விசிட்டிங் கார்டில் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி
சென்னை விருகம்பாக்கம், காமராஜர் சாலையை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 27). இவர் மதுரவாயல் அருகே உள்ள நூம்பல் பகுதி வழியாக காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது இவரது கார் மீது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் தன்னிடம் தகராறு செய்வதாக மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் சுபாஷ் புகார் செய்தார். அப்போது அவர், தான் ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறியதுடன், சென்னை தலைமை செயலகத்தில் இணை செயலாளராக இருப்பதாகவும் கூறினார். உடனடியாக போலீ சார், அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்து தகராறு செய்ததாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். பின்னர் 4 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர். போலீசாரிடம் சுபாஷ், ஐ.ஏ.எஸ். என அச்சிடப்பட்ட தனது ‘விசிட்டிங் கார்டை’யும் கொடுத்து சென்றார். அந்த ‘விசிட்டிங் கார்டை’ பார்த்த போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதில் ஊரக வளர்ச்சி துறை இணை செயலாளர் என அச்சிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து போலீசாரின் தீவிர விசாரணையில் சுபாஷ் போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பது தெரிந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையில் சுபாஷ் மதுரவாயல் போலீஸ் நிலையம் வந்தபோது போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பது உறுதியானது.
சென்னை அடுத்த மதுரவாயல் பகுதியில் ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி வலம் வந்ததற்காக கைது செய்யப்பட்ட சுபாஷ் என்பவர் மீது அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன. தன்னை ஐஏஎஸ் அதிகாரி என பல்வேறு இடங்களில் விசிட்டிங் கார்டை கொடுத்து ஏமாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மதுரவாயல் போலீசார் போலி ஐஏஎஸ் அதிகாரியாக வலம் வந்த சுபாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்த செய்திகள் தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் வெளியானது. நமது அங்குசம் இணையத்திலும் சுபாஷ் போலிஸ் டி.எஸ்.பி, அரசு அதிகாரிகளை மிரட்டிய ஆடியோக்களை வெளியிட்டு இருந்தோம்.
இதுவரை அவர் மீது மோசடி சம்பந்தமான புகார்கள் ஏதும் வராத நிலையில், செய்திகள் வெளியானதை தொடர்ந்து மதுரவாயல் போலீஸ் நிலையத்திற்கு வந்த சிலர் கைது செய்யப்பட்ட சுபாஷ் தங்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி செய்திருப்பதாக புகாரளித்துள்ளனர். மேலும் இவரது கூட்டாளியான பாஸ்கர் என்பவர் இவருக்கு உதவி வந்ததாகவும் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மேலும் பணம் கொடுத்து ஏமாந்த சம்பவம் தொடர்பான புகார்கள் எந்த பகுதியில் நடந்ததோ அங்கு புகார் அளிக்குமாறு மதுரவாயல் போலீசார் தெரிவித்துள்ளனர். பட்டாபிராம் போலீஸ் நிலையத்தில் சுபாஷ் பத்து லட்சம் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பெரும்பாலானோர் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் சுபாஷை நேரில் பார்த்த தில்லை என்றும், செல் போனில் மட்டுமே பேசியதாகவும் அவருக்கு முழுக்க முழுக்க பாஸ்கர் என்பவர் உறுதுணையாக இருந்து வந்ததாகவும் அந்த விசிட்டிங் கார்டை வைத்தே தற்போது மதுரவாயல் வந்திருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் தங்களைப்போல் பாதிக்கப்பட்ட பலர் பல்வேறு பகுதிகளில் புகார் அளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி சுபாஷ் மீது ஏராளமான மோசடி புகார்கள் தற்போது குவிய தொடங்கி இருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு இடையில் திருச்சி மல்லியம்பத்து பகுதியில் சுடுகாடு நிலம் சம்மந்தமாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர். இதில் போலி ஐஏஎஸ் அதிகாரி சுபாஷ் என்பவர் பெயரை பயன்படுத்தி மல்லியம்பத்து தலைவர் மிரட்டல் வேலையில் ஈடுபட்டார் என்று ஆடியோ ஒன்று வெளியானது. இது குறித்து போலிசார் விசாரணை நடத்தினர்.
போலிசார் விசாரணையில் சுடுகாடு நிலம் அபகரிப்பு விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆகி இருக்கும் துணை பிடிஓ ரமேஷ் என்பவர் சோமரசம் பேட்டை போலிசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் மல்லியம்பத்து பஞ்சாயத்து தலைவர் விக்னேஸ்வரன் தூண்டுதலின் பேரில், சுபாஷ் என்பவர் தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, போன் வழியாக மிரட்டல் விடுத்தார் என்று அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.
டி.எஸ்.பி., அரசு அதிகாரி ஆகியோரை போலி ஐஏஎஸ் அதிகாரி மிரட்டிய ஆடியோ குறித்து மல்லியம்பத்து பஞ்சாயத்து தலைவர் விக்னேஸ்வரனிடம் கருத்து கேட்ட போது, எனக்கு சுபாஷ் நேரடியாக அறிமுகம் கிடையாது. இறந்து போன சிவக்குமாருக்கு தான் தெரிந்தவர். என்னிடம் ஒரே ஒரு முறை பேசியிருக்கிறார், எனக்கு அதற்கும் சம்மந்தம் இல்லை என்று மறுத்தார்.