2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் திமுக – அதிமுக 200 தொகுதிகள் யாருக்கு வசப்படும்? புள்ளிவரங்கள் கூறுவது என்ன?
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு இன்னும் முழுமையாக 15 மாதங்கள் உள்ளன என்றாலும் ஊடகங்களில் யாருக்கு வெற்றி என்று புள்ளிவிவரங்களை வைத்து அலச ஆரம்பித்துவிட்டன. புதிதாக தமிழ்நாடு வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய் ஆட்சியைக் கைப்பற்றுவாரா? என்னும் ஊடகங்களில் நடைபெறும் விவாதங்கள் காதைக் கிழித்துக்கொண்டிருக்கின்றன. இதுபோதாது என்று திமுக தலைவரும் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் “2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் இலக்கு 200” என்று அறிவிக்க, அதை துணை முதல் அமைச்சர் உதயநிதியும் வழிமொழிந்து இளைஞர் அணி கூட்டத்தில் உரையாற்ற, இந்தச் செய்தி சமூகவலை தளங்களில் வைரல் ஆனது.
டிசம்பர் 6ஆம் நாள் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில் பேசிய தவெக தலைவர் நடிகர் விஜய்,“திமுக 200 தொகுதிகளில் வெற்றிபெறுவோமென இறுமாறுப்புடன் சொல்கிறார்கள். மக்கள் அதை மைனஸ் செய்வார்கள்” என்று பேச, திமுக மக்களவைத் தலைவரும், மகளிரணித் தலைவர் கனிமாழி நடிகர் விஜய்க்குப் பதில் சொல்லும்போது,“திமுக இறுமாப்புடன்தான் கூறுகின்றது வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களில் வெற்றிபெறுவோம்” என்று சூடாக பதில் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு-பொதுக்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,“200 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்று திமுக இறுமாப்போடு கூறிவருகின்றது. அதிமுக ஆட்சியில் மக்களுக்குச் செய்த நன்மைகளுக்காகவும், திமுக வழங்கிய உறுதிமொழியைக்கூட நிறைவேற்றவில்லை என்பதால், மக்கள் அதிமுகவுக்கு 200 தொகுதிகளை வழங்குவார்கள் என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக இரு பெரிய கட்சிகளும் 200 தொகுதிகளைப் பெறுவோம் என்றால் சட்டமன்றத்தில் உள்ள மொத்த இடங்கள் 500 இல்லையே 234 இடங்கள்தானே உள்ளது என்று சமூகவலை தளங்களில் பதிவுகள் வைரல் ஆகி வருகின்றது. இதனைத் தொடர்ந்து, கடந்த 22ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற திமுக செயற்குழுவில் பேசிய தலைவர் மு.க.ஸ்டாலின் 200 தொகுதியே நம் இலக்கு என்று கூற, பின்னர் பேசிய திமுக இளைஞர்அணி உதயநிதி “217 தொகுதிகளில் நமக்கு வெற்றி உறுதியாக்கப்பட்டுள்ளது. அதற்கு இளைஞர்அணி உழைக்கவேண்டும்” என்று கூறினார்.
2026இல் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு 200 இடங்களைப் பெறும் சாத்தியம் உள்ளது என்பதை அங்குசம் ஆராய முற்பட்டது. இதற்கான தரவுகளாக 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகள் பட்டியலிடப்பட்டன. அடுத்து 2024ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற 39 மக்களவைத் தொகுதிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகளை 234 சட்டமன்றத் தொகுதிகளில் பெற்ற வாக்குகளாக மாற்றி பட்டியலிடப்பட்டன. இதன் அடிப்படையில் யாருக்கு 200 தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளன என்பதை பின்வரும் முடிவுகளின் வழியாக அறியலாம்.
