“குடிமகன்களுக்கு ஓர் நற்செய்தி… கூடுதல் காசு கேட்டால் இதை செய்யுங்க…..
“குடிமகன்களுக்கு ஓர் நற்செய்தி… கூடுதல் காசு கேட்டால் இதை செய்யுங்க…..
“குவாட்டருக்கு” 30 ரூபாய் அதிகம் வசூலித்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு 11ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு. நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் மதுபான கடைகளில் பாட்டிலில் குறிப்பிட்ட எம்.ஆர்.பி. விலையை விட பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. அதே போல் வாங்கும் சரக்குகளுக்கு பில்லும் கொடுப்பது இல்லை.
இது குறித்து தட்டிக்கேட்டால் அரசு கடையில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தகராறு செய்தார் என்று கேள்வி கேட்டவருக்கு ஆப்பு வைக்கப்படுகிறது.
இதனால் கடைக்கு வரும் பெரும்பாலான குடிமகன்கள் கூடுதல் காசை விதியே என கொடுத்து விட்டு சரக்கை வாங்கி செல்கின்றனர்.
இது போன்ற நிகழ்வால் பாதிக்கப்பட்ட குடிமகன் ஒருவர் செய்த சிறப்பான சம்பவம் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ஆப்பு வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
திருநெல்வேலி சந்திப்பு மணிமூர்த்தீஸ்வரம் என்ற பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். கடந்த 23.06.20 அன்று மேல அம்பாசமுத்திரம் என்ற பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் குவாட்டர் பிராந்தி வாங்கினார். அப்போது அந்த பாட்டிலில் 160 ரூபாய் என்று எம்.ஆர்.பி இருந்தது. ஆனால் கடை ஊழியரோ 190 ரூபாய் பெற்றுக்கொண்டு சரக்கை கொடுத்துள்ளார்.
இதனால் கடுப்பான வாடிக்கையாளர் வேல்முருகன்,பில் கேட்டார். சிறிது நேரம் காக்க வைக்கப்பட்டு 160 ரூபாய்க்கு பில் வழங்கப்பட்டது.
190 ரூபாய்க்கு பில் வேண்டும் இல்லையேல் 30 ரூபாயை திருப்பி தரவேண்டும் என்று வேல்முருகன்,ஏழரையை கூட்டினார். கடை ஊழியர்கள் அவரை அப்புறப்படுத்தினர்.
ஆனால் சம்பவம் முழுவதையும் தனது செல்போனில் வேல்முருகன் பதிவு செய்தது ஊழியர்களுக்கு தெரியாமல் போனது.
வீட்டுக்கு வந்த வேல்முருகன், டாஸ்மாக் சம்பவத்தால் மன உளச்சல் அடைந்தார்.
மறுநாள் காலையில் முதல் வேலையாக திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் டாஸ்மாக் கடையில் 30 ரூபாய் கூடுதலாக வாங்கியதாலும்,கடை ஊழியர்கள் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதாலும் ஏற்பட்ட மன உளச்சலில் விடியும்வரை தூங்கவில்லை.
இதனால் காலையில் தலைவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்றேன்.
எனவே இதற்கு காரணமாக இருந்த டாஸ்மாக் கடை நிர்வாகம் எனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட வேல்முருகனுக்கு இழப்பீடாக 10 ஆயிரம் ரூபாயும் வழக்கு செலவினமாக ஆயிரம் ரூபாயும் ஆக 11ஆயிரம் ரூபாயை சம்பந்தப்பட்ட கடை சூப்பர்வைசர், வேல்முருகனிடம் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டது.
என்ன..குடிமகன்களே….சாரி….மதுப்பிரியர்களே….சரக்கு வாங்க போனா…பில் கேளுங்க….
செல்போன்களையும் ஆன் செய்து வச்சுக்கோங்க….சரியா…
-அரியலூர் சட்டநாதன்