உயர்ந்த நோக்கங்களுக்கு உரியது இலக்கியம்…!!! பட்டிமன்றத்தின் சுவாரஸ்யமான தொகுப்பு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

உயர்ந்த நோக்கங்களுக்கு உரியது இலக்கியம்…!!!

 

ரசிக ரஞ்சனா சபா சார்பாக ஒரு பட்டிமன்றம். திருச்சி ஊர்வசி தியேட்டர் ராஜேஸ்வரி ஹாலில் (11.08.2022) வியாழன் அன்று நடைபெற்றது. தலைப்பு “இலக்கியங்களின் நிலைத்த புகழுக்குக் காரணம் கவியழகா? கருத்துச் செறிவா?” என்பதாகும். பட்டிமன்ற நடுவர் முனைவர் இரா. மாது. கவியழகே என்கிற தலைப்பில் திருச்சி தேசியக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் முனைவர் மாணிக்கம், முனைவர் நீலகண்டன், இல்லம் தேடிக் கல்வி இளஞ்சேட்சென்னி ஆகியோர் வாதிட்டனர். கருத்துச் செறிவே என்கிற தலைப்பில் திருச்சி உருமு தனலெட்சுமி கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் விஜயசுந்தரி, திருச்சி தேசியக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் புவனேஸ்வரி, திருச்சி நகைச்சுவை மன்றத்தின் செயலாளர் சிவகுருநாதன் ஆகியோர் வாதிட்டனர். இறுதியில் முனைவர் இரா. மாது “நல்ல தீர்ப்பினை” வழங்கினார்.

 

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

பட்டிமன்றத்தின் தொடக்க உரையில், “மனித வாழ்வில் சம கால வாழ்வின் பிரதிபலிப்புகளே இலக்கியங்கள். அவைகளில் கவியழகும் உண்டு. கருத்துச் செறிவும் உண்டு. அதனைச் சாறு பிழிந்து உங்களுக்குத் தந்திடத் தான் நமது சொற்பொழிவாளர்கள் வந்துள்ளனர். கவிஞர் வாலி ஓரிடத்தில் குறிப்பிட்டுக் கூறுகிறார். “நான் வாசிப்பதும்…  நான் சுவாசிப்பதும்…  நான் விசுவாசிப்பதும் என் அன்னைத் தமிழைத் தான்.” என்று. அதில் கவியழகும் இருக்கிறது. கருத்துச் செறிவும் இருக்கிறது.” எனக் குறிப்பிட்டார் முனைவர் இரா. மாது.

ரசிக ரஞ்சனா சபா சார்பாக ஒரு பட்டிமன்றம்
ரசிக ரஞ்சனா சபா சார்பாக ஒரு பட்டிமன்றம்

 

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

((@))  முனைவர் மாணிக்கம் ((கவியழகே))

இலக்கியங்கள் காலக் கண்ணாடி ஆகும். வாசிப்பவர்களின் ஆழ்மனதினில் பல்வேறுபட்ட எண்ண அலைகளை உருவாக்கக் கூடியதாகும். மனிதனின்  ஐம்புலன்களையும் அழகியல் சார்ந்து ஈர்க்கக் கூடியன இலக்கியங்கள். ஒரு கவிதை நிறைய வரிகளைக் கொண்டிருக்கும். அதனுள்ளே அழகியல் சார்ந்து கவியழகாக சில வரிகளே அமைந்திருக்கும். அந்தச் சில வரிகள் தான் மொத்தக் கவிதையினையும் வாசிக்கத் தூண்டி விடும். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில், “மாசறு பொன்னே…  வலம்புரி முத்தே…” என்பன போன்ற வரிகள் கவியழகால் தானே இன்னமும் நம் நெஞ்சங்களைக் கவர்ந்துள்ளது. அது போல கம்பனின் இராமாயணத்திலும் அந்தக் கவியழகு தானே நம்மை இன்னமும் கட்டிப் போட்டு வைத்துள்ளது.

((@))  சிவகுருநாதன்  ((கருத்துச் செறிவே))

இலக்கியங்களில் கவியழகு என்பது அந்தந்த நிமிடங்களில் நாம் அதனை ரசித்து விட்டுக் கடந்து போய்விடுவோம். கருத்துச் செறிவு அப்படியல்ல. திருவள்ளுவனின் ஆயிரத்து முந்நூற்றி முப்பது குறள்களிலும் அமைந்து இருப்பது கருத்துச் செறிவு தான். கவியழகு அல்ல. பல நூற்றாண்டுகளைக் கடந்து என்று மட்டுமல்ல இன்னும் பல நூற்றாண்டுகளுக்கும் நம்முடைய பிற்காலச் சந்ததியினர்க்கும் வாழ்வின் அனுபவங்களை கருத்துச் செறிவாக வழங்கிக் கொண்டிருப்பது தான் திருக்குறள்.

