இது குறித்து ஆத்மா மருத்துவமனையின் மனநல மருத்துவர் ராஜாராம் பேசுகையில்…
“2000த்திற்குப் பிறகு பிறந்தவர்களை இசட் ஜெனரேஷன் என்று சொல்வோம். ஏனென்றால் அவர்கள் பிறக்கும் பொழுது ஆண்ட்ராய்டு போனோடு பிறந்தவர்கள். எதையும் விரைவில் அடைய விரும்புவர்கள். ஆசைபட்டது எளிதில் கிடைக்கவில்லை என்றால் அதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் என்று சொல்லலாம்.
இப்படி தினமும் எங்களிடம் பல சிறுவர்கள் பரிசோதனைக்காக வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் பல்வேறு வகையான போதைப் பொருட்கள் பயன்படுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
இதை ஆரம்பத்திலேயே கண்காணித்து தடுத்துவிட வேண்டும். முதலில் கண்காணிப்பதற்கு ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்குமான உறவுமுறை இருக்க வேண்டும். முன்பு எல்லாம் உறவுமுறை இருந்தது இப்பொழுது குடுத்த காசுக்கு படிக்க வைக்கிறேன் என்ற நிலைக்கு கல்வி நிலையங்களும், கடமையை செய்து முடித்து விட்டேன் என்று பெற்றோர்களும் சென்றுவிடுகிறார்கள். இதனால் சிறுவர்கள் மீது அதிகம் கவனம் செலுத்துவதில்லை.
அவர்கள் நடத்தையில், செயல்பாடுகளில் சிறிய மாற்றம் தெரிந்தாலே உடனே அவர்களிடம் பேச வேண்டும். அவர்களுடைய மனநிலை என்ன என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் எதையும் கவனிக்காமல் அவர்கள் செயல்களில் ஈடுபாடு அதிகரித்து, அந்த செயலுக்கு அவர்கள் அடிமையான பிறகு சரிசெய்துவிடலாம் என்று எண்ணுவது தவறு. ஆரம்பத்தி லேயே மாற்றத்தைக் கண்டு கொண்டால் எளிதில் சரி செய்துவிடலாம்.
மேலும் சிறுவர்களின் உடல்ரீதியான செயல்பாடுகள் குறைந்து வருகிறது. அவர்களை அதிகம் மைதானங்களுக்கு அனுப்பி விளையாடச் சொல்ல வேண்டும். உலகத்தைப் பற்றிய அவர்களுடைய பார்வையை அகலப்படுத்த வேண்டும். இது அவர்கள் உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் மட்டுமல்லாமல் நாளைய தலைமுறைக்கே நல்லது” என்று கூறினார்.
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாநிலச் செயலாளர் தினேஷ் சீரங்கராஜ் கூறியது : “18 வயதுக்குக் கீழ் இருக்கக்கூடிய நபர்கள் கொலை போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் கஞ்சா போன்ற பல்வேறு போதைப் பொருட்கள் பயன்பாடு தான். இன்று கிராமப்புறங்கள், நகர்ப்புறங்கள் என்று பாரபட்சமில்லாமல் அனைத்துப் பகுதிகளிலும் கஞ்சா மற்றும் ஏனைய போதைப் பொருட்களின் விற்பனை, உபயோகம் அதிகரித்து விட்டது.
பொருளாதாரப் பின்னடைவு, கல்வி வழிகாட்டல் இல்லாத சூழல், வாழ்க்கை சூழல் என பல்வேறு பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் குறுகிய நேரத்தில் அதிகம் பயன் அடைய, பணம் சம்பாதிக்க ஆசைப்படுகின்றனர்.
சிறுவயதிலேயே வறுமையை கண்ட சிறுவனுக்கு எளிதில் பணம் கிடைக்க ஒரே வழி தவறான பாதையில் செல்வதே, சினிமா படங்களில் காட்டும் காட்சிகள் பெரும்பான்மையானவை இன்று நிஜத்திலும் நடந்துகொண்டிருக்கிறது. சிறைக்குள் உள்ள ரவுடிகள் திட்டமிட்டு இளம்சிறார்களை கொடூரமான குற்றத்திற்கு தள்ளுகின்றனர். மேலும் போதைப் பொருட்கள் விற்பனையில் பெரும் அளவில் சிறுவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.
இதனால் அதிக அளவில் பணம் ஈட்டக்கூடிய நிலைக்கு சிறுவர்கள் மாறிவிடுகின்றனர். இதை தடுக்க வேண்டுமென்றால் தமிழக அரசு, பள்ளிக்கல்வித் துறை, காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள், ஆசிரியர்கள் என்று ஒட்டுமொத்த கட்டமைப்பும் ஒருங்கிணைந்து பயணிக்க வேண்டும்.
பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதியில் அதிக கவனம் செலுத்த வேண்டும், ஆதரவற்றவர்களாக இருப்பின் அவர்கள் மீது கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். பள்ளி படிக்கும் பொழுது வேலைக்கு செல்லக்கூடிய மாணவர்கள் மீது கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.
பெரும்பாலும் போதைப் பொருட்கள் வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளி லிருந்து தான் இறக்குமதி செய்யப்படுவதாக தெரிகிறது. இவை அனைத்தும் அந்த பகுதியில் இருக்கக்கூடிய காவல்துறைக்கு தெரியாமல் நடக்க வாய்ப்புகள் கிடையாது. போதைப் பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்தினால் தமிழ்நாட்டில் குற்றங்கள் மிகப் பெருமளவில் குறையும்.
அதேநேரம் ஒரு பள்ளியில் ஒரு மாணவன் தவறான செயலில் ஈடுபடுகிறான் என்றால் அவன் மீது கூடுதல் அக்கறை எடுத்துக் கொண்டு ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். ஆசிரியர்களோடு, தலைமையாசிரியர்கள், காவல்துறையினர் மற்ற ஏனைய பிரிவுகள் அந்தப் பகுதியின் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தமிழக அரசு என்று அனைவரும் இணைந்து கூட்டு முயற்சி எடுத்தால் நாளைய சமூகத்தை நல்வழிப்படுத்த முடியும்.
இந்த கூட்டு முயற்சியில் ஒருவர் பின் வாங்கினாலும் ஒட்டுமொத்த செயல்பாடும் வீணாகிவிடும்” என்றார்