கோடிகள் புரளும் பார் கவுன்சில் தேர்தல் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

அரசு சட்டக் கல்லூரிகளுக்கும் மற்ற சட்டக் கல்லூரிகளுக்கும் சட்டக் கல்வியின் தரத்தில் வேறுபாடு இருக்கிறது. எந்தெந்த கல்லூரிகள் என்று நான் பெயர் சொல்ல விரும்பவில்லை. உங்களுக்கே புரியும்.

தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகம் துணைவேந்தர் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை உங்களால் நம்ப முடிகிறதா? அரசு சட்டக் கல்லூரிகளில் பணியாற்றும் பல ஆசிரியர்கள் தற்காலிக ஆசிரியர்களாக இருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி மிக மோசமான பிரச்சினை, சட்டக் கல்லூரிகள் அமைந்துள்ள இடம்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

 ‘துபாய்க்கு அருகில்’ சட்டக் கல்லூரி

புதுப்பாக்கத்தில் இன்னொரு சட்டக் கல்லூரி இருக்கிறது. முன்பு அந்தக் கல்லூரி உயர்நீதிமன்றத்திற்கு மிக அருகில் செயல்பட்டது. அங்கு படிக்கும் மாணவர்கள் நீதிமன்றத்திற்கு எளிதாகச் செல்ல வேண்டும்; நீதிமன்ற நடவடிக்கைகளை நேரடியாகப் பார்த்து அனுபவம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அது அங்கு இருந்தது. அந்தக் கல்லூரியை அங்கிருந்து முழுமையாக அகற்றிவிட்டு வேறு இடத்திற்குக் கொண்டு சென்றார்கள். நான் நகைச்சுவையாகச் சொல்வதுபோல, அது ‘துபாய்க்கு மிக அருகில்’ இருக்கிறது. புதுப்பாக்கத்தில் எங்கோ இருக்கிறது. அந்த இடத்தைச் சென்றடைவதே மிகவும் கடினம். எனவே, சட்டக் கல்வியின் தரம் மட்டுமல்ல; சட்டக் கல்லூரி அமைந்துள்ள இடமும் முக்கியமானது.

பார் கவுன்சிலின் பொறுப்பு என்ன?

அடுத்த முக்கியமான கட்டத்திற்கு வருகிறேன். இந்திய பார் கவுன்சில், தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் மற்றும் வழக்கறிஞர் சங்கங்கள். சட்டக் கல்வியையும் வழக்கறிஞர்களின் ஒழுக்கத்தையும் கண்காணிக்க வேண்டிய முக்கியமான பொறுப்பு, 1961-ன் வழக்கறிஞர்கள் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்திய பார் கவுன்சிலிடம் உள்ளது. ஆனால், இந்த அமைப்பின் இரட்டைப் பொறுப்பே அதன் மிகப்பெரிய பலவீனமாக மாறிவிட்டது.

1926-ஆம் ஆண்டு இந்திய பார் கவுன்சில்கள் சட்டத்தின் மூலம் மாகாண அளவில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, 1961-ஆம் ஆண்டு வழக்கறிஞர்கள் சட்டத்தின் மூலம் இந்திய பார் கவுன்சில் என்ற அகில இந்திய அமைப்பாக மாறியது.

கல்வித்தரம், வழக்கறிஞர் பதிவு, வழக்கறிஞர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை போன்றவற்றில் மாநில பார் கவுன்சில்கள், இந்திய பார் கவுன்சிலோடு இணைந்து செயல்பட வேண்டும். இதுதான் அந்தச் சட்டத்தின் கட்டமைப்பு.

வழக்கறிஞர்களால், வழக்கறிஞர்களுக்காக நடத்தப்படும் ஜனநாயக அமைப்புகள்தான் இந்திய பார் கவுன்சிலும், தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சிலும். ஆனால் இப்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது?

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

2030 வரை தேர்தல் இல்லாமல் பதவியா?

இந்திய பார் கவுன்சில் செயல்படும் விதம் குறித்தே மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. தேர்தல் நடத்தாமல் 2030 வரை பதவிக்காலத்தை நீட்டித்துக்கொள்ள முயற்சி நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. உச்சநீதிமன்றம் இதில் தலையிட்டு, தலைவர் அன்றாட நிர்வாகப் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது. இன்றைக்கு இந்திய பார் கவுன்சிலின் தலைவர் யார்? அவர் மாநிலங்களவை உறுப்பினராகவும், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவராகவும் இருக்கிறார். இதைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. ஒரே நபர் மாநிலங்களவை உறுப்பினராகவும் இந்திய பார் கவுன்சிலின் தலைவராகவும் இருக்கும்போது அவரிடமிருந்து எப்படி முழுமையான நடுநிலைமையை எதிர்பார்க்க முடியும்? அவருடைய விசுவாசம் எங்கே இருக்கும்? அவர் எந்தப் பக்கம் நிற்பார்?

