நாங்குநேரியில் வெட்டப்பட்ட மாணவனின் இல்லம் ரத்தக்கறைகளுடன் நடந்தது என்ன ? – நேரடி கள ஆய்வு !
சின்னத்துரை நன்றாகப் படிக்கக்கூடிய அமைதியான ஒழுக்கமான மாணவன். சாதியப் பாகுபாடு உள்ளது குறித்து இது....
நாங்குநேரியில் வெட்டப்பட்ட மாணவனின் இல்லம் ரத்தக்கறைகளுடன் நடந்தது என்ன ? – நேரடி கள ஆய்வு !
நாங்குநேரியில் வெட்டப்பட்ட மாணவனின் இல்லம் ரத்தக்கறைகளுடன் இன்னும் தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கிறது. – மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் கள ஆய்வு அறிக்கை:
மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பி.யு.சி.எல்),மதுரை மாவட்டம்
People”s Union Civil Liberties (PUCL),Madurai District
நாங்குநேரியில் பள்ளி மாணவர் மீதான தாக்குதல் குறித்த கள ஆய்வு அறிக்கை :
திருநெல்வேலியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாங்குநேரியில் 12ஆம் வகுப்பு படிக்கும் சின்னதுரை மற்றும் ஒன்பதாவது படிக்கும் அவனது தங்கை சந்திரா செல்வி ஆகிய இருவரையும் அவர்கள் வீட்டிலேயே, அதே பள்ளியில் படிக்கும் மூன்று மாணவர்கள் அரிவாள் கொண்டு தாக்கப்பட்டதால் பலத்த காயமடைந்து தற்போது நெல்லை அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நடந்த சம்பவங்களின் பின்னணி குறித்து அறிய மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் சார்பாக மதுரைக் கிளை ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டது. மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசியத் துணைத் தலைவர் பேராசிரியர் இரா.முரளி, மாநிலப் பொதுச் செயலாளர் ஜான் வின்சென்ட், எழுத்தாளர் பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகப் பேராசிரியர் சாமுவேல் ஆசீர் ராஜ், மத்திய மாநில எஸ்சி/எஸ்டி அரசு ஊழியர் கூட்டமைப்பின் திருநெல்வேலி மாவட்டத் தலைவர் ஊசிக்காட்டான், தலித்திய ஆய்வாளர் ஜெகநாதன், எழுத்தாளர் மதிகண்ணன், தென்காசி சமூகச் செயல்பாட்டாளர் கலீல் இரகுமான் ஆகியோர் இந்த ஆய்வுக் குழுவில் இடம் பெற்றனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்களின் தாயார் அம்பிகாபதி, உறவினர்கள், நாங்குநேரி பெருந்தெருவில் உள்ள அக்கம்பக்கத்தினர், காவல்துறை ஆய்வாளர், சிறார் நீதிக் குழுமத்தின் உறுப்பினர் திருமதி ஆரோக்கியமேரி, வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் மேனிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை எனப் பலரையும் இக்குழு சந்தித்துத் தரவுகளைத் திரட்டியது.
தரவுகள் – திருநெல்வேலியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாங்குனேரியில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து ஊருக்குள் செல்லும் பாதையில் முதலில் பெருந்தெரு எனும் ஆதிதிராவிடர் குடியிருப்பில்தான் மாணவர் சின்னத்துரையின் குடும்பம் வசிக்கின்றது. பெருந்தெரு அம்பேத்கர் பள்ளியில் சத்துணவு சமைக்கும் பணியாளரான சின்னத்துரையின் அம்மா அம்பிகாபதி, கணவரைப் பிரிந்து பிள்ளைகளைப் பராமரித்து வருகிறார். ஒரு அறையும் தாழ்வாரமும் கொண்ட மேலே ஆஸ்பெட்டாஸ் வேயப்பட்ட சிறிய வீட்டில் குடியிருக்கின்றனர்.
சின்னத்துரை நன்றாகப் படிக்கக்கூடிய அமைதியான ஒழுக்கமான மாணவன். சாதியப் பாகுபாடு உள்ளது குறித்து இது வரை ஆசிரியர்களிடம் அவன் ஏதும் முறையிடவில்லை என்பதால் முன்னரே இது குறித்துத் தெரியாமல் போய்விட்டது என்கிறார் தலைமையாசிரியை கிரேஸ் செலின்.
