மாமன்னனும் கொடுங்கோல் மன்னர்களும் !
மாமன்னனும் கொடுங்கோல் மன்னர்களும்
———————————————————
“மாமன்னன்”- இதுவரை நம்மை சிரிக்க வைத்துக் கொண்டிருந்த ‘வைகைப்புயல் வடிவேல்’, நம்மை உணர்ச்சி வசப்பட வைத்த படம். படத்தின் வெற்றி தோல்வியைக் கடந்து, படத்தின் கதை மாந்தர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதை மறுப்பதற்கில்லை.
வழக்கமாக, ஒரு வெற்றிப் படத்தில், கதையுடனும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய கதா மாந்தர்களுடனும் படம் பார்ப்பவர்கள் ஒன்றிப் போவர். அது பெரும்பாலும் கதாநாயகனாகவோ, கதாநாயகியாகவோ, குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் நடித்த துணை நடிகராகவோ இருப்பர். பொதுவாக, எவரும் படத்தில் காட்டப்படும் வில்லன்கள் மற்றும் அடியாட்களின் கதாபாத்திரத்தோடு ஒன்றிப் போவது இல்லை. அவர்களின் நடிப்பை ரசிக்கலாம். ஆனால், படம் பார்ப்பவர்கள், ஒரு வில்லன் கதாபாத்திரத்தை உள்வாங்கி, தம்மையும் அதுபோல் வெளிப்படுத்திக்கொள்ள நினைப்பது ஒரு மாறுபட்ட மனநிலை. அது இயல்பாக நடப்பதில்லை. அது ஒருவகை மனப் பிறழ்வு.
‘மாமன்னன்’ படத்தில் ரசிப்பதற்குப பல காட்சிகள் உள்ளன. ‘வடிவேலு’ உட்பட கதை மாந்தர்கள் பலரும் ரசிக்கும்படி நடித்திருக்கின்றனர். ஆனால், பலராலும் தங்களால் உள்வாங்கிக் கொண்டு, அந்த மனிதனைப் போல் பிரதிபளிப்பது வில்லனாக நடித்த ‘பஹத் ஃபாசிலின்’ கதாபாத்திரத்தையே! அதற்குக் காரணம் அவரின் சிறப்பான நடிப்பு. நடிப்பை ரசிப்பதிலும் பாராட்டுவதிலும் எந்த சிக்கலும் இல்லை.
ஆனால், இங்கே பலராலும் உள்வாங்கிக் கொண்டு பிரதிபலிக்கப்படுவது அவரது நடிப்பு அல்ல. அந்தப் பாத்திரப் படைப்பு. அந்தக் கதாபாத்திரம் கொடூரமான வில்லனாக மட்டுமல்ல; ஒரு மன நலம் பிறழ்ந்து- நாயை அடித்துக் கொல்வது போன்று படைக்கப்பட்டுள்ளது; சுயமரியாதை இழுந்து மற்றவர்கள் காலில் விழுவது போல் படைக்கப்பட்டுள்ளது; இறுதியில், தன் முயற்சியில் தோல்வியுற்ற மனிதனாகவே படைக்கப்பட்டுள்ளது. இடையிடையே, மனிதத் தன்மையற்ற கொடுங்கோலனாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வளவையும் கடந்து, பலரும் அந்தக் கதாபாத்திரத்தை உள்வாங்கி, தாமே அந்தக் கதாபாத்திரமாக மாறி, பெருமைப்பட்டுக்கொள்வது மனப் பிறழ்வேயன்றி வேறென்ன சொல்வது? அந்த மனப்பிறழ்வின் அடிநாதம் சாதி வெறி; சிலரின் மனங்களில் ஊறி இருக்கும் சாதி வெறி. அந்த வில்லன் கதாபாத்திரம் வெளிப்படுத்தும் நடிப்பில் சாதி வெறியும் ஆண்ட பரம்பரை என்ற ஆணவமும் மேலோங்கி இருக்கிறது. அது பார்ப்பவர்களை வெகுவாக ஈர்க்கலாம். அது அந்தக் கதாபாத்திரப் படைப்பின் வெற்றி. ஆனால் அந்தக் கதாபாத்திரத்தைத் தன் தலைவனாக ஏற்று, அது போலவே நடக்க முற்படுவது மனப்பிறழ்வின் உச்சம்.
அந்தக் கதாபாபாத்திரம் தோல்வியுற்றவனாக, சுய மரியாதையற்றவனாக, மனநலம் பிறழ்ந்தவனாக படைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனையும் கடந்து, தம்மையும் அது போலவும், தமது சாதியின் தலைவனாக ஏற்றுக் கொண்டு காணொலிகளை வெளியிடுபவர்கள், உண்மையில் வெளிப்படுத்துவது, அவர்களது ஆழ்மன அசிங்கங்களையே!
ஒருவன் தோற்றவனாகவே ஆனாலும், ஆண்ட பரம்பரை அடையாளத்தை வெளிப்படுத்துவது பெருமை என எண்ணுவது, அது அவர்கள் அவர்களுக்கே தோண்டிக் கொள்ளும் புதைகுழி. சமத்துவ சமூகநீதியின் சிதைவிற்கு வைக்கும் கொல்லி. அதனைத் தொடக்கத்திலேயே துடைத்தெறிய வேண்டும்.
உரிமைக்குப் போராடி உயரும் ‘மாமன்னர்கள்தான்’ இன்றைய தேவை; மனநலம் பிறழ்ந்த ‘கொடுங்கோல் மன்னர்கள் அல்ல!
:-திருப்பதி வெங்கடசாமி.ரா.