 

ஒன்றாம் நூற்றாண்டில் தொல்காப்பியம். இரண்டாம் நூற்றாண்டில் சங்க இலக்கியங்கள். மூன்றாம் நூற்றாண்டில் திருவாசகம். நான்காம் நூற்றாண்டில் ஆசாரக்கோவை. ஐந்தாம் நூற்றாண்டில் பெருங்காதைகள். ஆறாம் நூற்றாண்டில் கல்லாடல். ஏழு, எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் தேவாரம் மற்றும் ஆழ்வார் பாசுரங்கள், பத்தாம் நூற்றாண்டில் சீவக சிந்தாமணி, பதினோராம் நூற்றாண்டில் பெரிய புராணம். பனிரெண்டாம் நூற்றாண்டில் கந்த புராணம், கம்ப இராமாயணம். பதிமூன்றாம் நூற்றாண்டில் சிவஞான போதகம். பதினான்காம் நூற்றாண்டில் தல புராணங்கள். பதினைந்தாம் நூற்றாண்டில் வில்லிபுத்தூரார் பாரதம். பதினாறாம் நூற்றாண்டில் திருவிளையாடல் புராணம். பதினேழாம் நூற்றாண்டில் தேம்பாவணி மற்றும் சீறாப்புராணம். பதினெட்டாம் நூற்றாண்டில் தாயுமானவர் பாடல்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வள்ளலார் பாடல்கள். இருபதாம் நூற்றாண்டில் பாரதியார் பாடல்கள். இவைகளுடன் எல்லாக் காலங்களுக்கும் பொருந்தி வரக் கூடியதுமான திருக்குறள் உட்பட அனைத்து இலக்கியங்களிலும் கருத்துச் செறிவே நிறைந்துள்ளது.

 

((@))  இளஞ்சேட்சென்னி   ((கவியழகே)) 

எந்தவொரு இலக்கியத்திலும் கவியழகுடன் சொன்னால் தான், அந்தக் கருத்துச் செறிவும் மக்களைச் சென்றடையும். மூதறிஞர் இராஜாஜி சொன்ன கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு ரயில் பெட்டி. ஒரு இளைஞன். ஒரு பெண். ஒரு குழந்தை. அந்த இளைஞனின் கண்ணெதிரே மது பாட்டில். இவைகளைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை. வேறு ஏதும் இல்லை. அந்த இளைஞன் மதுவை குடிக்கிறான். மன நிலை மாறுகிறான். அந்தப் பெண்ணை மானபங்கப்படுத்தி அடைந்து விடுகிறான். இவைகளுக்கு எல்லாம் சாட்சியாகக் குழந்தை பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருக்கிறது. கடைசியாக அந்தக் குழந்தையைக் கொன்று விடுகிறான். திருவள்ளுவர் கள்ளுண்ணாமை குறித்துக் கூறியுள்ள குறள்களின் சாற்றினை மூதறிஞர் இராஜாஜி அழகியலுடன் ஒரு கதையாக்கித் தந்துள்ளார் நமக்கு

((@))  முனைவர் புவனேஸ்வரி   ((கருத்துச் செறிவே))

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இலக்கியங்களில் கவியழகு மட்டுமே முக்கியம் அல்ல. கருத்துச் செறிவு அதனுள் இருந்தால் தான் அதன் நிகழ்காலத்திலும் அதன் எதிர்காலத்திலும் நிலைத்து நிற்கும். மணிமேகலையில் “உணவு கொடுத்தீரே உயிர் கொடுத்தீர்” என்று ஓரிடத்தில் வருகிறது. இதில் கவியழகு தேவையில்லை. இவ்வுலகில் உணவும் உயிரும் இன்றியமையாதன. அதில் உள்ள கருத்துச் செறிவு மனித குலம் உள்ளவரை மறக்க முடியாது மறுக்க முடியாது. ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தமிழ்ப் பாடல் கவிதை. கலியன் பூங்குன்றனார் இயற்றியது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று. கவியழகுக்காக ஐ.நா. சபையில் அதனை வைக்கவில்லை. உலகில் எல்லா மனிதர்களுக்கும் பொருநதி வரக் கூடிய கருத்துச் செறிவுக்காகத் தான், நம் தமிழ் மொழியின் அந்தக் கவிதை ஐக்கிய நாடுகள் சபையில் இடம் பெற்றுள்ளது.

((@))  முனைவர் நீலகண்டன்   ((கவியழகே)) 

