டிய செயலால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ள அமுதவள்ளி , சிசிடிவி ஆதாரத்துடன் புகார் அளித்தும் மனுரசீது கூட தராமல் அலைக்கழிக்கின்றார்கள் என வேதனையுடன் கூறினார். மேலும் இதே போல் துறையூர் ஆலமரத்து பஸ் டாப் அருகில் உள்ள வங்கியில் ஒண்ணே கால் லட்ச ரூபாயுடன் வந்த முதியவரிடம் மர்ம நபர்கள் சிலர்பணத்தை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர் இது குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. துறையூர் பகுதிகளில் பணம் பறிப்பு ,நகை திருட்டு சம்பவங்கள் நடந்து அது பற்றி பாதிக்கப்பட்ட நபர்கள் துறையூர் போலீஸ் ஸ்டேஷனில் ஆதாரங்களோடு புகார் தர வரும் போது அதனை போலீசார் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருவதால், குற்றவாளிகள் தாங்கள் செய்து வரும் குற்ற சம்பவங்கள் மீது உடனடி நடவடிக்கை இல்லை என்ற நினைப்பில் பட்டப்பகலிலேயே பணம் பறிப்பு சம்பவங்களைப் பகிரங்கமாக அரங்கேற்றி வருகின்றனர்.
மேலும் தற்போது துறையூர் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தினந்தோறும் இரவு நேரங்களை விட பகலிலேயே நகை, பணம் திருட்டு போகும் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களை ஏதேனும் காரணம் சொல்லி வழக்கு பதியாமலேயே அலைக்கழித்து வரும் நிகழ்வுகள் துறையூர் காவல் நிலையத்தில் மட்டும் தான் நடைபெறுகிறது எனவும், யாராக இருந்தாலும் அவர்களின் புகார் மனுவைப் பெற்று ,காலதாமதப்படுத்தாமல் குறைந்த பட்சம் மனு ரசீதாவது கொடுத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என துறையூர் போலீசாருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஜோஸ்