பளபளக்கும் பஞ்சாயத்து தலைவர்..! பல் இளிக்கும் கிராம வளர்ச்சி..!
பளபளக்கும் பஞ்சாயத்து தலைவர்..!
பல் இளிக்கும் கிராம வளர்ச்சி..!
“நான் மக்கள் நலத்திட்டங்களுக்கு ஒரு ரூபாய் ஒதுக்கினால் அதில் 10 பைசா தான் மக்களை சென்று சேர்கிறது” என்று ஆதங்கப்பட்ட மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் ஆதங்கத்திற்கு விடையாக அமைந்தது தான் பஞ்சாயத்து ராஜ் சட்டம்.
தங்களுடைய கிராம மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற, தேவையான நிதியை பயன்படுத்த மத்திய, மாநில அரசுகளின் அனுமதியை பெற காத்திருக்காமல் அடிப்படை நிதி ஆதாரங்களை உருவாக்கி கிராம பஞ்சாயத்து தலைவரே நேரடியாக வங்கியிலிருந்து கையெழுத்திட்டு அந்நிதியை பெற்று திட்டங்களை நிறைவேற்ற வகை செய்கிறது பஞ்சாயத்துராஜ் சட்டம்.
கிராமத்திற்கான மின் கட்டணம், தண்ணீர் கட்டணம், சாலை வரி உள்ளிட்டவைகள் நீங்கலாக பிற தேவைகளுக்கென்று பயன்படுத்த, கிராம பஞ்சாயத்து தலைவர் நேரடியாக கையாளும் வகையில் ஒதுக்கப்படும் நிதியானது அதிகபட்சமாக ரூ.2 லட்சம் மட்டுமே. அத்தகைய நிதியை வங்கியிலிருந்து பெற காசோலையில் கையெழுத்திடும் தலைவரின் உரிமையை நிறுத்தியிருக்கிறது மாவட்ட நிர்வாகம்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தீராம்பாளையம்(மு.சாவித்திரி), பிச்சாண்டார் கோவில்(த.சோபனா), அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மல்லியம்பத்து (உ.விக்னேஷ்வரன்), கம்பரசம்பேட்டை (ஆர்.புஷ்பவள்ளி), முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள செவந்திலிங்கபுரம் (ச.கவிதா), துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வரதராஜபுரம் (க.மதுபாலன்) ஆகிய ஊராட்சி மன்ற தலைவர்களின் காசோலை கையெழுத்திடும் உரிமையை நிறுத்தியிருக்கிறது.
ஏற்கனவே பெருகமணி ஊராட்சி பெண் தலைவரின் செக் பவர் முடக்கப்பட்டு தற்சமயம் திரும்பவும் வழங்கப்பட்டுள்ளது.
செக் பவர் முடக்க என்ன காரணம் என அறிய கூடுதல் இயக்குநர்(பஞ்சாயத்து) கங்காதரணியை தொடர்பு கொண்டு கேட்ட போது,
“கம்பரசம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பவள்ளி தனது மகன் பெயரில் போலியாக வவுச்சர் எழுதி நிறைய பணம் எடுத்திருக்கிறார். மேலும் ப்ளான் அப்ரூவலில் அவரே கையொப்பம் இடுவது உள்ளிட்ட தவறுகளை செய்திருப்பதால் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இதுபோலவே பிற பஞ்சாயத்து தலைவர்கள் மீதும் வந்த பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். விசாரணைக்குப் பின் குற்றச்சாட்டுக்கள் உறுதியாகும்பட்சத்தில் அவர்களது பதவி பறிக்கப்படும்” என்றார்.
செக் பவரை பிடுங்கிய பிறகும் ஊராட்சி அலுவலகத்தில் அமர்ந்தபடி பழைய தேதிகளில் புஷ்பா ரவிச்சந்திரன் அவரது கணவர் ரவிச்சந்திரனின் கட்டளைக்கிணங்க கையெழுத்திடுகிறார் என்றும் கூறப்படுகிறது.
திருச்சி மாநகராட்சி எல்லையிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில், கரூர் செல்லும் சாலையில் உள்ள கம்பரசம்பேட்டை ஊராட்சிக்கு சென்று பார்த்தோம். ஊராட்சியின் தலைவராக இருப்பவர் புஷ்பவள்ளி ரவிச்சந்திரன். அலுவலகத்தின் முகப்பில் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.புஷ்பவள்ளி, எம்.ஆர்.பி.ரவிச்சந்திரன் என இரண்டு பெயர்களும் எழுதப்பட்டிருக்கிறது. (கணவர் பெயருடன் இணைத்து எழுதுவதென்றால் புஷ்பவள்ளி ரவிச்சந்திரன் என்றே எழுதியிருக்க வேண்டும்..!). ரவிச்சந்திரன் பெயருக்கு கீழே அவரது செல் எண் எழுதப்பட்டுள்ளது. அதாவது தலைவரின் தொடர்பு எண் இல்லாமல் அவரது கணவரின் தொடர்பு எண் எழுதப்பட்டுள்ளது. அருகில் உள்ள கல்வெட்டில் எம்.ஆர்.பி.ரவிச்சந்திரன், தலைவர் என்ற பெயர் மட்டும் தெரிய பிற பகுதிகள் கறுப்பு பெயிண்டால் அழிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பெண் ஊராட்சி தலைவர்களுக்கு பதிலாக அவர்களது கணவர் தான் தலைவராக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது. அது போன்றே கம்பரசம்பேட்டை ஊராட்சியிலும் புஷ்பா ரவிச்சந்திரனின் கணவர் ரவிச்சந்திரன் தான் ஊராட்சி மன்றத்தில் தலைவரின் நாற்காலியில் அமர்ந்து கொண்டு செயல்படுகிறார். இவர் ஏற்கனவே கடந்த ஐந்து ஆண்டுகள் கம்பரசம்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவராக செயல்பட்டவர். தற்போது தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் அந்த பதவியை தனது மனைவி புஷ்பாவிற்கு பெற்றுத் தந்திருக்கிறார் ரவிச்சந்திரன்.
காவிரி ஆற்றை ஒட்டி சுமார் 200 அடி தூரம் உள்ள கம்பரசம்பேட்டையில் உள்ள பல விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக தகுதி மாற்றம் செய்யப்பட்டு ப்ளான் அப்ரூவல் வழங்கியிருப்பதற்கு ஆதாரமாக நகரமா, கிராமமா என்று யோசிக்க வைப்பது போல் எங்கும் பெரிய கட்டடங்கள் எழுந்து நிற்கின்றன. கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் வளர்ந்ததோ இல்லையோ இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு ரியல் எஸ்டேட் தொழில் கனஜோராக நடந்து வருவதற்கு ஆதாரமாக பல இடங்கள் ப்ளாட் போடப்பட்டு விற்பனை நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் எம்.ஆர்.பி.ரவிச்சந்திரன் கையில் தங்க செம்புடன், விரல் நிறைய தங்க மோதிரங்களுடன் சிரித்துக் கொண்டு நிற்கும் படமொன்று சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. வெறும் ரூ.2 லட்சம் பணத்தை கையாளும் பதவியில் இருந்து கொண்டு நகைக்கடை போல் உடல் முழுக்க தங்க நகைகளால் தன்னை அலங்கரித்துக் கொண்டு வலம் வரும் ரவிச்சந்திரனுக்கு இவ்வளவு சொத்து எங்கிருந்து வந்தது எனத் தெரியுமா என்ற கேள்வியுடன் நம்மை அணுகிய, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் நம்மிடம் கூறுகையில், “விவசாய நிலங்களை வீட்டுமனை பட்டாவாக்கும் அனுமதி இல்லை என்று அரசு அறிவித்த போதும் விவசாயம் செழிக்கும் விளைநிலங்களை தரசு நிலங்களாக கணக்குக்காட்டி கூறுபோட்டு விற்றதன் விளைவே அவர் கோடியில் புரளக் காரணம். ஒரு ஏக்கர் நிலத்திற்கு 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை பணம் கைமாறுகிறது. விளைநிலங்களாக இருந்த கம்பரசம்பேட்டை இன்று கட்டிட காடுகளாக மாறியதன் காரணம் முறையற்ற அனுமதியினை பல ஆண்டுகளாக அவர் வழங்கியதே” என்றார்.
