தமிழகத்தில் அடுத்தடுத்து 4 இளம் மருத்துவர்கள் மரணம் !
இளம் வயதில் 4 மருத்துவர்கள்,போதை/குடி/புகைப் பழக்கம் இல்லாதவர்கள் உயிரிழந்தது பேரதிர்ச்சியை
தமிழகத்தில் அடுத்தடுத்து 4 இளம் மருத்துவர்கள் மரணம் !
சமீபத்தில் தமிழகத்தில் இளம் வயதில் 4 மருத்துவர்கள்,போதை/குடி/புகைப் பழக்கம் இல்லாதவர்கள் உயிரிழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைப்பற்றி மருத்துவர் மரு.வீ.புகழேந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சுற்றுச் சூழல் ஆர்வலரும், கல்பாக்கம் அணு மின் நிலைய எதிர்ப்பு போராளியுமான மருத்துவர் புகழேந்தி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இத்தகைய சூழலில் இறப்பிற்கான காரணங்களைக் கண்டறிவது முக்கியமாகிறது. காரணங்களை அறிந்தால் மட்டுமே உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனை-தனுஷ்(பயிற்சி மருத்துவர்)-24 வயது, தஞ்சாவூர்-விஜய் சுரேஷ் கண்ணா-38 வயது-உதவிப் பேராசிரியர், திருச்சி-அரசு மருத்துவமனை-சதீஷ்குமார்-46 வயது-அறுவை சிகிச்சை நிபுணர், அப்பல்லோ-கௌரவ் காந்தி-41 வயது-இருதய அறுவை சிகிச்சை நிபுணர் நால்வரும் 2 நாட்களுக்குள் மரணித்துள்ளனர்.
இவர்களின் மரணத்திற்கு பணிச்சுமை காரணமா? எனும் கேள்வி எழுந்துள்ள நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சரோ,”இந்த மரணங்கள் அரிதான மரணங்கள் என கருத முடியாது; இச்சம்பவங்களை வைத்து அரசு மருத்துவர்களுக்கு பணிச்சுமை அதிகம் என கருத முடியாது” எனக் கூறியுள்ளது இறப்பிற்கான காரணங்களை கண்டறியாமல் அவர் பேசும் வார்த்தைகள் சரியா? என்ற கேள்வியை எழுப்புவதாக உள்ளது.
14 மணி நேர பணிச்சுமை இருந்தால் இருதயதுடிப்பு வழக்கமாக இருக்கும் 90க்கு பதில் 150 வரை செல்வது என்றும் அது நல்லதல்ல என்பதும் சில நிபுணர்களின் கருத்தாக உள்ளது. 14 மணி நேர பணிச்சுமை என்பது, “அழுத்தம்”காரணமாக கார்டிசோல் எனும் வேதிப்பொருள் அதிகம் சுரந்து பாதிப்பை ஏற்படுத்த முடியும் என சில மருத்துவ நிபுணர்கள் கூறுவது ஆராயத்தக்கது.
இருப்பினும் நால்வரின் இறப்பிற்கு மற்றுமொரு முக்கிய காரணம் இருக்க வாய்ப்புள்ளது என இருந்தாலும்,அது அதிகம் பேசப்படாமல் உள்ளது. அது கொரோனா தடுப்பூசி.
கொரோனா தடுப்பூசி காரணமாக இருதய அழற்சி(Myocarditis)ஏற்பட்டு இறப்பு நிகழும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளதால், அரசு இது குறித்தான ஒரு விரிவான ஆய்வை மேற்கொள்வது நல்லது.
கொரோனா பாதிப்பால் இருதய அழற்சி ஏற்படுவது,கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் அழற்சியை விட 7 மடங்கு அதிகம் என்றாலும்,கொரோனா தடுப்பூசியும் இளம் மருத்துவர்களின் இறப்பிற்கு காரணமாக இருக்க முடியும் என்பதால் அது குறித்து பிரேத பரிசோதனைகளும்/ஆய்வுகளும் செய்வது முக்கியமானது.
இங்கிலாந்தில் கொரோனாவிற்குப் பின் இறப்பு விகிதம் பல ஆயிரக் கணக்கில் அதிகமாகியுள்ளதால் கொரோனா தடுப்பூசியின் பங்கு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கும் சூழலில்,தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசியின் பங்கு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அரசின் ஆய்வில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவிற்குப் பின் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளதற்கு கொரோனா தடுப்பூசியும் காரணமாக இருக்க முடியும் என்பதை நான் தமிழக பொதுசுகாதாரத் துறைக்கு மின்னஞ்சல் அனுப்பிய போது,அதை கணக்கில் கொண்டு மேற்படி ஆய்வுகளை நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது நல்ல செய்தி. மருத்துவர்கள் மரணத்தில் காரணங்களை முறையாக கண்டறிந்து தடுக்கும் பணிகளை அரசு மேற்கொள்ள முன்வர வேண்டும்.
ஒரு உயிராக இருந்தாலும் தடுக்கக்கூடிய மரணங்களை தடுப்பது முக்கியமானது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியுமா?”, என்று மரு.வீ.புகழேந்தி தெரிவித்துள்ளார்.