திருச்சி மாவட்டத்தில் திருத்தலையூர் எனும் கிராமம். இராமாயண காலத்துக்கு முற்பட்ட கிராமம் இது. போக்குவரத்து வசதிகளில் இருந்து சட்டெனப் பின்வாங்கி மிகவும் உள்ளடங்கியுள்ள பழமையான ஊர் தான் திருத்தலையூர். ஆதியில் திருகுதலையூர் என்று தான் இருந்துள்ளது. காலப்போக்கில் மருவி அதுவே திருத்தலையூர் என்றாகிப் போனது. அதன் காரண காரியங்களைப் பின்னர் அறிந்து கொள்ளலாம். அதற்கு முன்னதாக அங்கிருக்கும் கோயிலின் குங்குமாம்பிகை சமேத சப்தரிஷீஸ்வரரைத் தரிசனம் செய்து விட்டு வந்து விடலாம்.
தூர நின்று பார்க்கும் போதே சற்றே பெரிய கோயிலாகவும் அதிலும் புராதனக் கோயிலாகவும் தெரிகிறது. தீர்த்தக் குளத்துக்கு எதிரே கோயில் விரிந்து உள்ளது. சுற்றுச் சுவர் மற்றும் கோயிலின் உள்மண்டபப் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதிலும், கோயிலின் நீள அகலம் போன்றவைகளை மனதுக்குள் நம்மால் உணர முடிகிறது. ஆட்கள் ஆங்காங்கு வேலைகள் செய்து கொண்டிருக்க, கோயிலின் திருப்பணி வேலைகள் சற்று சுறுசுறுப்பாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மூன்று நிலை இராஜகோபுரத்தில் அங்காங்கே பசுஞ் செடிகள் முளைத்து வளர்ந்து காற்றிலே ஆடிக் கொண்டிருக்கின்றன.
கிழக்கு முகம் பார்த்திருக்கும் சிவன் கோயில். இராஜகோபுரம் கடந்து உள்ளே செல்கிறோம். பிரகார மண்டபத் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. காலத்தால் அழியாத கல் தூண்கள் தாங்கி நிற்கும் மண்டபத்தின் மேல் விதானக் கூரையின் நீண்ட கருங்கற்களைப் பெயர்த்து எடுத்து புனரமைத்து மீண்டும் மேல் விதானத்தில் பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதனால் திருக்கோயில் உள்ளே சட்டென நம்மால் சுவாமி அம்பாளைத் தரிசித்து உள் பிரகாரத்தில் வலம் வர முடியவில்லை. அதனால் என்ன? கொஞ்சம் மெதுவாகவே நடந்து வாருங்கள் என்று நம்மைப் பணித்துள்ளனர் சுவாமியும் அம்பாளும், இராவணன் பூஜித்த சிவலிங்கமும்.
கோயில் உள் பிரகார மண்டபத்தில் தனி சன்னதியில் அமைந்துள்ளது, இராவணன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கம். பத்து தலை இராவணன் உருவாக்கிய லிங்கம் என்பதாலோ என்னவோ, சிவலிங்கமும் கொஞ்சம் பெரிதாகவே அமைந்துள்ளது. மகாமண்டபத்தில் உள்ளே, அகோர வீரபத்திரர் தனியொரு மேடையில் பளிச்செனத் தெரிந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். அகோர வீரபத்திரருக்கு இங்கு என்ன வேலை? தனிக் கதை. அதெல்லாம் அர்ச்சகர் சொல்லக் கேட்போம்.
கருவறையில் சுயம்பு மூர்த்தியாக ரிஷிகள் வழிபட்ட சிறிதான சிவலிங்கம். கருவறை மூலவர். மிக எளிமையாகக் காட்சியளிக்கிறார். கிழக்கு முகமாகப் பார்த்திருக்கும் மூலவர் சன்னதிக்கு வெளியே தெற்கு முகம் பார்த்து நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறாள் அருள்மிகு குங்குமாம்பிகை. பெண்களுக்கும் ஆண்களுக்கும் திருமண பாக்கியம் நிறைவேற்றித் தருபவள். அகோர வீரபத்திரர், மூலவர் மற்றும் குங்குமாம்பிகையினைத் தரிசித்து விட்டு, உள் பிரகாரம் சுற்றி வலம் வருகிறோம். மூலவர் கருவறை பின்புறம் ஸ்தல விருட்சமாக மருத மரம். தரையிலிருந்து அதன் அடி பாகத்திலிருந்து முண்டும் முடிச்சுகளுமாக. “முண்டும் முடிச்சுகளுமாக எனச் சொல்லாதீங்க சார். அவைகள் அத்தனையும் ரிஷிகள் ஐக்கியமான பாகங்கள்.” என்று நம்மை எச்சரிக்கிறார் அர்ச்சகர்.
