விழுப்புரம் பேருந்துநிலையத்திற்கு இரவு நேரத்தில் போறீங்களா ? உசார்.. மக்களே !

0

விழுப்புரம் பேருந்துநிலையத்தில் அடாவடி திருநங்கைகள் !

இறப்பு நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுவிட்டு, திருச்சி பேருந்துக்காக விழுப்புரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது நேரம் நள்ளிரவை தாண்டியிருந்தது. விழுப்புரம் பேருந்து நிலையம் சென்று வந்தவர்கள் நிச்சயம் கவனிக்கத்தவறாத விசயம் ஒன்று திருநங்கைகள் மற்றொன்று கும்மிருட்டில் மூடிக்கிடக்கும் பெரும்பாலான பேருந்து நிலையக் கடைகள். குறிப்பாக, இரவு நேரங்களில் கும்பலாக இவர்கள் கூடி கும்மாளமிடுவதும்; பயணிகளிடம் முகம்சுளிக்கும் வகையில் அநாகரிகமாக நடந்துகொள்வதும் இங்கு இயல்பான ஒன்று.

அன்றைய இரவும் அதே கூத்துகள் நடந்தேறியது. ஆனால், இந்தமுறை அருவெறுப்பான அணுகுமுறையோடு, வழிப்பறி என்ற குற்றச்சாட்டும் சேர்ந்திருந்தது.

அந்த நள்ளிரவில் - விழுப்புரம் பேருந்து நிலையம்
அந்த நள்ளிரவில் – விழுப்புரம் பேருந்து நிலையம்
- Advertisement -

- Advertisement -

”மெட்ராஸ்ல இருந்து வாரேன். போனவாரம்தான் எங்க அப்பா ஆக்ஸிடென்ட்ல இறந்தாரு. அவரோட போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் வாங்குறதுக்காக ஊருக்கு போறேன். டீ குடிக்க வந்த என்கிட்ட நாலஞ்சு பேரு ஒன்னா சேர்ந்து பாக்கெட்ல கைய விட்டு துலாவுனாங்க. சிகரட் பாக்கெட்ட எடுத்துகிட்டாங்க. அவங்க போனப்புறம் வந்து பாக்குறேன் பேண்ட் பாக்கெட்ல இருந்த ஆயிரம் ரூபாய காணோம்.” என அழாத குறையாக சொல்லி முடித்தார். “திரும்ப போயிட்டு கேட்டேன். அசிங்கமா திட்றாங்க. சிகரெட்டதான் எடுத்தோம்னு, காலி பாக்கெட்ட தூக்கி கடாசுறாங்க. இவங்ககிட்ட சண்ட போட்டா நமக்குதான் அசிங்கம். பார்க்கிறவங்க நம்மளதான் தப்பா நினைப்பாங்க…” என்று சோகத்தோடு அமர்ந்துவிட்டார்.

அதற்குள், பேருந்து நிலையத்தில் ஒரே கூச்சல். இளைஞர் ஒருவரை சூழ்ந்து கொண்டு திருநங்கைகள் கும்பலாக கூடி அவரை சிறப்பு சொற்களால் அர்ச்சணை செய்து கொண்டிருந்தார்கள். வேடிக்கை பார்த்து நின்றிருந்த கூட்டத்தினரையும் விட்டு வைக்கவில்லை. ஆபாசமான முறையில் ஆடையை தூக்கி காண்பித்தும், அச்சில் ஏற்ற முடியாத சிறப்பு வார்த்தை பிரயோகங்களிலும் அவ்வளவு பேச்சும் பேசி அலப்பறை கொடுத்தனர்.

விழுப்புரம் பேருந்து நிலையம்
விழுப்புரம் பேருந்து நிலையம்

”சேலத்துக்கு போகனும். யாருகிட்டயும் தப்பாலாம் போகல. டீ கடைக்கு போற வழி இருட்டா இருந்துச்சு. அந்த வழியா போறப்ப கும்பலா நின்னு மறிச்சு. என்கிட்ட இருந்த 2500 ரூபாய எடுத்துகிட்டாங்க. இப்போ பஸ்க்கே காசு இல்லை. இங்க வந்துதான் ஏ.டி.எம்.ல 2500 எடுத்தேன். ரெசிப்ட் கூட இங்க இருக்கு பாருங்கனு.” பாவம் அழுதேவிட்டார் அந்த நபர்.

4 bismi svs

“நீ என்ன பெரிய நாட்டாமையா? பஞ்சாயத்து தீத்து வைக்க போறியா? யார்ட்டயோ ஏமாந்துட்ட எங்கள கை காட்றியா? யாரு உன்கிட்ட காச எடுத்தா? ஆள காட்டு?”னு அத்தனை கூட்டத்திற்கு மத்தியிலும் அவ்ளோ திமிராக பேசினார் அந்த திருநங்கை. திரும்ப திரும்ப கும்பலாக கூடி, அந்த நபரை அர்ச்சித்துவிட்டு ஓரமாக நின்று நக்கலாக சிரித்துக்கொண்டேயிருந்தனர் திருநங்கைகள்.
அதற்குள், பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவர் போலீசுக்கு தகவல் சொல்ல போலீசும் வந்தது. என்ன நடந்தது? என்ன பிரச்சினை? என பேருந்து பயணிகள் ஒருவரிடமும் கேட்கவில்லை. நேராக, திருநங்கைகள் கும்பலாக நின்று கொண்டிருந்த இடத்திற்கே சென்று, என்னமோ உறவினர்களிடம் துக்கம் விசாரிப்பது போல அவர்களிடம் அவ்வளவு அக்கறையாக விசாரித்தார்கள் இரண்டு ரோந்து போலீசார்.

