5-ஆவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்!!
5-ஆவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்!!
வெற்றிக் கோப்பையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ்வெற்றிக் கோப்பையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ்
முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 5 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. மழை காரணமாக சென்னை அணி வெற்றி பெற 15 ஓவரில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதனை கடைசி பந்தில் எடுத்து சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இறுதிப் போட்டி திட்டமிட்டபடி மே 28 ஞாயிறு அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று முன் தினம் போட்டி தொடங்கியபோது மழை தொடர்ந்து நீடித்தது. இதனால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் தடைபட்டு போட்டி மறுநாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து 29.05.2023 இரவு ஆட்டம் தொடங்கியபோது முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடியபோது 3 பந்து மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழை பெய்ய ஆரம்பித்தது.
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆட்டம் தடைபட்டிருந்த நிலையில் நள்ளிரவு 12.10க்கு ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு, ஓவர்கள் 15 ஆகவும், வெற்றி இலக்கு 171 ரன்னாகவும் மாற்றி அமைக்கப்பட்டது.
சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் 26 ரன்னும், டெவோன் கான்வே 47 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான தொடக்கத்தை அணிக்கு அளித்தனர்.
அடுத்து வந்த அஜிங்யா ரஹானே அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 2 பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்து வெளியேறினார். அம்பதி ராயுடு 2 சிக்சர் 1 பவுண்டரியுடன் 19 ரன்கள் எடுத்து அணியின் ரன் குவிப்புக்கு உதவினார்.
கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றி பெற 13 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை மோகித் சர்மா வீச முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. 2, 3 மற்றும் 4 ஆவது பந்துகளில் தலா 1 ரன்கள் எடுக்கப்பட 5 ஆவது பந்தை சிக்சருக்கு அனுப்பினார் ஜடேஜா. கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டபோது, அதனை பவுண்டரியாக மாற்றி ஜடேஜா அணியை வெற்றி பெற வைத்தார். நேற்று முன்தினம் இரவு ஆரம்பித்த ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று நள்ளிரவு 1.35-க்கு முடிந்துள்ளது.