நெருக்கடியான சூழல்களில் மன அழுத்தத்திற்கான மருந்தாக கலையும் இலக்கியமும் !
நெருக்கடியான சூழல்களில் மன அழுத்தத்திற்கான மருந்தாக கலையும் இலக்கியமும் அமையும்.
இதை நடைமுறையில் நமக்கு உணர்த்தியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவர் மீது மிகுந்த பற்று கொண்ட உடன்பிறப்புகள் நடத்தும் மதுராலயா நாட்டியப் பள்ளியின் 35ஆவது ஆண்டு நடன விழா நேற்று மாலை நடைபெற்றது. நாட்டியப் பள்ளியை நிர்வகிக்கும் திருமிகு.மதுமிதா பிரகாஷ் அவர்களும், இளைஞரணியின் அன்பு உடன்பிறப்பு ஆனந்த் அவர்களும் அழைத்திருந்ததால் சென்றேன். என் மீதான நம்பிக்கையில் பரிந்துரை செய்த தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் ஸ்ரீதரன் அவர்களையும் குறிப்பிட வேண்டும்.
மதுராலயா நிகழ்வில் 4 வயது முதல் 15 வயது வரையிலான இருபால் நடனக் கலைஞர்களின் அரங்கேற்றம். வழக்கம் போலவே பக்தி இசையில்தான் தொடங்கியது. ஆனாலும், தமிழிசை மூவர்களில் ஒருவரான அருணாசலக் கவிராயர் எழுதிய பாடலும், மகாகவி பாரதியின் பாடல்களும் இனிய தமிழை செவிக்கு விருந்தாக்கிய நிலையில், பாடலுக்கேற்ப ஒத்திசைவான இளந்தளிர்களின் நடனம் கண்களுக்கும் மனதுக்கும் இதமளித்தது. பாரதியாரின் பாஞ்சாலி சபதத்திலிருந்து ஒரு பகுதியை ஒரு சிறுமி மிக அருமையான நாட்டிய நாடகமாக அரங்கேற்றியது சிறப்பாக இருந்தது.
நிகழ்வில் பழம்பெரும் திரைப்பட இயக்குநர் ஏ.பி.நாகராஜன் அவர்களின் மகள் விஜயலட்சுமி முரளிதரன் அவர்களும் கலந்துகொண்டார். விழா நடந்தது அக்டோபர் 1, நவராத்திரி நாளில். ஏ.பி.நாகராஜன் அவர்களின் மாபெரும் வெற்றிப்படங்களில் ஒன்று, நவராத்திரி. நடிகர் திலகம் சிவாஜி ஒன்பது வேடங்களில் நவரசங்களை வெளிப்படுத்திய படம். நடிகர் திலகத்தின் பிறந்தநாளான அக்டோபர் 1 அன்று, மதுராலாயாவின் நிகழ்வில் நவரசத்தை வெளிப்படுத்தும் நடனங்கள் பரவசத்தை அளித்ததை மேடையில் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு அமைந்தது.
இயல்-இசை-நாட்டியம் எனும் முத்தமிழில் முதலில் உருவானது மூன்றாவது தமிழான நாட்டியம்தான் என்றும், மொழி பிறக்கும் முன்பே கைகளால் சைகை செய்யும் ‘அபிநயம்’ உருவாகிவிட்டது என்று முத்தமிழறிஞர் கலைஞர் அடிக்கடி சொன்ன உவமையை எடுத்துக்காட்டினேன்.
கலையை காலத்திற்கேற்ற வகையிலான கருவியாக மாற்றுவதுதான் தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பு என்பதற்கு உதாரணமாக, பாரதியாரின் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ எனும் கண்ணனின் குறும்புகளை விளக்கும் பாட்டின் மெட்டிலேயே புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், ‘தலைவாரி பூச்சூடி உன்னை’ என்ற பெண் கல்வியின் சிறப்பை விளக்கும் பாடலை இயற்றியிருப்பதை, இருமலால் ஒரு வாரமாக படாதபாடு படும், பாட்டுக்குப் பொருந்தாத என் குரலில் பாடிக் காட்டினேன்.
கலைத்திறனை வெளிப்படுத்திய சிறார்களுக்கு பரிசளித்துப் பாராட்டும் வாய்ப்பும் கிடைத்தது.
நேற்றைய மாலைப் பொழுது, எனக்கு நிம்மதியான நிமிடங்கள் என்பதைவிட, நிகழ்ச்சிக்கு போகும் போதும் வரும்போதும் மடியில் வைத்து பணி செய்த லேப்-டாப்புக்கு, நடன விழாவின் நேரம் நிச்சயம் நிம்மதியைத் தந்திருக்கும்.
— கோவி லெனின், மூத்த பத்திரிக்கையாளா்
Comments are closed, but trackbacks and pingbacks are open.