அவ்வளவுதான், வந்த வேகத்தில் கடமை முடித்து திரும்பினர். போலீசார் சென்ற கொஞ்ச நேரத்தில் முதலில் ஏமாந்த நபருக்கு ஆயிரம் முழுவதும் வந்து சேர்ந்தது. இரண்டாவதாக ஏமாந்து அழுத நபருக்கு ஆறுதலாக, பயணச்செலவுக்கு மட்டுமே பணம் கிடைத்தது. திருநங்கைகளுக்கும் பேட்ரோல் போலீசுக்கும் என்ன டீலிங்கோ?

அதையெல்லாம் விடக்கொடுமை. அந்த சேலத்துகார ஆசாமி, “எங்க மச்சினன். கள்ளக்குறிச்சில எஸ்.ஐ.ஆ இருக்காரு.” என பேச்சுவாக்கில் சொன்னதுதான் தாமதம், “எஸ்.ஐ. என்ன எஸ்.பி.கிட்டயே பேசுறியா?”னு ஆரம்பிச்சு அவரை தெரியுமா? இவரை தெரியுமா? என்று உயர் போலீசு அதிகாரிகளின் பெயர்களை அவர்களின் பதவியோடு பட்டியலிடுகிறார், அந்த திருநங்கை.
வேடிக்கை பார்த்த கூட்டத்துக்கே அத்துனை சிறப்பு அர்ச்சணை. இதில் நாம் செல்போன் கையுமாக வீடியோ எடுத்து வேறு அசிங்கப்பட வேண்டுமா என கூட்டத்தில் கூட்டமாக தூரத்தில் நின்று வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது.

”பாவப்பட்டதுங்கன்னு இரக்கம் கூட வராது இதுங்க பன்றதெல்லாம் பார்த்தால். வருசா வருசம் இந்த மாவட்டத்துல இருக்க கூத்தாண்டவர் கோயில்ல அவ்ளோ விசேசமா இருக்கும். எங்கெங்கெல்லாம் இருக்க திருநங்கைங்களாம் வருவாங்க. ஊரு சனம் அவ்ளோ மதிப்பு கொடுக்கும். அவங்கள தெய்வமா கும்பிடுவாங்க. இதுங்க என்னடான்னா இப்படி பன்னிட்டு இருக்குங்க?” என ஆதங்கப்பட்டனர் பயணிகள் சிலர்.

”பஸ்டாண்டே பாழடைஞ்ச எடம் மாரிதான் கெடக்கு. கடகண்ணி பக்கம்பக்கமா இருந்தா பரவால. பஸ்டாண்டுக்குள்ள பாதி கடைங்க மூடி கெடக்கு. பஸ்டாண்டு உள்ளேயும் சுத்தி வெளியேயும் இருட்டா புதர் மாதிரிதான் கெடக்கு. இதுங்களுக்கு ரொம்ப வசதியா போச்சு.” என்றார், அருகிலிருந்த மற்றொருவர்.

அங்கேயிருந்த பேருந்து ஓட்டுநர் நடத்துனர்களும் பப்ளிக்காக நடந்த இந்தக்கூத்துக்களை கண்டும் காணாமல் கடந்துதான் சென்றனர். அங்கேயே முகாமிட்டிருந்த நேரம்கண்காணிப்பாளர்கள்கூட, அமைதியாக அவர்கள் வேலையை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தனர். திருநங்கைகளின் எதிர்வினை எப்படியிருக்கும் என்பதை அன்றாடம் பார்ப்பவர்களாயிற்றே?
”விழுப்புரத்துலனு இல்லை. தமிழ்நாட்ல எல்லா பஸ்டாண்ட்லயும் இப்படித்தான் பன்றாங்க. நாங்களும் எவ்ளோதான் கண்டிக்கிறது? எங்ககிட்டயே ஆபாசமாத்தான் நடந்துப்பாங்க. பப்ளிக்கா வச்சி இவங்கள கேள்வி கேட்கக்கூட முடியல. கும்பலா வந்துடறாங்க. போலீஸ்டேஷன் கூட்டிட்டு போனாலும் பிரச்சினை ஆயிடுது. மாவட்ட நிர்வாகத்தோட பேசி இவங்களுக்கு வருமானத்துக்கு மாற்று ஏற்பாடு செய்றதுக்கும் முயற்சி செஞ்சி பாத்துட்டோம். ஒன்னும் கதைக்காகல…” என ரொம்பவே நொந்துகொண்டார் போலீசு அதிகாரி ஒருவர்.

விழுப்புரம் மாவட்ட டி.எஸ்.பி. சுரேஷ் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினோம். நாம் முன்வைத்த குற்றச்சாட்டை பொறுமையாக கேட்டுக்கொண்டவர், “நான் நேற்றுதான் இங்கே டி.எஸ்.பி.யா ஜாயின்ட் பன்னியிருக்கேன். இன்னைக்கு நைட்டே நான் ரவுண்ட்ஸ் போக சொல்றேன். இனி நீங்க சொன்ன மாதிரியான புகார் வராமல் பார்த்துக்கொள்கிறேன்.” என்றார், பொறுப்பாக.
போலீசாரின் லத்தியால் மட்டுமல்ல சமூக நலத்துறையின் முன்னெடுப்புகளோடு சுமுகமாக தீர்க்கப்பட வேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பு.

– மித்ரன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.