ஆர்.எஸ்.பாரதிக்கு அலுமினிய தட்டு பார்சசசசசல்…. பாஜகவினர் நூதன முயற்சி
ஆர்.எஸ்.பாரதிக்கு அலுமினிய தட்டு பார்சசசசசல்…. பாஜகவினர் நூதன முயற்சி
பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை “மெண்டல்’என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விமர்சனம் செய்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவருக்கு அலுமினிய தட்டு அனுப்பும் நூதன போராட்டத்துக்கு பா.ஜ.க அழைப்பு விடுத்துள்ளது.
திருநெல்வேலியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர் .எஸ் .பாரதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தமிழக ஆளுநர் ஆர் .என். ரவி மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை ஆகியோரின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்தார் . ஒரு கட்டத்தில் ஆளுநரையும் அண்ணாமலையையும் மெண்டல்கள் என்றும் விமர்சித்தார்.
இதற்கு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை பதில் தெரிவிக்கும்போது கோபாலபுரம் மற்றும் அறிவாலயம் வாசலில் அமர்ந்து பிச்சை எடுப்பவர்தான் ஆர். எஸ். பாரதி, அவர் அப்படித்தான் பேசுவார் என்று தெரிவித்தார்.
இதற்கு பதில் தெரிவித்த ஆர் .எஸ். பாரதி , கோபாலபுரம்… அறிவாலயம் எனது கோவில் என்று தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்துள்ளது.
அறிவாலயம் கோவில் என்றால் கோவில் வாசலில் அமர்ந்திருப்பவர் பிச்சைக்காரர் தானே என்று பொருள்படும் வகையில் ஆர். எஸ். பாரதிக்கு அலுமினிய தட்டுகளை அனுப்பும் நூதன போராட்டத்தை பாரதிய ஜனதா கட்சி முன்னெடுத்துள்ளது அந்தந்த மாவட்ட நிர்வாகிகள், திமுக அமைப்பு செயலாளர் பாரதியின் சென்னை நங்கநல்லூர் வீட்டு முகவரிக்கு அலுமினிய தட்டுகளை அனுப்ப வேண்டும் என்று மறைமுக உத்தரவு பாஜக தலைமையிடம் இருந்து வந்துள்ளது.
அதன் அடிப்படையில் முதல் தட்டுகள் அனுப்பும் போராட்டத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தனர்.
காஞ்சிபுரம் பாரதிய ஜனதா கட்சி ஊடகப்பிரிவு செயலாளர் காமேஷ் மாவட்டத் துணைத் தலைவர் செந்தில்குமார் செயலாளர் வாசன் உள்ளிட்டோர் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு செய்து விட்டு ஆர்.எஸ். பாரதிக்காக ஐந்து அலுமினிய தட்டுகளை வாங்கி அவற்றை கொரியர் பார்சல் மூலம் ஆர். எஸ். பாரதிக்கு அனுப்பினர்.
தமிழக அரசியலில் பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை, தனது பேச்சுக்களால் தினமும் ஊடகத்தில் வரும் நபராக விமர்சிக்கப்படும் நபராக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவரது அறிவுரையின் பேரில் அறிவிக்கப்பட்டுள்ள அலுமினிய தட்டு போராட்டத்துக்கு ஆர் எஸ் .பாரதி ,என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்….
-அரியலூர் சட்டநாதன்