அடுத்தடுத்து விமான பழுது பகீர் – திருச்சியில் குழுந்தைகளுடன் தவிக்கும் 160 மலேசிய பயணிகள் !
சமீபத்தில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழகத்தில் இருந்து பல நூறுபேர் விமானம் மூலம் சென்று விழாவினை சிறப்பித்து , என்ஜாய் பண்ணி திரும்பினர். அதே நேரத்தில் மலேசியாவில் உள்ளவர்கள் பல்வேறு வேலைகளுக்காக தமிழகத்திற்கு வந்தவர்கள் திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு விமானம் மூலம் செல்ல முடியாமல் கடந்த இரண்டு நாட்களாக தவித்து கொண்டு இருப்பதும் இது மறக்கமுடியாத பயணமாக மாறும் என்று எதிர்பார்த்து இருக்க மாட்டார்…
இனி சம்பவத்திற்கு வருவோம்..
ஏர் மெலின்டோ என்ற விமானம் மலேசியா கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று 07.01.2026 இரவு 9 – 30 மணிக்கு வந்து, திருச்சியிலிருந்து மலேசியா செல்வதற்காக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை இரவு 10- 30 மணிக்கு ஏற்றிச் செல்வதாக இருந்த நிலையில், விமானத்தில் இயந்திர கோளாறு காரணமாக பழுதானதால் 2 மணி நேரம் தாமதமாக இரவு 12.30 மணிக்கு புறப்படும் என மலேசியா செல்வதற்காக காத்திருந்த பயணிகளுக்கு இ.மெயில் மூலமாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 2 மணி நேரம் தாமதமாக திருச்சி ஏர்போர்ட் சென்ற பயணிகள் மேலும் ஒரு மணி நேரம் தாமதமாக வழக்கமான பரிசோதனைகள் முடிந்து, நள்ளிரவு இரவு 1-40 மணிக்கு பயணிகள் கொண்டு சென்ற பொருட்கள் எல்லாம் விமானத்தில் ஏற்றிய பிறகு விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது மலேசியாவுக்கு செல்லாது என அறிவித்துள்ளனர்.
மீண்டும் விமானத்திலிருந்து பயணிகளின் பொருட்களை இமிகிரேஷன் முடித்து அவர்களிடமே ஒப்படைத்து வேறு விமானம் மலேசியாவில் இருந்து வரவேண்டும் அதில் தான் நீங்கள் அனைவரும் மலேசியா செல்ல வேண்டும் என அதிகாரிகள் சொன்னதால் தொடர்ந்து மலேசியா செல்வதில் தடங்கல் ஏற்பட்டதால் பயணிகள் அனைவரும் அதிருப்தி அடைந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டதால் பயணிகள் அனைவரையும் இன்று 08.01.2026 விடியற்காலை 5 மணி அளவில் தனியார் ஹோட்டல்களில் கொண்டு வந்து தங்க வைத்துள்ளனர்.
மலேசியா செல்லக்கூடிய சுமார் 160 க்கும் மேற்பட்ட பயணிகளை மூன்று ஓட்டல்களில் பிரித்து தங்க வைத்துள்ளனர். இன்று இரவுக்குள் அனைவரையும் மலேசியாவிற்கு அனுப்பி விடுவோம் என்று உத்தரவாதம் கொடுத்துள்ளனர்.

விமானம் கால அட்டவணைப்படி இன்று வரக்கூடிய மலேசியா விமானமும் வரவில்லை என கூறப்படுகிறது. மலேசியாவில் இருந்து வரக்கூடிய விமானத்தில் பழுதாகி இருக்கக்கூடிய விமானத்திற்கு அந்த விமானத்தில் ஸ்பேர் பார்ட்ஸ் வருகிறது என பயணிகளிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பழுதான விமானம் சரி செய்யப்பட்டு இரண்டு விமானமும் மலேசியா செல்ல இருப்பதாக தகவல் கூறியுள்ளனர் இந்நிலையில் தற்போது மலேசியாவிலிருந்து வரக்கூடிய விமானமும் திருச்சி வருவதற்கு காலதாமதம் ஆகும் என கூறியுள்ளனர்.
இரவு 7:00 மணிக்கு ஹோட்டலில் இருந்து விமான நிலையத்திற்கு வரச் சொன்ன அதிகாரிகள், அந்த விமானம் எத்தனை மணிக்கு திருச்சி வரும் என தெரியாது என அதிகாரிகள் பயணிகளிடம் தெரிவித்துள்ள நிலையில், குழந்தைகளுடன் மலேசியா செல்ல விருந்த பயணிகளுக்கு உணவு கொடுப்பதற்கு கூட அதிகாரிகள் எவ்வித ஏற்பாடும் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
ஏர்லைன்ஸ் நிறுவனம் பயணிகளை அலைக்கழிப்பதோடு சரியான நேரத்திற்கு உணவு கூட வழங்காமல் பசி பட்டினியுடன் குழந்தைகளை வைத்துக்கொண்டு மலேசியா செல்லக்கூடிய பயணிகள் அவதியுறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை அருகே உள்ள தனியார் ஓட்டலில் சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள வெவ்வேறு ஹோட்டல்களில் மலேசியா செல்ல இருக்கும் பயணிகள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடும் குளிரில் குழந்தைகளுடன்சரியான உணவு கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
அடுத்தடுத்து விமானங்களில் பழுது ஏற்படுவது என்பது பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது; சமீபத்தில் ஏர் இந்தியா விமானங்களில் இன்ஜின் கோளாறு, லேண்டிங் கியர் பழுது போன்ற பிரச்சனைகளால் அவசரமாக தரையிறக்கப்படும் சம்பவங்கள் நடந்துள்ளன, இதனால் பயணிகள் பீதியடைந்துள்ளனர், விமானப் பயணத்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.
விமான பழுது குறித்த சமீபத்திய சம்பவங்கள்:
ஏர் இந்தியா விமானம் (சான் பிரான்சிஸ்கோ-மும்பை): இன்ஜின் பழுது காரணமாக கொல்கத்தாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது; பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: நடுவானில் லேண்டிங் கியர் மற்றும் டயரில் பழுது ஏற்பட்டதால் கொச்சியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
சென்னையில் நிகழ்வு: ஒரே நாளில் இரண்டு விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டன, இதனால் பயணிகள் அச்சமடைந்தனர்.
பயணிகள் மத்தியில் கவலை:
இந்தத் தொடர்ச்சியான தொழில்நுட்பக் கோளாறுகள், விமானப் பயணத்தின் பாதுகாப்பு குறித்து பயணிகளிடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி வருகிறது.
விமான நிறுவனங்கள் தகுந்த பராமரிப்பு செய்யாததால் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
– அருண்








Comments are closed, but trackbacks and pingbacks are open.