பாடகர் டி.எம். சௌந்திரராஜன் கல்யாணப் பத்திரிகையும்… ! அதில் “ரேஷன் அரிசி” பற்றிய வேண்டுகோள் குறிப்பும்…
திரையிசைப் பிரபல பின்னணி பாடகர்
டி.எம். சௌந்திரராஜன்
கல்யாணப் பத்திரிகையும்…
அதில் “ரேஷன் அரிசி” பற்றிய
வேண்டுகோள் குறிப்பும்…
@@@@@@@@@@@@@@@
இன்றைக்குச் சரியாக 76 ஆண்டுகளுக்கு
முன்பாக மதுரையில்
நடைபெற்றுள்ளது
சௌந்திரராஜ பாகவதர் – சுமித்திரா
திருமணம்.
அந்த சௌந்திரராஜ பாகவதர் தான், தமிழ் சினிமாவின் பிரபல
பின்னணி பாடகர்
டி.எம்.
சௌந்தரராஜன்.
சௌராஷ்டிரா அய்யர் குடும்பத்தில் பிறந்தவர் சுமித்திரா.
அப்பா நீலமேகமய்யர்.
மணமகள் சுமித்திராவின்
பெரியப்பா பையன் (அண்ணன் முறை)
வெங்கிடாஜலபதி அய்யர் என்பவர் தான் கல்யாணப் பத்திரிகை அச்சடித்து…
தனது சித்தப்பா மகள் சுமித்திராவை
சௌந்திரராஜ பாகவதருக்கு
கன்னிகா தானமாக செய்வித்து அந்தக் கல்யாணத்தை
நடத்தி வைக்கிறார்.
“மதுரை தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு 3ஆம் நெம்பர் அகத்திலிருக்கும்
அ. மீனாட்சி அய்யங்கார் திருதிய புத்திரன் சௌந்திரராஜ
பாகவதருக்கு” எனப் பத்திரிகை வாசகம்
கட்டியம் கூறுகிறது.
ஆக
மணமகள் சுமித்திரா
சௌராஷ்டிரா அய்யர்.
மணமகன்
சௌந்திரராஜ பாகவதர் சௌராஷ்டிரா அய்யங்கார்.
இருவருக்கும்
28.03.1946 (குருவாரம்)
வியாழக்கிழமை
அன்று…
மதுரை
மஞ்சனக்காரத் தெரு
14ஆம் நெம்பர் வீட்டில் விவாஹம்
நடந்தேறுகிறது.
அந்த விவாஹ
முஹூர்த்தப்
பத்திரிகையில்
மணமகளின்
பெரியப்பா மகனான வெங்கிடாஜலபதி அய்யர் பெயருக்குக் கீழே மீனாட்சி பிளவர் மில்ஸ், சீயக்காய் பவுடர் வியாபாரம் என்றுள்ளது.
அதற்குக் கீழே உள்ள ஒரு வரி தான் நம்மை
மிகவும் ஆச்சர்யப்படவும் சற்றே யோசிக்கவும்
வைத்தது.
“N.B.: தங்கள் ரேஷன் அரிசியை இரண்டு தினங்களுக்கு முன்னதாகவே அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறேன்.” என்றிருக்கிறது.
இந்த வேண்டுகோள் வார்த்தைப் புதிதாகவும் புதிராகவும் இருக்கிறது அல்லவா???
டி.எம்.எஸ். மகன்
செல்வக்குமாரிடம்
இது குறித்துக் கேட்டோம். செவி வழிச் செய்தியாக நான் அப்போது கேள்விப்பட்டது தான். தனக்கு முழு விபரம் தெரியாதெனச் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
“1946ஆம் ஆண்டுக்கு
முன்னதாக நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் உணவுப் பொருள் உற்பத்திப் பஞ்சம்
உருவானது. 1939 முதல் 1945 வரை
ஆறு ஆண்டுகள்
அந்தப் போர் நிகழ்ந்தது.
பிரிட்டிஷ் ஆட்சியின்
கீழிருந்த இந்தியாவில் உணவுப் பொருட்கள்
பற்றாக்குறையும்
உணவுப் பஞ்சமும்
தொடர்ந்தது.
அப்போது அரிசி உட்பட உணவு தானியங்களுக்குக்
கடுமையான லெவி முறையைக் கொண்டு வந்தது பிரிட்டிஷ் அரசு.
அதனால் குறிப்பிட்ட அளவுக்கு மேல்
அரிசியோ கோதுமையோ
வைத்துக் கொள்ள முடியாது.
அதற்காகக்
கல்யாண வீட்டில் சோறு பொங்கி
விருந்து வைக்காமல் இருக்க முடியுமா என்ன???
அதனால் அந்தக் காலக்கட்டத்தில்
கல்யாணப் பத்திரிகையில்
“முன்னதாகவே ரேஷன் அரிசி கொண்டு வந்து
கொடுக்கவும்.” என்று அச்சிட்டுக் கொடுப்பதும் கல்யாண வீட்டார் ரேஷன் அரிசி பெற்றுக் கொள்வதும் வழக்கமாக இருந்துள்ளது.
அந்த ஒரு வரி இருந்தால் தான்
கல்யாண விருந்தின் போது கண்காணிக்க வருகின்ற “லெவி ஆபீசர்களிடம்” இருந்து தப்பிக்கவும் முடியும்.
இது அந்தக் காலக்கட்டத்தில்
மதுரையில் எல்லா சமூகத்தினரின் கல்யாணப் பத்திரிகையிலும் இடம் பிடித்திருந்த வாசகம் என்று என் அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன் நான்.” எனச் சொல்கிறார்
டிஎம்எஸ் குறித்து நிறைய அறிந்து வைத்திருப்பவரான மதுரை எல். ஆர். சுப்பிரமணியன்.
@ ஸ்ரீரங்கம்
திருநாவுக்கரசு