அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

1962-ல் அண்ணாவுக்கு…..2022-ல் ஸ்டாலினுக்கு…மனதில் படும்படி… ( திறந்த மடல்….)

0

திருச்சியில் அடகு நகையை விற்க

“1962ல் அண்ணா திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடுகிறேன் என்று அறிவித்ததைப் பொறுத்துக்கொள்ளமுடியாமல் ‘அண்ணா நீங்கள் ஒரு கோழை அக்கா வந்து கொடுக்கச் சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே?’ என்ற பாரதிதாசன் வரிகளைச் சுட்டிக்காட்டி அண்ணாவுக்கே கடிதம் எழுதியவர் தான் புலவர் முருகேசன். இவரின் கடிதக் கணைகளுக்குக் கலைஞர், வீரமணி, வைகோ என்று யாரும் தப்பவில்லை. மனதில் பட்டதை எழுதமாட்டார், மனதில்படும்படி எழுதுவார். அதுதான் புலவரின் இயல்பும் சிறப்பும்கூட. இன்னும் அவர் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்..இருப்பார்.

புலவர் க.முருகேசன் குறித்து, திருச்சி என்.செல்வேந்திரன் ஒரு விழாவில் பேசியது. அத்தகு பெரும் அரசியல் அறிஞர் நம் அங்குசம் செய்தி இதழின் வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ‘திறந்த மடல்’ ஒன்றை எழுதி நமக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

– ஆசிரியர்

இந்த வார JANUARY 15 - 21 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

திராவிடத்தின் இருப்பு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் தமிழ்நாட்டின் முதல் அமைச்சருக்கு, வணக்கம்.

2021ம் ஆண்டு மே திங்களில் தாங்கள் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகப் பொறுப் பேற்ற நிகழ்வில் ‘மு.க.ஸ்டாலின் என்னும் நான்’ என்று உங்களை நீங்கள் விளித்திருக்கலாம். ஆனால் வரலாற்றை உள்ளடக்கி ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்’ என்று சொல்லிய சில விநாடிகளில் முகத்தை உயர்த்தி, நேர் கொண்ட பார்வையால் அரங்கில் இருப்போரைப் பார்த்துவிட்டு மீண்டும் தலையைத் தாழ்த்தி ‘தமிழ்நாட்டின் முதல் அமைச்சராய்ப் பொறுப்பேற்கிறேன்’ என்று வரிகளை முடித்தபோது, தொலைக்காட்சியில் அந்த நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்த நான், ஒரு கணம் திகைத்து. பின்னர் மகிழ்ந்தேன்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

பொறுப்பேற்றவுடன் ‘திராவிடத்தின் இருப்பு’ என்று தங்களை அறிவித்துக் கொண்டதும், மத்திய அரசு, நடுவண் அரசு என்பதை ஒன்றிய அரசு என்று திருத்தி அழைத்து மக்கள் மத்தியில் நான் கலைஞரின் வாரிசு அல்ல.. பெரியார், அண்ணா, கலைஞர் இவர்களின் தொடர்ச்சியில் திராவிடத்தின் வாரிசு என்று பிரகடனப்படுத்திக் கொண்டது எல்லாம் என்னைப் போன்ற 85 வயதைத் தொட்டுக்கொண்டிருக்கும் திராவிட இயக்கத்தின் சுயமரியாதைக்காரன் என்ற வகையில் நெகிழ்ந்து போனேன்.

ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் மகளிர் பேருந்துகளில் இலவசப் பயணம், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000/&- ஆவின் பால் லிட்டர் ரூ.3/&-குறைப்பு, பெட்ரோல் விலை ரூ.3/- &குறைப்பு, விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி, கூட்டுறவு வங்கிகளில் அடகுவைக்கப்பட்ட நகைகள் மீதான கடன்கள் தள்ளுபடி, மகளிர் சுயஉதவிக்குழுவிற்கு வழங்கிய கடன்தொகைகள் ரத்து, தாழ்த்தப்பட்டவர்களையும் உள்ளடக்கி அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகப் பணி நியமன ஆணைகள் வழங்கியது, மகளிருக்கான பேறுகால விடுப்பு 9 மாதத்திலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது, அனைத்துப் போராட்டங்களிலும் ஈடுபட்ட பொதுமக்களின் மீதான வழக்குகள் திரும்பப்பெறப்பட்டது என வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாங்கள் காட்டிய வேகத்தைக் கண்டு புயலே
அஞ்சியிருக்கும். அத்தனை வேகம்.

