குடும்ப சண்டையில் மண்டையை உடைத்ததாக மாநகராட்சி உதவி ஆணையர் மீது புகார்!
குடும்ப சண்டையில் மண்டையை உடைத்ததாக மாநகராட்சி உதவி ஆணையர் மீது புகார்!
அங்குசம் செய்தி இதழுக்கு ஒரு போன் கால் வந்தது, அது குறித்து விசாரிக்கையில்…..
திருச்சி ஏர்போர்ட் ஓயர்லெஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த ஆரிப் மன்சூர் என்பவர் தனது பக்கத்து வீட்டு பெண்ணை சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து இருவரும் ஏர்போர்ட் ஒயர்லெஸ் பகுதியில் குடியிருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தற்போது பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மார்ச் 20 அன்று கணவன், மனைவி இரு வீட்டாருக்கும் வாக்குவாதம் நடைபெற்று இருக்கிறது. அப்போது ஆரிப் மன்சூரின் உறவினர் முகமது சித்திக் தனது அக்கா வீட்டிற்கு சென்று என்ன பிரச்சினை என்று கேட்டிருக்கிறார். அப்போது பெண் உறவினரான திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் அக்பர் அலி சம்பவ இடத்திற்கு வந்து இருக்கிறார்.
அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் தீவிரமடைய திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் அக்பர் அலி, முகமது சித்திக் கட்டையைக் கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த முகமது சித்திக் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் கொடுத்தும் சிஎஸ்ஆர் கூட தற்போது வரை பதிவு செய்யப்படவில்லை என்று முகமது சித்திக் தரப்பைச் சேர்ந்த நபர்கள் கூறுகின்றனர். மேலும் ஸ்ரீரங்கம் மாநகராட்சி உதவி ஆணையர் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி வருவதாகவும் முகமது சித்திக் தரப்பைச் சேர்ந்தவர்கள் கூறினர்.
ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் அக்பர் அலியை அங்குசம் செய்தி தொடர்பு கொண்டது, அவர், எனக்கு சித்திக் என்று யாரையும் தெரியாது, அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை…. என்று கூறி தொலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டார்.
பொதுமக்களை அன்றாடம் சந்திக்கும் அதிகார பொறுப்பில் இருக்கும் ஒரு அதிகாரியே இப்படி நடந்து கொள்ளலாமா என்கிற கேள்வி தற்போது எழுகிறது..