பார் கவுன்சில்- வழக்கறிஞர் சங்க தேர்தல்கள்

மாநில பார் கவுன்சில் தேர்தலாகட்டும் அல்லது வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலாகட்டும், எவ்வளவு வெறித்தனமாகப் பிரசாரங்கள் நடக்கின்றன என்பதை எல்லோரும் அறிவார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் பல கோடி ரூபாய்கள் தண்ணீராகச் செலவழிக்கப்படுகின்றன. அண்மையில் நடந்த தேர்தலில்கூட இதை நாம் கண்கூடாகக் கண்டோம்.தேர்தல் பார்வையாளராகச் சென்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.என். பிரகாஷ், தான் கண்ட அந்த அருவருப்பான காட்சிகளை ஒரு கட்டுரையாகவே எழுதியுள்ளார்.

நாம் பொதுமக்களையும் அரசியல்வாதிகளையும் காவல்துறையினரையும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளையும் கேள்வி கேட்கிறோம். ஆனால், அவர்கள் நம்மைப் பார்த்துக் கேள்வி கேட்டால், நாம் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பதில் சொல்வது?

அரசியல் கட்சிகளைச் சார்ந்து பார் கவுன்சில் தேர்தலா?

அடுத்த பிரச்சினை, மாநில பார் கவுன்சில் மற்றும் இந்திய பார் கவுன்சில் நிர்வாகிகளுக்கான தேர்தல்களில் அரசியல் கட்சிகளின் சார்பு அதிகரித்து வருவது. அந்த அமைப்பில் ஒருவர் வகிக்கக்கூடிய மிக உயர்ந்த பதவி அது. அந்தப் பதவியை வகிப்பவர் ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கும்போது, ஒழுங்கு நடவடிக்கைகளை எப்படி மேற்கொள்ள முடியும்?

வழக்கறிஞர்களை உற்பத்தி செய்யும் ‘தொழிற்சாலை’

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இன்றைக்கு பார் கவுன்சில் பல்லாயிரக்கணக்கானவர்களை வழக்கறிஞர்களாகப் பதிவு செய்து கொண்டிருக்கிறது. ஒரே நேரத்தில் 1,000 பேர், 2,000 பேர், 3,000 பேர் என்று வழக்கறிஞர்களாகப் பதிவு செய்யப்படுகிறார்கள். ஒரு தொழிற்சாலையில் பொருட்களை உற்பத்தி செய்வதுபோல வழக்கறிஞர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

இளம் வழக்கறிஞர்களுக்கு யார் கற்றுத் தருவது?

இன்றைக்கு இளம் வழக்கறிஞர்களுக்குச் சட்ட நுணுக்கங்களைக் கற்றுத்தர மூத்த வழக்கறிஞர்களுக்கு நேரமே இல்லை. விருப்பமும் இல்லை. இதுதான் இன்று நாம் எதிர்கொள்ளும் மிகவும் சிக்கலான ஒரு சாபக்கேடு.

கல்லூரியில் மாணவர்கள் அரைகுறை சட்டக் கல்வியைப் பெறுகிறார்கள். தொழிலுக்கு வந்த பிறகாவது கற்றுக்கொள்ளலாம் என்றால், அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. இதுதான் இன்றைய அவலம்.

சட்டத் தொழிலின் அரசியல்மயமாக்கல்

அடுத்ததாக மிகவும் முக்கியமான, ஆபத்தான ஓர் அம்சத்திற்கு வருகிறேன்.அது அரசியல் நச்சுத்தன்மையும் நடுநிலைமையின் வீழ்ச்சியும். வழக்கறிஞர் தொழில் முழுமையாக அரசியல்மயமாகிக் கொண்டிருக்கிறது. இந்தக் கருத்தைக் கேட்டு நீங்கள் மிகவும் சங்கடப்படவும் செய்யலாம். ஆனால் உண்மையைச் சொல்வதற்காகத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.

