ரோல்ஸ் ராய்ஸ் கார் ஓட்டி அசத்தும் 72 வயது பெண்மணி !
கேரளாவை சேர்ந்த 72 வயதான மணியம்மா என்ற பெண்மணி ஒருவர் துபாயில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறார்.
இவர் தனது சமூக வலைதளங்களில் இதுபோன்ற வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது வைரலான வீடியோவின்படி, கேரளா சேலை அணிந்து சொகுசு காரை ஓட்டுகிறார் அந்தப் பெண்மணி. தனது சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை அந்த வீடியோவில் காண்பிக்கிறார். பின்னர் உயர் ரக ரோல்ஸ் ராய்ஸ் காரை அவர் இயக்குகிறார். இவர் முன்பு டிரைவிங் ஸ்கூல் வைத்து நடத்தி வருவதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்து இருக்கின்றார். மேலும் அவரின் இன்ஸ்டாகிராம் பயோவின் படி, அவர் சொகுசு கார்கள் முதல் கனக ரக வாகனங்கள் வரை 11 வகையான வாகனங்களுக்கான உரிமங்களை வைத்துள்ளார்.

இவரின் ஓட்டுநர் பயணம் பல தசாப்தங்களுக்கு முன்பே தொடங்கி இருக்கிறது. இந்தியாவில் மிகக் குறைவாக பெண்கள் கார்கள் ஓட்டும் காலத்திலிருந்தே இவர் தனது திறன்களை வெளிப்படுத்தி வந்துள்ளார். 1978 ஆம் ஆண்டு கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் ஓட்டுநர் பயிற்சி பள்ளியைத் தொடங்கிய தனது பயணம் கணவரின் ஊக்கத்தால் படிப்படியாக கார்கள் மட்டும் அல்லாமல் கிரேன்கள், கனரக வாகனங்களை இயக்க கற்றுக் கொண்டுள்ளார். கணவரின் மறைவிற்குப் பின்னர் மணியம்மா தனது குடும்பத்திற்காக ஓட்டுநர் பள்ளியின் பொறுப்பை ஏற்று அதனை வழி நடத்தி வருகிறார். அவர் துபாயில் பாரம்பரிய உடை அணிந்து கார் ஓட்டும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் வயது என்பது வெறும் எண் தான் என்பதற்கு மணியம்மா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என பதிவிட்டு வருகின்றனர்.
— மு. குபேரன்