அங்குசம் பார்வையில் ‘மியூசிக் ஸ்கூல்’
தயாரிப்பு & டைரக்ஷன்: பாப்பாராவ் பைய்யாலா. இசை: இசைஞானி இளையராஜா. நடிகர்—நடிகைகள்: ஸ்ரேயா சரண், ஷர்மான் ஜோஷி, பிரகாஷ்ராஜ், லீலா சாம்சன். இவர்கள் தான் நமக்குத் தெரிந்த முகங்கள். ஏன்னா இதில் நடித்திருக்கும் குழந்தைகள், நடிகர்—நடிகைகள் பெரும்பாலும் இந்தி, தெலுங்கு முகங்கள். ஒளிப்பதிவு: கிரண் டியோஹன்ஸ், ஆர்ட் டைரக்டர்: ராஜீவ் நாயர், தமிழ் வசனம்: கே.என்.விஜயகுமார், பாடல்கள்: பா.விஜய், எடிட்டிங்: அமோல் திலீல் குஞ்சால்.
ஹைதரபாத்தில் பணக்கார வர்க்க மாணவர்கள் படிக்கும் பள்ளி அது. பள்ளியிலும் வீட்டிலும் எப்போதும் ”படி படி” என படுத்தி எடுக்கிறார்கள். இதுபோக நீட், ஜீட் என்று எண்ட்ரன்ஸ் எக்ஸாமுக்கும் பெற்றோர் தயார்படுத்த பாடாய்படுத்துவதால், குழந்தைகளுக்கு ஒருவித டிப்ரெஷன் உண்டாகிறது.
இந்த நேரத்தில் அந்தப் பள்ளிக்கு மியூசிக் டீச்சராக வருகிறார் ஸ்ரேயா. ஆரம்பத்தில் மியூசிக் மீது ஆர்வம் காட்டாத குழந்தைகள், ஸ்ரேயா தனியாக மியூசிக் ஸ்கூல் ஆரம்பித்ததும் ஆர்வமாக வருகிறார்கள். அவர்களை வைத்து சவுண்ட் ஆஃப் மியூசிக் என்ற கான்செப்டில் ஸ்டேஜ் டிராமாவிற்கு குழந்தைகளை தயார்படுத்துகிறார் ஸ்ரேயா. இதனால் டென்ஷனாகும் பெற்ரோர்கள், குழந்தைகளிடம் கண்டிப்புகாட்ட, கோவாவுக்கு அழைத்துப் போகிறார் ஸ்ரேயா. அங்கே டிராமாவுக்கு தயார்படுத்துகிறார். ஸ்ரேயாவின் சவுண்ட் ஆஃப் மியூசிக் கனவு நிறைவேறியதா என்பதைச் சொல்வது தான் இந்த ‘மியூசிக் ஸ்கூல்’.
டைட்டிலையே மியூசிக் ஸ்கூல் என வைத்த பிறகு வசனத்தை நம்பாமல் இசைஞானியை மட்டுமே நம்பி களம் இறங்கிவிட்டார் டைரக்டரும் தயாரிப்பாளருமான பாப்பாராவ் பைய்யாலா. படத்தின் மொத்த வசனமும் பத்து பக்கங்களுக்கு மேல் இருந்தால் ஆச்சர்யம் தான். அதே நேரம் படத்தின் இடைவேளை வரை எல்லோருமே எதற்கெடுத்தாலும் பாட்டுப் பாடிக்கொண்டே இருப்பது கொஞ்சம் ஓவர் தான்.
ஆனால் இடைவேளைக்குப் பிறகு இசைஞானியின் ராஜாங்கம் தான் போங்க. மன அழுத்தத்தால் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறுகிறான் ஒரு சிறுவன். டேபிளில் இருக்கும் அந்தக் கடிதத்தை அவனது தாய் கையில் எடுத்ததும் ஒரு பிட் போட்டிருப்பாரு பாருங்க. அதே போல் கிறிஸ்துமஸ் பாட்டு, கோவாவில் இளம் காதலர்கள் கைகோர்த்து ஆடும் போது ஒரு பிட்டு, ஸ்டேஜ் ஷோவில் செம மாஸ்& க்ளாஸான இசைக்கோர்ப்பு, க்ளைமாக்சில் ரோலிங் டைட்டில் ஓடும் போது வீணையில் ஆரம்பித்து, க்ளாசிக்கல்லில் எண்ட்ரியாகி, தரை லோக்கலில் கிட்டத்தட்ட இரண்டரை நிமிடம் நமக்குள் இறங்கிவிட்டார் இசைஞானி இளையராஜா.
போலீஸ் கமிஷனராக பிரகாஷ்ராஜ், இவரது தாயாக லீலா சாம்சன், ஓவிய ஆசிரியராக ஷர்மான் ஜோஷி, என எல்லோருமே நிறைவு என்றாலும் மெயின் கேரக்டருக்கு மிகச்சரியாக பொருந்தி, கச்சிதமாகவும் நடித்திருக்கிறார், கச்சை அளவுக்கு காஸ்ட்யூமிலும், பாடி ஃபிட்டிங்கிலும் மனசை அள்ளுகிறார் ஸ்ரேயா சரண்.
இசைஞானம் உள்ளவர்களுக்கு இந்த ‘மியூசிக் ஸ்கூல்’ பெரும் இசை விருந்து. சாதாரண இசை ரசிகனுக்கு பேரின்பம்.
–மதுரைமாறன்