வி.ஆர். கிருஷ்ண ஐயரை எடுத்துக்கொள்ளலாம். மோகன் குமாரமங்கலம், ரத்தினவேல் பாண்டியன் எனப் பலரை நாம் பார்த்திருக்கிறோம். அவர்கள் அரசியல் இயக்கங்களில் இருந்தாலும், பார் கவுன்சிலுக்கும் நீதித்துறைக்கும் செய்ய வேண்டிய கடமைகளில் அரசியலைக் கலக்கவில்லை.

ஆனால், இன்றைக்கு அரசியலுக்குள் நுழையத் துடிக்கும் சிலர், வழக்கறிஞர் தொழில் நமக்கு ஒரு பாதுகாப்புக் கவசம்; சமூகத்தில் ஒரு செல்வாக்கைக் கொடுக்கும் என்ற மலிவான எண்ணத்தோடு உள்ளே வருகிறார்கள்.

இந்தத் தொழில் எவ்வளவு தனித்துவமானதாக இருந்தாலும், இந்தத் தொழில் சட்டத்திற்கு அப்பாற்பட்டது அல்ல. நாம் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. நாம் அனைவரும் சட்டத்தின் ஆட்சிக்குக் கட்டுப்பட்டவர்கள்.

சட்டத் தொழிலின் நரம்புகளில் அரசியல் நஞ்சு

அரசியல் இன்று நம் சட்டத் தொழிலின் நரம்புகளில் நஞ்சாகப் பாய்ந்திருக்கிறது. வழக்கறிஞர் சங்கங்கள் முதல் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களில் வழக்காடும் மூத்த வழக்கறிஞர்கள் வரை பலர் இன்று தங்களுடைய அரசியல் கட்சிச் சார்பின் அடிப்படையிலேயே நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள்.

ஒரு வழக்கறிஞரின் முதன்மையான விசுவாசம் அரசியலமைப்புக்கும் நீதித்துறைக்கும் இருக்க வேண்டும். ஆனால் இன்று அரசியலுக்கும் நீதித்துறைக்கும் இடையே ஒரு நெருக்கடியோ அல்லது மோதலோ ஏற்படும்போது.. பல வழக்கறிஞர்கள் தயக்கமின்றித் தங்களுடைய அரசியல் கட்சிகளின் பக்கமே நிற்கிறார்கள்.

நடுநிலைமை என்பது முற்றிலும் செத்துப் போய்விடுமோ என்ற பயம் ஏற்படுகிறது.

ஒரு வழக்கறிஞர் சட்டத்தின் பக்கமும் நீதியின் பக்கமும் மட்டுமே நிற்க முடியும். இல்லையென்றால் நீங்கள் அரசியல்வாதியாகப் போய்விடுங்கள். இங்கே ஒரு கால், அங்கே ஒரு கால் வைத்துக்கொண்டு நீதித்துறைக்குத் துரோகம் செய்யாதீர்கள். அவ்வளவுதான்.

நீதிமன்ற புறக்கணிப்பு- வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம்

இந்த உண்மை எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதைக் காணாததுபோல இருக்கிறோம். வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தும், அரசியல் காரணங்களுக்காக உள்ளூர் வழக்கறிஞர் சங்கங்கள் அடிக்கடி நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடுகின்றன. நாட்டில் 5 கோடிக்கும் அதிகமாக வழக்குகள் தேங்கியிருக்கும் நிலைக்கு இதுவும் நேரடியாகப் பங்களிக்கிறது என்பது என்னுடைய கருத்து.

நீதித்துறை பொற்காலம்- பொதுநல வழக்கறிஞர்கள்

அடுத்ததாக மிகவும் முக்கியமான விஷயம். பொதுநல வழக்கறிஞர்கள் என்பவர்களே திடீரென்று இல்லாமல் போய்விட்டார்கள். அவர்களைக் காண முடியவில்லை. 1970 முதல் 1990 வரையிலான காலகட்டம் இந்திய நீதித்துறையின் பொற்காலமாக இருந்தது. சுற்றுச்சூழல் தொடர்பாக நாம் பெற்ற பல முக்கியமான தீர்ப்புகளுக்குப் பின்னால் எம்.சி. மேத்தாவின் பங்களிப்பு இருக்கிறது. அவரைப் போல இன்னும் பலர் இருந்தார்கள். அதேபோல நீதிபதி பகவதி காலத்தில் பொதுநல வழக்குகள் ஒரு முக்கியமான நீதித்துறை கருவியாக வளர்ந்தன.

(இந்திய வழக்கறிஞர்கள் மாநாட்டில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியது)

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.