வார்த்தைகளின் “வாலிபக்” கவிஞன் திருவரங்கத்து வாலி. ஸ்ரீரங்கத்து வாலி சினிமாவுக்குப் பாட்டெழுதினார் என்றும் சொல்லலாம். “திருவரங்கத்தில் இருந்து திரையரங்கம் வந்தவன் நான்” என்று இதனையே வாலி சொல்லுகின்ற விதம் தான் கவியழகு. எதற்கு வேண்டும் என்றாலும் பாட்டு எழுதுவீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டது. உடனே அவர் சொன்னார், “நான் மெட்டுக்கும் பாட்டெழுதுவேன். நான் துட்டுக்கும் பாட்டெழுதுவேன்.” என்று வெளிப்படையாகச் சொன்னார் கவிஞர் வாலி. கவியழகு என்பது அது தான். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் முக்கியக் கவிதையில் மூன்று வரிகளில் விசாரணை, தீர்ப்பு, தண்டனை மூன்றையும் மிகுந்த அழகியலுடன் நிறுவியிருப்பார். கடும் அறச்சீற்றம் கொண்டு கண்ணகி, பாண்டிமா மன்னன் அவையில் தோன்றுகிறாள். வெடித்துச் சிதறும் பரல்கள், நீதிவழுவா பாண்டிய  மன்னனின் நிலைகுலைந்த நீதியைச் சுட்டுகிறது. நெடுஞ்செழியன் மூன்றே வரிகளைக் கூறி இயல்பாகவே உயிர் துறக்கிறான். “யானோ அரசன்…???  யானே கள்வன்…!!!  கெடுக என் ஆயுள்…” என்று தன் அரச சிம்மாசனத்தில் இருந்து சரிந்து வீழ்கிறான். இதில் யானோ அரசன் என்பது ஆர்க்யூமெண்ட். யானே கள்வன் என்பது ஜட்ஜ்மெண்ட். கெடுக என் ஆயுள் என்பது பனிஷ்மெண்ட். வாழ்வியலோடு இணைந்த இந்தக் கவியழகுக்கு ஈடு ஏது.

((@))  முனைவர் விஜயசுந்தரி   ((கருத்துச் செறிவே))

இலக்கியம் என்பது ஒரு கலை ஆகும். கலை கலைக்காகவா அல்லது மக்களுக்காகவா என்றால், மக்களுக்கு ஆனது தான் கலைகள் எல்லாமே. இலக்கியத்தை ரசிப்பது என்பது வேறு. அதே இலக்கியத்தின் கருத்துச் செறிவுகளை வாழ்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்வது என்பது வேறு. இதில் ரசிப்பது கவியழகு. நடைமுறையில் நம் வாழ்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்வது என்பது கருத்துச் செறிவுகளை மட்டும் தான். சமுதாயப் பிரச்னைகளை அதன் சிக்கல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பவைகள் இலக்கியங்கள். இலக்கியங்களில் கவியழகு என்பது கற்பனையானது. கருத்துச் செறிவு மட்டுமே நடைமுறைக்கு ஒப்பானது. உயர்வானது. “அம்மாவை நினைக்காத உயிர் இல்லையே” என்கிற பாடலில் உள்ள வரிகளை ரசிக்கும் போது அது கவியழகு. ரசித்தால் மட்டும் போதுமா? ஒவ்வொரு உயிரும் தன் அம்மாவை நினைத்து உருக வைப்பது அது தான் கருத்துச் செறிவு. கவியழகு மட்டுமே ஒரு பாடலையோ ஒரு இலக்கியத்தையோ தூக்கி நிறுத்தாது. அதனுள்ளே கருத்துச் செறிவும் அமைந்திருந்தால் தான் காலங்களைக் கடந்தும் அந்த இலக்கியம் நிலைத்து நிற்கும். .

முனைவர் இரா. மாது
முனைவர் இரா. மாது

.

((@))  முனைவர் இரா. மாது.   ((பட்டிமன்றத் தீர்ப்பு))

இப்பொழுது இரண்டு பக்கமும் பார்த்தால் இரண்டு அணிகளின் வாதங்களும் ஒன்றுக்கொன்று சளைத்தவைகள் இல்லை என்றே தோன்றுகிறது அல்லவா? ஆம். அது அப்படித் தான். பொதுவாகவே கவிதைக்கு அழகு தேவை. ஒருவித அலங்காரம் தேவை. அந்த அழகு தான் அந்தக் கவிதையைப் படிக்கத் தூண்டும். ஒரு மேநாட்டு அறிஞர் கூறுகிறார். உரைநடை என்பது என்ன? கவிதை என்பது என்ன? சொற்களை சிறந்த முறையில் அடுக்குவது ஒரு உரைநடை. மிகச் சிறந்த சொற்களை மிகச் சிறந்த முறையில் அடுக்குவது கவிதை. பக்கம் பக்கமாக எழுதி ஒரு உரைநடையில் தெரிவிக்கின்ற ஒரு விசயத்தினை, நாலு வரி கவிதையில் நச்சென்று உணர்த்துவது கவிதை. எது எப்படி இருப்பினும் இலக்கியத்துக்கு கவியழகும் வேண்டும். கருத்துச் செறிவும் வேண்டும். இப்போது இரண்டு அணிகளின் கருத்துகளை ஒரே தராசில் இட்டு நிறுத்தி தீர்ப்பு வழங்கி விடுவோம். செவி மடுத்து சற்று ஆழ்ந்து யோசித்தால் ஒரு தட்டு நூலிழையில் மேலேறுவது போலவும், இன்னொரு தட்டு நூலிழையில் கீழே தாழ்வது போலவும் தோன்றுகிறது. ஆம். இலக்கியங்களின் புகழுக்கு கவியழகு காரணம். அதே நேரத்தில் இலக்கியங்களின் நீடித்த நிலைத்த புகழுக்கு கருத்துச் செறிவே காரணம் ஆகும்.

 

எழுத்து வடிவம் : ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

படங்கள் : ராஜா, திருச்சி.

.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.