இன்னும் எஞ்சியிருக்கும், குடும்பத் தலைவியருக்கு மாதம் ரூ.1000/&- உரிமைத் தொகை, இருமாத மின் கணக்கெடுப்பு மாதம் ஒரு முறை என்று மாற்றுதல், நீட் தேர்வு ஒழிப்பு போன்ற வாக்குறுதிகளும் எதிர்காலத்தில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருக்கின்றது. எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றிட வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மிகஅண்மையில், பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில் நின்றுகொண்டு, “சமூகநீதி மற்றும் மாநில சுயாட்சிக்காக என்னையே அர்ப்பணித்துக் கொள்கிறேன்” என்று முழங்கியதை வெறும் வெற்று சொல்லாக நான் பார்க்கவில்லை. அதுதான் திராவிட இயக்கத்தின் ஆணிவேர் என்பதை உணர்ந்தே தாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். முனைவர் பட்ட ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்களுக்கான கல்வி உதவித்தொகையை ஒரு 1 லட்சமாக உயர்த்தியது மட்டுமல்லாது, பெற்றோர் வருமான வரம்பை 8 இலட்சமாக உயர்த்தியது; பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான பெற்றோர் வருமான வரம்பை 2.50 இலட்சமாக உயர்த்தியது என்பன போன்ற கல்வித்துறையில் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டங்கள் சமூகநீதி சார்ந்தே அமைந்துள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங் களின் வேலைவாய்ப்பும் இனித் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் என்று அறிவித்திருப்பது இளைஞர்களின் நம்பிக்கையை இந்த அரசு பெற்றுள்ளது என்பது வெள்ளிடைமலையாக உள்ளது. மாணவர் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மதுரையில் ‘கலைஞர் நினைவு நூலகம்’ அடிக்கல் நாட்டியது என்பது கல்வித்துறையில் உங்களின் விரிந்த பார்வையைப் பறைசாற்றுகின்றன.

மாநில அரசுக்கான வருவாய் என்பது டாஸ்மாக், பெட்ரோல் மற்றும் டீசல், நிலப் பத்திரப் பதிவு என்ற மூன்று இனங்களிலிருந்துதான் கிடைக்கின்றது. நிஷிஜி என்ற பெயரில் ஒன்றிய அரசு அனைத்து வரிகளையும் பெற்றுக்கொண்டு, நம் தமிழ்நாட்டிற்கான பங்குத்தொகையாக ரூ.17,000 கோடியைத் தரமறுத்துக் கொண்டி ருக்கின்றது. நம் நிதியமைச்சர் அவர்கள் நேரிடை யாகவும் கோரிக்கைகளைப் பலமுறை வைத்தும் ஒன்றிய அரசு கேளாசெவியுடன் இருப்பது வேதனையளிக்கின்றது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

நீட் தேர்வு ஒழிப்பு தொடர்பாகச் சமீபத்தில் அனைத்துக் கட்சி சட்டமன்றத் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மூலம் தமிழ்நாட்டின் நலனைப் பாதுகாப்பதில் எல்லாரையும் அரவணை த்துச் செல்லும் தங்க ளின் மனப்பாங்கு போற்றுதலுக்குரியது. அக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தில், ‘நீட்டை ஒழிப்பதில் அரசு சட்டரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நிஷிஜியில் மாநிலத்திற்கான பங்குத்தொகை பெறுவது, நீட் ஒழிப்பது என்பதை அரசின் கோரிக்கையாக வைத்திருக்காமல், “ஒன்றிய அரசு நமக்கு அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறது” என்பதை, ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களிடம் கொண்டு செல்லவேண்டும். உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் மாநில நலன்களைக் கணக்கில் கொள்ளாமல் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஒன்றிய அரசுக்கு மாநில அரசு கோரிக்கைகளை வைக்கலாம். சட்டப் பூர்வமாகவும் அணுகலாம். அதுதான் முறையும்கூட. என்றாலும் கட்சியின் இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி போன்ற பல்வேறு அணியினர் மக்களைச் சந்தித்து ஒன்றிய அரசுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுக்கவேண்டும். ஆட்சி வேறு; கட்சி வேறு என்று பிரித்துச் செயல்பட்டு, நம் உரிமைகளை மீட்டெடுக்கவேண்டும்.


கலைஞர் 1971 ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் ‘உழுபவர்க்கே நிலம் சொந்தம்’ என்று சட்டம் இயற்றினார். அன்றைய பிரதமர் இந்திராகாந்தியின் முயற்சியால் அந்தச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. கலைஞர் தன் ஆட்சிக்குட்பட்டு, விவசாயக் குத்தகைதாரர்களை எப்போது வேண்டுமானாலும் நிலவுடமையாளர்கள் வெளியேற்றலாம் என்ப தற்கு எதிராக “குத்தகைதாரர் பாதுகாப்பு சட்டம்” கொண்டுவந்தார். நிலவுடமையாளர்கள் குத்தகைதாரர்களை வெளியேற்ற விரும்பினால் உழுது கொண்டிருக்கும் நிலத்தின் பாதி அளவு, அல்லது நிலம் விற்கப்பட்டால் பாதி தொகை கொடுக்கப்பட வேண்டும் என்று நிறைவேற்றினார்.

