நான் அவனில்லை… பல்கலைகழக பாலியல் பேராசிரியர்… !
தன்னிடம் பயிலும் மாணவிகள் சிலரிடம் சாப்பிட்டியா தூங்கிட்டியா என்ன பன்றனு ஆரம்பிச்சு பாலியல் கேள்விகளோடு தொடரும் வாட்சப் சாட் உரையாடல் குறித்தும்; துறை அலுவலகத்தில்
நான் அவனில்லை… பல்கலைகழக பாலியல் பேராசிரியர்…
மதுரை காமராஜர் பல்கலைகழகத்தை சுற்றி வட்டமடிக்கும் பாலியல் புகார்கள் குறித்தும் நிர்வாக சீர்கேடுகள் குறித்தும் கடந்த இரண்டு இதழ்களில் அடுத்தடுத்து விரிவாக பதிவு செய்திருக்கிறோம். அங்குசம் செய்தியாளர்கள் குழு களத்தில் இறங்கி ஆதாரங்களை திரட்டி வருகிறது என்பதையும் குறிப்பிட்டிருந்தோம். நமது புலனாய்வு செய்திக்கு ஆதரவு இருக்கும் அதேசமயம், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. மிரட்டலாகவும், நட்பின் அடிப்படையிலும் ”பெரிதுபடுத்தாதீர்கள், விட்டுவிடுங்கள் என்கிறார்கள்.”
எதிர்கால தலைமுறையை உருவாக்கும் கல்வி நிலையத்தில் நடைபெறும் அத்துமீறல்களை, அநியாயங்களை இயல்பாக கடந்து சென்றுவிட முடியுமா என்ன? மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் பெயருக்கு களங்கம் கற்பிப்பதோ, வேண்டுமென்றே வீண்பழி சுமத்துவதோ நம் நோக்கமல்ல. பல்கலைகழக மாணவர்கள் தரப்பில் இருந்தும், பேராசிரியர்கள் உள்ளிட்டு ஊழியர்கள் தரப்பில் இருந்தும் நமக்கு குவியும் தகவல்களின், உண்மைத் தன்மையை உறுதிபடுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு நடவடிக்கையில், கிளறக் கிளற நாற்றமெடுத்த செய்திகள் அம்பலமாகி, அதிர்ச்சியூட்டிக் கொண்டிருக்கின்றன என்பதே யதார்த்தம். கடைசி குப்பை அகற்றப்படும் வரையில், நம் களப்பணி தொடரும்…
பேராசிரியர் ஒருவரால் பாலியல் சீண்டலுக்கு ஆளான மாணவியின் புகாரையடுத்து, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர் ’ஒருவரை’, அவரது கருத்துக்காக நேரில் சந்திக்க பல்கலைகழகத்திற்கு சென்றோம். பல்கலையில் அவர் இல்லை. தொலைபேசியில் தொடர்புகொண்டோம். ”செமஸ்டர் விடுமுறை என்பதால், ஜூன்-30 வரை கல்லூரிக்கு வரமுடியாது” என்றார். சரி, இதுதான் விசயம் ஜூன்-30க்கு பிறகு சந்திக்கிறோம் என்றோம்.
சற்று நேரத்தில் திரும்ப அழைத்த அவர், ”பல்கலை கழக வளாகத்திற்குள் வந்துவிட்டேன். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்” என்றார். அப்போது நாம் அங்கிருந்து கிளம்பிவிட்டதால், மறுநாள் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி முன்பாக அவரை நேரில் சந்தித்தோம். தன்னிடம் பயிலும் மாணவிகள் சிலரிடம் சாப்பிட்டியா தூங்கிட்டியா என்ன பன்றனு ஆரம்பிச்சு பாலியல் கேள்விகளோடு தொடரும் வாட்சப் சாட் உரையாடல் குறித்தும்; துறை அலுவலகத்தில் தங்களை சந்திக்க வரும் மாணவிகள் கதவை சாத்திவிட்டுதான் உள்ளே வரவேண்டுமென்று உத்தரவு போட்டது குறித்தும் கேட்டோம். தனக்கு ஆகாதவர்கள் கிளப்பிவிட்ட பொய்த்தகவல் இது. நான் அப்படி செய்யவில்லை. நான் அவன் இல்லை, என்றார்.
