விழித்திறன் குறைபாடுள்ள கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிகணினி மற்றும் சிறப்புக் கண் கண்ணாடி !
தானமானக் கொடுத்த 10 கோடி ரூபாயிலிருந்துதான் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் 260 கல்லூரிகளில் பயிலுக்கின்ற விழித்திறன்
திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி மாற்றுத்திறனாளி மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் ஹெல்ப் த பிளைண்ட் பவுண்டேசன் அமைப்பு திருச்சி மாவட்ட கல்லூரியில் பயிலும் விழித்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கு இலவச மடிகணினி மற்றும் சிறப்புக் கண் கண்ணாடி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் முதல்வா் ம.ஆரோக்கியசாமி சேவியர் சே.ச. தலைமை வகித்தார். அவர் தம் தலைமையுரையில்,20 ஆண்டுகளுக்கு முன்பு பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு இது போன்ற வசதிகள் கிடையாது. நம் கல்லூரியும் இந்த மாணவர்களுக்கு நிறைய வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளது. தமிழகத்தில் ஹெல்ப் த பிளைண்ட் பவுண்டேசன் அமைப்பின் தொடக்க விதையே சேசு சபைக் கல்லூரியில் தான் தொடங்கியது. உதவி செய்வதற்கும் மனசு வேண்டும்.
தொடா்ந்து உதவி செய்துவருகின்ற இந்த அமைப்பையும் அதன் நிர்வாகிகளையும் மனதாரப் பாராட்டுகிறேன். மேலும், மாணவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்ய இந்த கல்லூரியின் கதவுகள் எப்பொழுதும் திறந்திருக்கும் எனப் பதிவு செய்தார்.
ஹெல்ப் த பிளைண்ட் பவுண்டேசன் அமைப்பின் டிரஸ்டி திரு நரசிம்மன் அவர்கள் முன்னிலை வகித்தார். அவர் உரையில், உலகில் பார்வைத்திறன் குறைபாடுடையோர் 4 கோடிப்பேர் உள்ளனர். இவர்களுள் இந்தியர்கள் கணிசமான அளவில் இருக்கின்றனர். வருங்காலத்தில் இந்த எண்ணிக்கை குறைய வேண்டும்.
ஹாங்காங் நாட்டில் பட்டேல் என்பவர் தன் சொத்திலிருந்து தானமானக் கொடுத்த 10 கோடி ரூபாயிலிருந்துதான் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் 260 கல்லூரிகளில் பயிலுக்கின்ற விழித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு, கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், இலவச மடிகணினி, சிறப்புக் கண் கண்ணாடி போன்ற பல்வேறுவிதமான உதவிளைச் செய்துவருகிறது.
மாணவர்கள் இளங்கலைப் பட்டத்தோடு கணினி சார்ந்த அடிப்படையையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவர்களுக்கு இலவச மடிகணினி வழங்கப்படுகிறது என்பதை எடுத்துக்கூறி முதல்வர் தந்தை அவர்களுடன் இணைந்து மாணவர்களுக்கு இலவச மடிகணினிகளையும், கண் கண்ணாடிகளையும் வழங்கினார்.
மடிகணினியை இயக்குவது குறி்த்து பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜெகந்நாதன் மாணவா்களுக்கு எடுத்துரைத்தார். சிறப்பு கண் கண்ணாடியைப் எப்படி பயன்படுத்துவது குறித்து பயிற்றுநர் பிரகாஷ் விளக்கினார்.
முன்னதாக கல்லூரி மாற்றுத்திறனாளி மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா. முரளி கிருட்டினன் அனைவரையும் வரவேற்றார். நிறைவில் பயிற்சியாளா் சுவாதி நன்றியுரை வழங்கினார்.
– யுகன் ஆதன்