செந்தில் பாலாஜி வைக்கும் செக் – இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா அதிமுக யாருக்கு ?
அதிமுகவில் உட்கட்சிப் பூசல் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஜோராக நடந்து வருகிறது. இந்த உட்கட்சி விவகாரத்தில் மிகப்பெரிய அளவில் அடிவாங்கியது சசிகலாவும், அவரது தரப்பும் தான். எடப்பாடி கையில் ஆட்சி அதிகாரம் இருந்தால் அப்போது எதுவும் செய்யமுடியவில்லை என்று சசிகலா தரப்பு அமைதியாக போய்விட்டது.
இந்த நிலையில் தற்போது எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சி கவிழ்ந்து திமுக ஆட்சியை பிடித்துள்ளது. இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ள சசிகலா தரப்பு தீவிரம் காட்டி வருகிறது. அதன் தொடக்கமே சசிகலாவின் தொலைபேசி உரையாடல், மேலும் தற்போது சசிகலா வெளியே பயணம் செய்வதையும் தொடங்கி அதிமுகவை முழுமையாக கைப்பற்றுவதற்கான முயற்சியை முன்னெடுத்து வருகிறார். அதேசமயம் தற்போது வெளியான டிவி விவாதங்களில் அனைவரும் ஒற்றுமையோடு இணைய வேண்டும் என்று கோரிக்கை முன்னெடுத்துள்ளார். மேலும் எடப்பாடியை ஒரு இடத்திலும் சசிகலா தாக்கிப் பேசவில்லை என்பது மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது.
இந்தநிலையில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்பு டெல்லியில் தற்போது முகாமிட்டு இருக்கிறது. இதைத்தொடர்ந்து அதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கப் போகிறது என்று மிகப் பெரிய குழப்பத்தில் அதிமுகவினரே உள்ளனர். அதிமுகவில் சசிகலா ஒன்றினை வாரா, அல்லது ஓபிஎஸ், சசிகலா ஒன்றிணைந்து அதிமுகவை கைப்பற்றுவார்களா, அல்லது இபிஎஸ் – ஓபிஎஸ், சசிகலாவை ஓரங்கட்டிவிட்டு கட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் முழுமையாக கொண்டு வருவாரா என்று அதிமுகவினரே தலைமையின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்று தலையைச் சொறிந்து வருகின்றனர்.
இப்படி அதிமுகவின் அடுத்த நடக்கப்போகும் உட்கட்சி விவகாரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரை திமுக பக்கம் இழுத்து, திமுகவின் தலைமையோடு தனது நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறார் செந்தில் பாலாஜி.
மேலும் தற்போது அதிமுகவின் எம்எல்ஏக்கள் பலரைத் தொடர்பு கொண்டு செந்தில் பாலாஜி பேசி வருகிறாராம். அதில் பலர் செந்தில் பாலாஜிக்கு சைகை காட்ட தொடங்கி இருக்கிறார்களாம். இதனால் அதிமுகவின் உட்கட்சி விவகாரம் முடிவுக்கு வருவதற்குள், பத்துக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் திமுக பக்கம் சென்று விடுவார்கள் என்று அதிமுக தலைமை அச்சத்தில் உள்ளது. செந்தில் பாலாஜி வைத்து திமுக மட்டும் முயற்சி எடுக்கிறதா என்றால் இல்லை என்றும், கூட்டணியாக இருந்து கொண்டே பாஜகவும் அதிமுகவின் எம்எல்ஏக்களை வளைத்துப்போட ஒருபக்கம் காய் நகர்த்தி வருவதாகவும் புலம்புகின்றனர் அதிமுகவின் மேல்மட்ட விசுவாசிகள்.