கரூர் வைகாசி திருவிழா ! சபாஷ் வாங்கிய போலீசார் !
கரூர் வைகாசி திருவிழா ! சபாஷ் வாங்கிய போலீசார் !
கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா பிரசித்தி பெற்றது. சமயபுரம் மாரியம்மன் திருவிழாவுக்கு அடுத்தபடியாக, விமர்சியாக கொண்டாடப்படும் திருவிழாவாக அதிக மக்கள் கூடும் திருவிழாவாக இது கருதப்படுகிறது.
கொரானா கால ஊரடங்கு காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளாக சம்பிரதாயமான வைகாசி திருவிழாவாக நடந்து முடிந்தது. இவ்வாண்டு பழைய உற்சாகத்தோடு, முந்தைய ஆண்டைவிட அதிக பக்தர்கள் பங்கேற்ற விழாவாக நடைபெற்றது.
மே-14 ஆம் தேதி கம்பம் நடும் விழா தொடங்கி, மே-31 கம்பம் ஆற்றில் விடும் விழா அதனைத்தொடர்ந்து, ஜூன் 11 வரையில் பல்வேறு சம்பிரதாயங்களோடு வைகாசி திருவிழா நிறைவுறும். மே 29,30,31 ஆகிய நாட்களில் வெளியூரைச் சேர்ந்த பக்தர்கள் பலரும் பங்கேற்கும் நாட்களாக அமைந்திருந்தது. குறிப்பாக, கம்பம் ஆற்றில் விடும் நிகழ்வு நாளான மே-31 அன்று கரூர் அமராவதி ஆறு மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.
கிரைம் ஏரியாவில் கரூர் போலீசை நாம் குறை சொல்லியிருந்தாலும், இலட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடும் திருவிழாவை குறிப்பிட்டு சொல்லும்படியான சொதப்பல்கள் இன்றி வெற்றிகரமாக நடத்தி காட்டியதற்காக நிச்சயம் சபாஷ் சொல்லித்தான் ஆகவேண்டும்.
கம்பம் ஆற்றில் விடப்படும் நாளான மே-31 அன்று, வழக்கத்தைவிட போலீசார் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மதியம் 12 மணி வாக்கிலேயே, பல்வேறு ஊர்களிலிருந்து போலீசார் வாகனங்களில் கரூரை வந்தடைந்தனர்.
உள்ளூரைச் சேர்ந்த ’இளவட்டங்களின்’ தெனாவெட்டு சமாச்சாரங்களையெல்லாம் அசால்ட்டாக கையாண்டனர் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார்.
பலர் சாதாரண உடையிலும், நடைபாதை முழுக்க சீருடையில் நடந்தவாறே ரோந்தும் சென்றுவந்தபடியே இருந்தனர். இதனால், ஆங்காங்கே ‘கெத்து’ காட்ட முயன்ற இளசுகளை கொத்தாக நாலு சாத்து சாத்தி அள்ளி சென்று அப்புறப்படுத்தினர். அலப்பறையில் சிக்கி போலீசில் அடி வாங்கிய இளசுகள் சிலர், திருவிழாவுக்காக உடுத்திய ஒரே மாதிரியான உடையைகூட கழற்றி போட வேண்டிய நிலைக்கு ஆளாயினர்.
இருந்தாலும், ஆங்காங்கே சின்ன சின்ன சலசலப்புகளுக்கும் பஞ்சமில்லை. குறிப்பாக, ஆற்றில் போலீசாரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. பெரிய ராட்டிணம் ஏறி சுற்றுவதற்கு அவ்வளவு கூட்டம் அலைமோதியது. ஒரே நேரத்தில் நூறுபேர் அமர்ந்து சுற்றும் ராட்டிணம் அது.
“எட்டு மணிக்கு டிக்கெட் வாங்கிட்டு. பத்து மணிக்குதான் ராட்டினம் ஏறுனோம். டிக்கெட் வாங்க ஒரு கூட்டம். டிக்கெட் வாங்கிட்டு ராட்டினம் ஏற ஒரு கூட்டம். தள்ளுமுள்ளு வேற. குடும்பத்தோட வந்து மாட்டிகிட்டோம். ராட்டினமே வேண்டாம்னு திரும்பி போகவும் முடியாது. சரியா ஒன்றரை மணிநேரமா மூச்சுக்கூட விடமுடியாத நெரிசல்ல சிக்கி தவிச்சோம். ராட்டினங்கிறதால எல்லாம் வயசு பசங்களா வந்ததால தப்பிச்சோம்.
இதே, குழந்தைகுட்டி பெரியவங்களோட வந்திருந்தா நிச்சயமாக மூச்சுத்திணறி உயிர்பலி ஏற்பட்டிருக்கவும் வாய்ப்பிருக்கு. ராட்டினம் சுத்துனதவிட, ராட்டினம் ஏறி சுத்தறதுக்கு நாங்க பட்ட பாடு வாழ்நாள் முழுக்க மறக்காது.” என்கிறார், திருச்சியிலிருந்து கரூர் விழாவை காண வந்த பக்தர் ஒருவர்.இதில், ராட்டினம் சுற்றி முடித்து வெளியேறும் வழியாக நின்றுகொண்டு, அந்த வழியாக உள்ளே அனுமதிக்க வேண்டுமென்று அலப்பரையில் உள்ளூர் இளசுகள் கொடுத்த அலம்பல், இறுதியில் அடிதடியில் முடிந்தது. கல்லையும் நாற்காலிகளையும் எடுத்து வீசியெறியும் அளவுக்கு போனது. போலீசார் தலையீட்டில் பெரிய அசம்பாவிதம் தடுத்து நிறுத்தப்பட்டது.
“கம்பம் ஆற்றில் விடும் நிகழ்வுக்கு எப்போதும் கூட்டம் அலைமோதும். சாயங்காலம் 6 மணியில இருந்து 12 மணி வரைக்கும் ஒரு நிமிசம்கூட ஓய்வு இல்லாம இந்த ராட்டிணம் சுத்திட்டு இருக்கு. ஒரு முறைக்கு நூறு பேர் வரை ஏத்துறாங்க. ஆளுக்கு நூறு ரூபா டிக்கெட். ஒரு மணி நேரத்துக்கு எப்படியும் குறைஞ்சது பத்து முறை எடுத்துருவாங்க. ஆக, ஒரு மணி நேரத்துக்கு ஏறத்தாழ ஒரு லட்ச ரூபாய் கட்டணம் வசூல் ஆகிடுது. ஆனா, பாதுகாப்பு கேள்விக்குறிதான்.
வரிசைய ஒழுங்குபடுத்தக்கூட ஆள் இல்லை. டிக்கெட் விக்கிறதும், ராட்டினத்தை இயக்கிறதும் தான் அவங்க பொறுப்புனு நடந்துக்கிறாங்க. ஒண்ணு கூட்ட நெரிசல்ல சிக்கியோ, இல்ல இடைவிடாம இயக்குறதால பழுதாகி விபத்தோ ஏற்பட நிறைய வாய்ப்பிருக்கு.” என எச்சரிக்கிறார், கரூரைச் சேர்ந்த மற்றொருவர்.
அடுத்த முறை, ஆற்றில் போதுமான போலீசார்களையும், இதுபோன்று மக்கள் அதிகளவில் குவியும் பொழுதுபோக்கு விளையாட்டு கூடங்களிலும் போலீசாரை நிறுத்தி அவற்றை ஒழுங்கப்படுத்த வேண்டுமென்பதே கரூர் மக்களின் எதிர்பார்ப்பு.
– தி.அ.குகன்.