2019 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் மற்றும் சதவீதம்
திமுக கூட்டணி – 2,27,899,020 – 53.29%
(திமுக+காங்+சிபிஜ+சிபிஎம்+விசிக+மதிமுக+இயூமுலீ+மமக)
அதிமுக கூட்டணி – 1,33,07,139 – 31.05%
(அதிமுக+பாஜக+பாமக+தமாக)
- ••••
2021 சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் மற்றும் சதவீதம்
திமுக கூட்டணி – 2,09,82,088 – 45.38%
(திமுக+காங்+சிபிஜ+சிபிஎம்+விசிக+மதிமுக+இயூமுலீ+மமக)
அதிமுக கூட்டணி – 1,83,63,499 – 39.71%
(அதிமுக+பாஜக+பாமக+தமாக)
- ••••
2024 மக்களவை தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் மற்றும் சதவீதம்
திமுக கூட்டணி – 2,03,82,215 – 46.97‘%
(திமுக+காங்+சிபிஜ+சிபிஎம்+விசிக+மதிமுக+இயூமுலீ+மமக)
அதிமுக கூட்டணி – 1,00,04,245 – 23.05%
(அதிமுக+தேமுதிக+புதிய தமிழகம்)
பாஜக கூட்டணி – 79,07,341 – 18.28%
(பாஜக+தேமுதிக+புநீக+இஜக+மமுக)
நாம் தமிழர் கட்சி – 35,60,485 – 8,20%
(கூட்டணி இல்லை)
இந்தப் புள்ளிவிவரங்கள் அடிப்படையில், கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வாக்குகளையும், 2024 மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளையும் ஒப்பிடும்போது திமுக 6% வாக்குகள் குறைவாகவே பெற்றுள்ளது. அதிமுக 2019 சட்டமன்ற தேர்தலோடு 2024 மக்களவை தேர்தலோடு ஒப்பிடும்போது 1% வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளது உண்மைதான். போட்டியிட்ட இடங்களோடு ஒப்பிட்டு பார்க்கும்போது அதிமுகவுக்கு 10% அளவுக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகின்றது. 2021 சட்டமன்றத் தேர்தலோடு 2024 மக்களவைத் தேர்தலை ஒப்பிட்டு பார்க்கும்போது திமுக 2% வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றுள்ளது என்பது உண்மையே.
மேலும், 39 தொகுதிகளிலும் திமுக வெற்றிப்பெற்றுள்ளது. திமுக தர்மபுரியில் குறைந்த வாக்குகளில் பாஜக கூட்டணி கட்சியான பாமவை வெற்றிகொண்டது. திமுக கூட்டணியான காங்கிரஸ் விருதுநகரில் குறைந்த வாக்குகளில் அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிகவை வெற்றி கொண்டது. அதிமுக திமுக கூட்டணிக்கு கடுமையானப் போட்டியைக் கொடுத்த இரு மக்களவைத் தொகுதிகள் 1. கள்ளக்குறிச்சி 2. சிதம்பரம் ஆகும். மற்ற இடங்களில் அதிமுக கடுமையான போட்டியைத் திமுகவுக்குக் கொடுக்கவில்லை.
200 சட்டமன்றத் தொகுதிகளைப் பெறுவோம் என்று கூறும் அதிமுக, நடந்து முடிந்த மக்களவை தொகுதியில் பெற்ற வாக்குகளைச் சட்டமன்ற வாரியாக பிரித்துப் பார்த்தால் அதிமுக 8 தொகுதிகளிலும் 2 தேமுதிகவும் என மொத்தம் 10 தொகுதிகளில் முன்னணி பெற்றுள்ளது.
13.விழுப்புரம் (076.திருக்கோயிலூர், 077.உளுந்தூர்பேட்டை)
15.சேலம் (086.எடப்பாடி)
16.நாமக்கல் (087.சங்கிரி, 095.பரமத்திவேலூர்)
17.ஈரோடு (097.குமாரபாளையம்)
27.சிதம்பரம் (149.அரியலூர், 150.ஜெயங்கொண்டம்)
34.விருதுநகர் (196.திருமங்கலம், 207.அருப்புக்கோட்டை)
200 தொகுதியில் வெற்றிபெறுவோம் என்று கூறும் அதிமுக கூட்டணி மக்களவைத் தேர்தலில் அதிமுக 7 தொகுதிகளிலும், கூட்டணியான தேமுதிக 2 இடங்களிலும் டெப்பாசிட்(6%) இழந்துள்ளது. (54 சட்டமன்றத் தொகுதிகள்)
அதிமுக – தென்சென்னை, வேலூர், தேனி, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி (7)
தேமுதிக – திருவள்ளூர், மத்திய சென்னை (2)
அதிமுக கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் டெப்பாசிட் இழந்ததோடு மட்டுமல்லாமல் 4ஆம் இடத்திற்குப் பரிதாபகரமாக தள்ளப்பட்டது. 3ஆம் இடத்திற்கு நாம் தமிழர் கட்சி முன்னேறியது என்ற கசப்பான உண்மையை அதிமுக உணரவேண்டும்.