“இது அகோர ஸ்தலம் ஆகும். அகோரஸ்திரம் மந்திரம் ஜபித்து யாகம் வளர்த்து தான், இந்த திருத்தலத்தில் அமர்ந்து சிவனை அழைக்கிறார் இராவணன். சிவன் வருவேனா என்கிறார். இராவணனின் மிகக் கடுமையானப் போராட்டத்தின் விளைவாக இறுதியில் சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்தபடி தோன்றுகிறார். சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து அகோர வீரபத்திரர் உதித்த தலம் இது. தனி மேடையில் அகோர வீரபத்திரர்க்கு இடது புறமாக விநாயகர்.
வலது புறமாக ருத்ர பசுபதி நாயனார். இராவணன் இங்கு எப்போது வந்தார்? இந்த ஊருக்கு திருகுதலையூர் (திருத்தலையூர்) எனப் பெயர் வரக் காரணம் என்ன என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம். இலங்கையிலிருந்து இராவணன் கைலாயம் நோக்கிக் கிளம்பி வருகிறார். வரும் வழியில் இப்பகுதியில் வனாந்திரமாக இருக்கக் கண்டு, இப்பகுதியில் தங்கி விடுகிறார். அப்போது நிறைய ரிஷிகள் இப்பகுதியில் யாகம் வளர்த்து சிவனை வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பத்து தலை இராவணனைப் பார்த்தவுடன் அத்தனை ரிஷிகளும் பயந்து நடுங்குகின்றனர்.
வேறு வழி ஏதும் இல்லை என்றெண்ணி, மருத மரத்தில் ஐக்கியமாகி விடுகின்றனர். அந்த மருத மரமே திருக்கோயிலின் ஸ்தல விருட்சமாக ஆகி விடுகிறது. ரிஷிகள் வழிபட்ட லிங்கத்தினைத் தான் வழிபடுவதா என எண்ணுகிறான் இராவணன். உடனே புற்று மண்ணெடுத்துப் புதிதாக அவன் கைகளாலேயே ஒரு பெரிய சிவலிங்கத்தை உருவாக்கி வழிபடத் தொடங்குகிறான். தனக்கு ஈஸ்வரன் நேரிலே தரிசனம் தர வேண்டும் என்று யாகங்கள் வளர்த்து தொடர்ந்து வழிபடுகிறான் இராவணன். ஆனால், ஈஸ்வரனோ எதிரில் நேராகத் தோன்றி தரிசனம் தருவதாக இல்லை. யாகம் தொடர்கிறது. நாட்கள் நகர்கின்றன. மிகவும் வெறுத்துப் போகிறான் இராவணன். ஒரு கட்டத்தில் தனது பத்து தலைகளில் ஒவ்வொன்றாகத் திருகி யாகத்தில் வீசுகிறான்.
அப்படி ஒன்பது தலைகளையும் திருகி வீசி விடுகிறான். ஒரு தலை மட்டுமே மிஞ்சுகிறது இராவணனுக்கு. பரமேஸ்வரனே தனக்குக் காட்சி தராமல் இருக்க, மிச்சமிருக்கும் ஒரு தலை மட்டும் தனக்கு எதற்கு என எண்ணுகிறான். தனது பத்தாவது தலையையும் திருகி யாகத்தில் வீசிட முயற்சிக்கிறான் இராவணன். மனம் கசிந்து போகிறார் சிவபெருமான். உடனே நெற்றிக்கண்ணைத் திறந்தபடிக் காட்சியளிக்கிறார் எல்லாம் வல்ல ஈஸ்வரன். இராவணனால் திருகி வீசப்பட்ட ஒன்பது தலைகளையும், சிவபெருமானே வரமளித்து இராவணனுக்கு ஒட்ட வைத்து மீண்டும் அவனைப் பத்து தலை இராவணனாக உருவாக்குகிறார். தான் பிடித்து வைத்த புற்று மண்ணினால் ஆன சிவலிங்கத்தை வணங்கி வழிபட்டு கைலாயம் கிளம்பிச் செல்கிறான் இராவணன். இத்தனைச் சிறப்புகள் பெற்றது இந்தத் திருத்தலையூர் திருத்தலம்.” என்கிறார் குருக்கள் மகுடேஸ்வரன்.