மணல் கடத்தல் கும்பலுக்கு ’சல்யூட்’ அடிக்காத எஸ்.ஐ.க்கு தண்டனை !
மணல் கடத்தல் கும்பலுக்கு ’சல்யூட்’ அடிக்காத எஸ்.ஐ.க்கு தண்டனை !
சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை, லாரி சகிதமாக மடக்கிப்பிடித்த ’குற்றத்துக்காக’ எஸ்.ஐ. ஒருவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட விவகாரம் காக்கி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கும்பகோணம் – நாச்சியார்கோயில் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் ஈஸ்வரன். வழக்கமான தனது ரோந்து பணியில், சவுடுமணல் ஏற்றி வந்த லாரி ஒன்றை வண்டுவாஞ்சேரி இரட்டை வாய்க்கால் அருகே வைத்து சோதனையிடுகிறார். விசாரணையில் மாத்தூர் ஊராட்சி மன்றத் துணைத்தலைவரும் அதிமுக பிரமுகருமான சார்லஸ் என்பவருக்குச் சொந்தமான லாரி என்பதும், லாரியில் இருந்த 5 யூனிட் சவுடு மணல் சட்டவிரோதமான முறையில் அள்ளப்பட்டதும் உறுதியாகிறது.
வழக்கமாக, இதுபோன்ற சட்டவிரோத கனிம வளங்கள் கடத்தல் வழக்குகளில் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களிடமிருந்து புகாரை பெற்று வழக்குப் பதிவு செய்வது என்பது பொதுவான நடைமுறை. அதன்படி, வண்டுவாஞ்சேரி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளிக்கிறார். ஆறுமணி நேரம் ஆகியும் அவர் ஸ்டேஷன் பக்கமே வராத நிலையில், கும்பகோணம் தாசில்தார் வெங்கடேசனுக்குத் தகவல் தெரிவிக்கிறார். அதன்பிறகே, போலீசு நிலையம் வந்த கிராம நிர்வாக அலுவலர் ஒப்புக்கு ஒரு புகார் கொடுக்கிறார். கையும் களவுமாக பிடித்துக் கொடுத்தும்கூட, லாரி உரிமையாளரின் பெயரைக்கூட புகாரில் குறிப்பிட்டுச் சொல்லாமல், எழுதப்பட்ட அப்புகாரை வைத்து வழக்குப் பதிவு செய்தால் வழக்கு நீதிமன்றத்தில் ஒன்றுமில்லாமல் போய்விடும் என்பதால் மீண்டும் உயர் அதிகாரிகளிடம் முறையிடுகிறார், எஸ்.ஐ. ஈஸ்வரன்.
”நீதானே புடிச்ச, நீயே வழக்குப் போட்டுக்க” என்று மணல் கடத்தல் காரர்களுக்குச் சாதகமாக, தாசில்தாரே பேசுகிறாரே, என்று கோட்டாட்சியர் பூர்ணிமாவின் கவனத்திற்கு கொண்டு செல்கிறார். முதலில் பார்க்கிறேன், என்றவர். அடுத்த அழைப்பில், “உங்களுக்கு என்னதான் வேண்டும்?” என்பதாக அவரும் எகிறியிருக்கிறார்.
எஸ்.ஐ. ஈஸ்வரன், தாசில்தாரிடமும், கோட்டாட்சியரிடமும் பேசிய ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், எஸ்.ஐ. ஈஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் தாசில்தார் வெங்கடேசன் புகார் அளித்திருக்கிறார். இதனையடுத்தே, எஸ்.ஐ. ஈஸ்வரனை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கிறார், எஸ்.பி. ஆசீஷ் ராவத்.
பாவம், பிழைக்கத் தெரியாத மனிதர் எஸ்.ஐ. ஈஸ்வரன். மணல் கடத்தல் லாரியை மடக்கிப்பிடிக்காமல் ஒரு சல்யூட் அடித்து வழியனுப்பி வைத்திருந்தால், வழக்குக்காக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்யாமல் இருந்திருந்தால் இன்னேரம் பழைய பதவியிலேயே நீடித்திருந்திருப்பார்.
– ஆதிரன்