திருவெறும்பூர் அருகே மளிகைக் கடை பெண்ணிடம் தாலிச் செயின் பறிப்பு
திருச்சி : திருவெறும்பூர் அருகே மளிகைக் கடை பெண்ணிடம் தாலிச் செயின் பறிப்பு
திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் மளிகை கடையில் இருந்த பெண்ணை கத்தியால் வெட்டிக் தாலி செயினை பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ராஜ வீதியை சேர்ந்தவர் ஸ்டீபன் சவரிமுத்து இவரது மனைவி எழிலரசி (38) இவர்களுக்கு சொந்தமான மளிகைக்கடை காட்டூர் அம்மன் நகர் 5வது தெருவில் மெயின் ரோட்டில் உள்ளது.
இந்த தெருவில் உள்ள மளிகை கடையில் ஸ்டீபன் சவரிமுத்து மதியம் சாப்பிட போனதால் எழிலரசி மட்டும் கடையில் தனியாக இருந்துள்ளார் .
சரியாக 4 மணியளவில் கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர் எழிலரசி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலி செயினைபறிக்க முயன்று உள்ளார். இதில் எழிலரசிக்கும் மர்மநபருக்கும் இடையே போராட்டம் நிகழ்ந்துள்ளது.
இதில் எழிலரசி தனது தாலி செயினை விடாமல் இழுத்து பிடித்ததால் திருடனும் எழிலரசி தாலி செயினை அறுத்ததில் கழுத்தில் காயம் ஏற்பட்டதோடு, தனது கைகளில் இருந்த கத்தியால் எழிலரசியின் கன்னத்தில் பலமாக கிழித்துள்ளான்.
இதனால் வலி தாங்க முடியாமல் சம்பவ இடத்திலேயே எழிலரசி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.
மயங்கி கிடந்த அவரை அங்கு வந்த பொதுமக்கள் காப்பாற்றி காட்டூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சை அளித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இந்த பகுதியில் உள்ள வீடுகளில் வீட்டின் உரிமையாளர்களிடம் கத்தி மற்றும் அருவாள் முனையில் வீட்டின் உரிமையாளர்களை மிரட்டி கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில் மீண்டும் அரங்கேறியுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பொதுமக்களிடம் பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.