”சம்பந்தபட்ட மாணவிக்கு நீங்கள் அனுப்பிய வாட்சப் ஸ்கிரீன்ஷாட்களை கையில் வைத்துக் கொண்டுதான் உங்களை சந்திக்கவே வந்திருக்கிறோம். அடுத்து, இது முதல்முறை அல்ல; ஏற்கெனவே இதேபோல் தங்களிடம் படிக்கும் மாணவிக்கு நீங்கள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளீர்கள் அது நீதிமன்றம் வரை சென்றுள்ளது.”என்றோம். வியர்த்து விறுவிறுக்க பதறிப்போனவர், “அது முடிந்து போன விஷயம். அதற்கு நான் துறை ரீதியாக தண்டனை பெற்று வேடசந்தூர் கல்லூரிக்கு மாற்றப்பட்டேன். அதைப்பற்றி பேசாதீர்கள். தயவு செய்து என்னை விட்டு விடுங்கள்” என்றார்.
நாம் அவரை விடுவதாக இல்லை. ” பல்கலைகழக பேராசிரியர் நியமனத்தில், மாநகராட்சி அரசியல்வாதி ஒருவரின் மனைவி, மதுரை மாநகருக்குள் உள்ள ஒரு கல்லூரி பேராசிரியரின் மனைவி உள்ளிட்டு சிலருக்கு கையூட்டு பெற்றுக்கொண்டு ”பணிநியமன ஆணை” தயாராகிக்கொண்டிருப்பதாகவும், அந்தப் பட்டியலில் உங்களது மனைவியும் இடம்பெற்றிருப்பதாக” சொல்கிறார்களே என்றோம்.
“எனக்கு அதைப்பற்றியெல்லாம் தெரியாது. எனக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது. அதற்காக நான் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறேன். இதனால், எனது தாய் தந்தையரை வேறு இழந்துவிட்டேன். இதோடு என்னை விட்டுவிடுங்கள்” என்று கையெடுத்துக் கும்பிடாத குறையாக கிளம்பிவிட்டார் அந்த பேராசிரியர். ”நான் அவன் இல்லை” என்ற, அந்தப் பேராசிரியரின் பெயர் டாக்டர் சி.ரவிசங்கர். மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில், ஒப்பிலக்கியத்துறை துணைப்பேராசிரியராக பணியாற்றிவருகிறார்.
பல்கலைக்கழகத்தை இழுத்து மூடுங்க…
”ஒரு தாய் பெண் குழந்தை பத்து மாதம் பெற்று வளர்த்து படிக்க வைத்து ஆளாக்கி ஒரு ஆணிடம் கையில் பிடித்து கொடுக்கும் வரை நிம்மதி கிடையாது. எல்லா தாய் தந்தையரின் ஆசை தனது மகள் படித்து பெரிய ஆளாக வேண்டும் நல்ல பதவியில் அமர வேண்டும் என்று தான் நினைத்து கல்லூரிக்கு அனுப்பி வைக்கிறோம்.
மாதா, பிதா, குரு என்று மதிப்புமிக்க ஒரு ஆசிரியரே இவ்வாறு நடந்துகொள்வதை, “சும்மா விடக்கூடாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால், இந்த மாதிரி பெண்களுக்கு அநீதி நடக்குமா இல்லை எடப்பாடி இருந்திருந்தால் இப்படி வேடிக்கை பார்ப்பாரா? இந்த கல்லூரி பேராசிரியர் தண்டிக்கப்பட வேண்டும் இல்லை என்றால் பல்கலைக்கழத்தை இழுத்து மூட வேண்டும். தமிழக அரசு இதில் உடனடியாக தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும். பிள்ளைகளை இழந்துவிடாதீர்கள் “ என ஆவேசமாகிறார், அதிமுக தெற்கு1-ம் பகுதி கழக இணை செயலாளர் பாத்திமா.
அரபுநாடுகளை போல உடல் உறுப்பை…
”படிக்க வரும் பெண் குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்யும் ஆசிரியர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
அப்படி இல்லை என்றால் அரபு நாடுகளைப் போல் உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட வேண்டும். முதல்வர் ஸ்டாலின் ஏன் இப்படி வேடிக்கை பார்க்கிறார் என்று ஒன்றும் புரியவில்லை” என்கிறார், சமூக ஆர்வலர் ராஜா காதர் அலி.
-ஷாகுல், படங்கள் – ஆனந்த்
இந்த வீடியோவை கொஞ்சம் பாருங்கள்.. .
விஸ்வரூபம் எடுக்கும் நியோமேக்ஸ் நிதிநிறுவன மீது புகார் ! திருச்சி அலுவலகங்களில் சோதனை ! #neomax