நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி கொலையில் மதுரை பெண் பிரமுகர் !
நெல்லை ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேரை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரெட்டியார்பட்டியில் உள்ள அவரது வீட்டில்உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் வீட்டு பணிப்பெண் ஆகியோரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.
மொத்த நெல்லையும் உறைந்து போயுள்ளது நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் அடுத்தடுத்த திருப்பங்கள் அரங்கேறி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, நெடுஞ்சாலைத் துறையில் ஓய்வுபெற்ற அவரின் கணவர் முருகசங்கரன், இவர்களின் பணிப்பெண் மாரி ஆகிய மூவரும் ரோஸ் நகரில் இருக்கும் வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். உமா மகேஸ்வரி ஹாலில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரின் கணவர் மற்றும் மாரி ஆகியோர் கழுத்தறுக்கப்பட்டு பெட்ரூமிலும், சமயலறையிலும் பிணமாக கிடந்தனர்.
கல்லூரி விட்டு வீட்டுக்கு திரும்பிய உமா மகேஸ்வரின் மகள், இந்த கொடூரத்தை பார்த்து அலறி துடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அடுத்த சில மணி நேரத்திலேயே மொப்ப நாய்கள், கை ரேகை நிபுணர்களுடன் நெல்லை ஆணையர் விசாரணையை துவக்கினார். திமுக-வில் முக்கிய புள்ளியாக இருந்தவர், நெல்லை மகாணத்தின் முதல் மேயர் என அரசியல் வட்டாரத்தில் அதிகம் தொடர்புடைய உமா மகேஸ்வரின் கொலை நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பட்டப்பகலில் இப்படி ஒரு கொலை சம்பவம் நிகழ்ந்திருப்பது, சட்ட ஒழுங்கை கேள்வி கேட்க வைப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்தார். அத்துடன், உமா மகேஸ்வரி மற்றும் அவரின் கணவர் உடலுக்கு நெல்லை சென்று இறுதி மரியாதையும் செலுத்தி வந்தார்.
வட மாநில பாணியில் கொலை:
இந்நிலையில், நெல்லை ஆணையர் இந்த கொலை சம்பவம் குறித்து விசாரிக்க 3 தனிப்படை அமைத்தார். உறவினர்கள் தொடங்கி தெரிந்தவர்கள், அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை தொடங்கியது. கொலைக்கு பிறகு உமா மகேஸ்வரி வீட்டில் 15 சவரன் நகை காணமால் போயியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. உமா மகேஸ்வரின் கை,கழுத்தில் இருந்த நகைகளும் மாயமாகியுள்ளது.
இதனால், ஆரம்பத்தில் இது நகைக்காக நடத்தப்பட்ட கொலை என போலீசார் சந்தேகித்தனர். ஆனால் வெறும் 15 சவரன் நகைக்காக இப்படி ஒரு கொடூரமான கொலை நிகழ்த்தப்பட்டிருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை வலுக்க செய்தது.
உடற்கூறு ஆய்வுக்கு பின்பு, கொலையில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. கழுத்தில் 6 இன்ச் ஆழத்துக்கு கத்தியால் குத்தி, திருகி துடிக்க துடிக்க கொலையர்கள் இதை நிகழ்த்தியுள்ளனர். அதே போல் இந்த கொலை வட மாநில பாணியில் இருப்பதாக போலீசார் சந்தேகித்துள்ளனர்.
இப்போது போலீசாரின் சந்தேகம் 4 ஆண்கள், 3 பெண்கள் பக்கம் திரும்பியுள்ளது. மதுரையை சேர்ந்த ஒரு பெண் பிரமுகர் ஒருவரையும் சந்தேக வலையில் சிக்கியுள்ளார். அடுத்து வரும் 3 நாட்களில் கொலை குறித்த காரணத்தை தெரிவிக்குமாறும் நெல்லை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதை தொடர்ந்து, வழக்கை விசாரிப்பதில் தனிப்படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.