இக்குற்றச்சாட்டு குறித்து நாம் கம்பரசம்பேட்டை ஊராட்சி மன்ற முன்னாள்(?) தலைவர் ரவிச்சந்திரனிடம் கேட்ட போது, “அப்படியா… செக் பவரை பறிச்சிட்டாங்களா… என்றவர் பின்னர், ஏன் பறிச்சாங்கனு எனக்குத் தெரியாது… என்றவரிடம், “கையில் தங்கசெம்புடன் விரல் முழுக்க தங்கமோதிரம் அணிந்தபடி உங்கள் படம் ஒன்று சமூகவலைதளத்தில் வலம் வருகிறதே… என்று கேட்ட போதும், அப்படியா.. எனக்கு அதெல்லாம் பார்க்கத் தெரியாது” என்று பேசி தொடர்பை துண்டித்துக் கொண்டார்.
கடந்த பத்து ஆண்டுகளாக கம்பரசம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ரவிச்சந்திரன். இதற்கு முன்பு இங்கு குடமுருட்டி சேகர் தலைவராக வலம் வந்தார். சென்ற திமுக ஆட்சியின் போது அமைச்சர் கே.என்.நேருவுடன் வலம் வந்த குடமுருட்டி சேகர், அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வருகையை தொடர்ந்து அவருடன் தன்னை இணைத்துக் கொண்டு அரசியல் செய்கிறார்.
கே.என்.நேருவின் மறைந்த சகோதரர் ராமஜெயத்திற்கு ரியல் எஸ்டேட் தொழிலுக்கு பலவகையிலும் உதவி புரிந்த ரவிச்சந்திரன் பிற்பாடு ராமஜெயத்தின் மறைவிற்கு பின்னர் நேருவின் விசுவாசியாக வலம் வருகிறார்.
ரவிச்சந்திரனின் அதிரிபுதிரி வளர்ச்சியை கண்டு வாய்பிளக்கும் பலரும் அவர் குறித்த எந்த புகாரையும் திமுக மாவட்ட தலைமையிடம் கூறுவதில்லை. இந்நிலையில் அதிகாரிகள் மட்டத்தில் சிக்கிய ரவிச்சந்திரன் தற்போது இழந்த ‘காசோலையில் கையெழுத்திடும்’ அதிகாரத்தை திரும்ப பெற்றுத் தருமாறு தினமும் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து கோரிக்கை விடுத்து வருகிறார்.
கம்பரசம்பேட்டை ஊராட்சியில் உள்ள மல்லாட்சிபுரம் பெரியார் நகர், விசாலாட்சி நகர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு ப்ளாட் அப்ரூவல், என்.ஓ.சி. வழங்கி பெரும் தொகைய சம்பாதித்த ரவிச்சந்திரன் தற்போது சுப்பையாபுரம், கருப்பூர், மேக்குடி உள்ளிட்ட இடங்களில் சுமார் 50 ஏக்கர் வரை அவர் பெயரிலும் உறவினர் பெயரிலும் வாங்கி இருக்கிறார் என்கின்றனர் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.
மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கூட இல்லாத காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் ஊராட்சி மன்ற தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணம் மக்களுக்கான நலத்திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும், மக்களாட்சி தத்துவத்திற்கு உயிர் கொடுக்கவும் கொண்டு வரப்பட்டது.
ஆனால் நடைமுறையில் இந்த அதிகாரத்தை கொண்டு அதிகார துஷ்பிரயோகம் தான் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதை சரி செய்ய உள்ளாட்சித் துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது.?
– அங்குசம் செய்தியாளர் குழு