1985ம் ஆண்டில், தமிழ்நாட்டில் தங்கியிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம், ஈழத்தந்தை செல்வா அவர்களின் மகன் வழக்கறிஞர் சந்திர ஹாசன் இருவரையும் ஆகஸ்டு 23ம் நாள் ராஜீவ்காந்தி தலைமையிலான ஒன்றிய அரசு இலண்டனுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது. உத்தரவு வெளியானவுடன், கலைஞர் ஆட்சியில் இல்லாத சூழலில், அப்போது அவர் விடுத்த அறிக்கையில், ‘சென்னையில் என் தலைமையில் மாபெரும் பேரணி நடைபெறும். தமிழ்நாட்டின் அனைத்துக் குக்கிராமங்களிலும் இந்தப் பேரணி நடைபெறவேண்டும். பேருந்து, இரயில், விமானம் எதுவும் இயங்கக்கூடாது. தமிழர்கள் இனஉணர்வுடன் இப்பேரணியில் கலந்துகொள்ளவேண்டும்’ என்று கூறியிருந்தார். அதன்படி ஆகஸ்டு 25ம் நாள் கலைஞர் தன் தலைமையில் சென்னையில் மாபெரும் பேரணி நடத்தினார். தமிழகத்தின் அனைத்து மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளைக்கழக அமைப்பின் சார்பில் பேரணிகள் நடைபெற்றன.

நான் ஒன்றியச் செயலாளராக இருந்த திருவெறும்பூரில் சுமார் 180க்கும் மேற்பட்ட கிராமங்களில் பேரணிகள் நடைபெற்றன. மக்கள் ஒன்றிய அரசுக்கு எதிரான மனநிலையில் இருப்பதை உளவுத்துறையினர் அறிவித்தவுடன், ஒன்றிய அரசு நாடு கடத்தலுக்கான உத்தரவைத் திரும்பப்பெற்றது என்பது கடந்த கால வரலாறு. மாணவர்கள் நடத்திய சல்லிக்கட்டு போராட் டத்திற்குப் பணிந்து ‘சல்லிக்கட்டுக்கான சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றியது என்பது நிகழ்கால வரலாறு. இதை மனத்தில் கொண்டு தங்களின் தலைமையிலான அரசும், கட்சியும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நிறைவாக, திமுகவின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் நெருக்கடிகால நிலையில் கழகத்தை விட்டு வெளியேறி அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆட்சியில் அவர் நிதியமைச்சராகவும் செயல்பட்டார்.

பேராசிரியர் க.அன்பழகன் உடன் இருக்க ‘அற்ற குளத்து அறுநீர் பறவையாக‘ நெடுஞ்செழியன் கழகத்தைவிட்டு விலகியது என்பதைக் கலைஞரால் ஏற்றுக் கொள்ளமுடியாமல் இருந்தார். நாவலர் நெடுஞ்செழியன் மரணம் அடைந்தபோது, திமுகவின் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டுக் கலைஞர் இரங்கல் தெரிவிக்கவில்லை. அப்போதும் கலைஞர் கோபம் தணியாமல் இருந்தார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் நூற்றாண்டு விழாவையட்டி, அவருக்கு மார்பளவு சிலையைத் தாங்கள் திறந்து வைத்து, அவரின் எழுத்துகளை நாட்டுடைமையாக்கி, அதற்கான பரிவுத்தொகையை அவர்களின் வழித்தோன்றல்களுக்கு வழங்கிய நிகழ்வின் மூலம் கலைஞரின் கோபம் உங்களிடம் தொடரவில்லை என்பதும், தாங்கள் ‘திராவிடத்தின் இருப்பு’ என்பதையும் மெய்ப்பித்துக் காட்டியது நன்று.

கடந்த வாரத்தில், பாரதிதாசன் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் செல்வம் அவர்கள், குடந்தை அரசுக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு செய்தியாளர்களைச் சந்தித்த துணைவேந்தர், “தமிழ்நாடு அரசு உத்தரவின்படி விரைவில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ‘பாரதியார் இருக்கை’ அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயராய்வு மையத்தின் இயக்குநர் பதவி பாரதிதாசன் உயராய்வு மையத்தின் இயக்குநரின் பொறுப்பில்தான் உள்ளது. புதிய இயக்குநர் பல ஆண்டுகள் நியமிக்கப்படவில்லை. அண்ணா இருக்கை, கலைஞர் இருக்கை என்பதும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ளன. இதற்கும் பேராசிரியர்கள் நியமிக்கப்படாமல் இருக்கைகள் காலியாக உள்ளன. பாரதியார் இருக்கை அமைக்கப்படும்போது, பெரியார் உயராய்வு மையம், அண்ணா, கலைஞர் இருக்கைகளும் செயல்பாட்டுக்கு வரவேண்டும் என்ற அறிவுறுத்தலைத் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை பல்கலைக்கழகத்திற்கு வழங்கிடும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள் கிறேன். அடுத்த மடலில் சந்திப்போம்.. நன்றி.

– புலவர் க.முருகேசன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.