அதிமுகவை 4ஆம் இடத்திற்கு நாம் தமிழர் கட்சி 12 சட்டமன்றத் தொகுதிகளில் தள்ளியுள்ளது. அதன் விவரம்:
35.இராமநாதபுரம் (183.அறந்தாங்கி, 209.பரமக்குடி, 210.திருவாடனை, 211.இராமநாதபுரம்)
36.தூத்துக்குடி (214.தூத்துக்குடி, 217.ஒட்டப்பிடாரம்)
38.திருநெல்வேலி (226.பாளையங்கோட்டை, 227.நாங்குநேரி)
39.கன்னியாகுமரி (231. குளச்சல், 232.பத்மநாபபுரம், 233. விளவங்கோடு 234.கிள்ளியூர்)
இதுமட்டுமல்லாமல் பாஜகவிடை குறைவான வாக்குகளைப் பெற்று அதிமுக 73 சட்டமன்றத் தொகுதிகளில் 3ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. 120 தொகுதிகளில் மட்டுமே திமுகவிற்கு அடுத்தப்படியாக அதிமுக 2ஆம் இடத்தைப் பெற்றுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல், மக்களவைத் தேர்தல் வாக்கு விவரங்களை வைத்துப் பார்க்கும்போது, திமுகவைவிட அதிகம் வாக்குகள் பெற்ற 10 தொகுதிகளில் வெற்றி உறுதி என்ற முடிவுக்கு வரலாம். 3இடம் பெற்ற 73 தொகுதிகள்+ 4இடம் பெற்ற 12 தொகுதிகள் என 85 தொகுதிகளில் அதிமுகவுக்கு உறுதியாக வெற்றி வாய்ப்பு இல்லை என்ற முடிவுக்கு வரலாம். அடுத்து அதிமுக 2இடம் பெற்றுள்ள 120 தொகுதிகளில் எத்தனை இடங்களைப் பெறப்போகின்றது என்பது அதிமுக அமைக்கும் மெகா கூட்டணி மற்றும் திமுக மீது மக்கள் கோபம் கொண்டிருந்தாலும் கணிசமான தொகுதிகளைப் பெறும் வாய்ப்புள்ளது. என்றாலும் 200 தொகுதிகளில் அதிமுகவோ மற்றும் அதன் கூட்டணி கட்சியோ வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அரிதினும் அரிதான செயலாக இருக்கும். அதிமுக கடுமையாக உழைக்கவேண்டும் என்பதைத்தான் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
திமுகவைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தலில் தொகுதி வாரியாக பெற்ற வாக்குகளை சட்டமன்ற வாரியாக மாற்றி பார்க்கும்போது 224 தொகுதிகளில் வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது என்பதேயே புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவரங்களில் கோயமுத்தூர் மக்களவைக்குட்பட்ட கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் பாஜக 1 இலட்சம் வாக்குகளைப் பெற்று 2ஆம் இடம் பெற்றுள்ளது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கவுண்டம்பாளையம் தொகுதியில் பாஜக கடுமையாக உழைத்தால் வெற்றிக் கனியைப் பறிக்கும் வாய்ப்பு உள்ளது.
ஆக, 2021 சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் வாங்கிய வாக்குகள், 2024 மக்களவைத் தேர்தலில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் என இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது திமுக 200 – 223 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் எடுத்த சர்வேயின்படி தவெக 6% வாக்குகளை 2026 சட்டமன்றத் தேர்தலில் பெறும் என்ற தகவலும் உள்ளது. தவெக சர்வேயின்படி 6% வாக்குகளைப் பெற்றாலும், 5 முனை போட்டியில் திமுக வரும் சட்டமன்றத் தேர்தலில் 200+ தொகுதிகளிலும் அதற்கும் மேலான தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்பதே இப்போதைய களநிலவரமாகவே உள்ளது. இந்தக் களநிலவரம் அதிமுக+பாஜகவின் செயல்பாடுகளால் ஓரளவு மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதும் மறுக்கமுடியாத உண்மையே.
— ஆதவன்.