ஊரில் இருக்கும் பொழுது வீட்டை விட்டு வெளியே வரமாட்டான். அம்மாவிற்கு உதவியாக வீட்டு வேலைகள் செய்வான் அல்லது படித்துக் கொண்டிருப்பான் என்கின்றனர் பெருந்தெருவில் உள்ள சக மாணவ நண்பர்கள். ஆகஸ்ட் மாதம் முதல் தேதியிலிருந்து ஒருவாரமாகப் பள்ளிக்கு வராததால் அவனது அம்மாவை அலைபேசியில் விசாரித்திருக்கிறார் வகுப்பு ஆசிரியை. பள்ளிக்கு ஏன் செல்லவில்லை என்று கேட்ட தாயாரிடம், தங்கள் ஊரிலிருந்து வந்து தன்னோடு படிக்கும் மறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவன் தன் நண்பர்களுடன் தினமும் தன்னைத் துன்புறுத்துவதாகக் கூறியிருக்கின்றான். இந்தத் தொடர் நிகழ்வு அவனை இனிப் படிக்கவே வேண்டாம், வெளியூரில் வேலைக்குச் சென்று விடலாம் என்று முடிவு எடுக்கும் விரக்தி நிலைக்குத் தள்ளியுள்ளது.அது நாள் வரை தான் அனுபவித்து வந்த சித்திரவதையைச் சின்னத்துரை வீட்டில் தெரிவிக்காமலேயே இருந்தான். ஆனால் அன்று வேறு வழியின்றி வெளிப்படுத்திவிடவே, தாயும் மகனும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை தலைமையாசிரியரிடம் சென்று முறையிட்டுள்ளனர்.
தன்னைத் தாக்கிய மாணவன் தினமும் தன்னிடம் பத்து ரூபாய் கொடு என்று மிரட்டி வாங்குவதாகவும் தரவில்லை என்றால் அடுத்தநாள் சேர்த்துத் தர வேண்டும் என மிரட்டுவதாகவும், கடைக்குப் போய்ச் சொல்வதை வாங்கி வா, சாப்பாடு வாங்கி வா என்று வற்புறுத்துவதும், தேர்வுக்குப் பேப்பர் வாங்கினால் பறித்துக்கொள்வதும், தேர்வு எழுதும் பொழுது எழுதிய பேப்பரைக் காட்டச் சொல்வதும், வகுப்பில் ஆசிரியை பாடம் எடுக்கும்பொழுது ஊளையிடச் சொல்லி வற்புறுத்துவது, தவறினால் அடிப்பது , பேனாவால் குத்துவது என்று தான் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதாகத் தலைமை ஆசிரியையிடம் கூறினான்.
இது குறித்துத் தலைமை ஆசிரியை புகார் கடிதம் ஒன்றை எழுதித்தரச்சொல்லி வாங்கியிருக்கிறார். பொதுவாகவே மாணவர்களைத் தீவிரமாகக் கண்காணிப்பதாகத் தலைமை ஆசிரியை தெரிவித்தார். இருபாலர் படிக்கும் அப்பள்ளியில் மொத்தம் 519 மாணவர்கள் பயில்கின்றனர். அதில் பட்டியலின மாணவர்கள் எண்ணிக்கை 152. பழங்குடி மாணவர்கள் எண்ணிக்கை 11.
அன்றைய தினம் அவனைத் துன்புறுத்தும் மாணவர்கள் மூவருமே ஊரில் கொடை விழா நடக்கின்றது என்பதால் பள்ளிக்கு வரவில்லை. எனவே புகார் குறித்து அந்த மாணவர்களிடம் விசாரிக்கவோ கண்டிக்கவோ இல்லை என்கிறார் தலைமையாசிரியை. தங்களைப்பற்றிச் சின்னத்துரை புகார் கூறியதை எப்படியோ அறிந்துகொண்ட குற்றம் சாட்டப்பட்ட மாணவன் அன்று மாலை 6 மணி அளவில் பெருந்தெருவிலுள்ள சின்னத்துரையின் வீட்டிற்கு வந்து கடிந்து பேசிச் சத்தம் போட்டிருக்கிறான். சிறிது நேரம் கழித்து அம்மாணவனின் அண்ணனும், பாட்டியும் நேரில் வந்து “ஏதேனும் பிரச்சினை என்றால் எங்களிடம் சொல்லி இருக்க வேண்டும், ஏன் புகார் கொடுத்தீர்கள்” என்று சத்தம்போட்டுச் சென்றதாகச் சின்னத்துரையின் அம்மா தெரிவித்தார்.
அதே இரவு 10 மணி அளவில் சின்னதுரை, அம்மா மற்றும் தங்கையுடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது மூன்று மாணவர்களும் அதில் ஒருவர் கையில் நீண்ட அரிவாளுடன் வந்துள்ளனர். சூழ்நிலையை அவதானிப்பதற்குள் அம்மாணவன் சின்னத்துரையை ஓங்கித் தோளில் வெட்டியுள்ளான். அதைக் கைகளைக் கொண்டு தடுத்த சின்னத்துரையின் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அம்மாணவன் அரிவாளை மற்றொருவனிடம் கொடுக்க அவனும் வெட்டியுள்ளான்.
அவனிடமிருந்து அரிவாளை வாங்கிய மூன்றாமவனும் வெட்டியுள்ளான். வெட்டுவதைத் தடுக்க வந்த மாணவனின் தங்கை சந்திரா செல்விக்கு இடது முன்னங்கையில் வெட்டுக்காயம். நிதானமாக முறை போட்டு அவர்கள் மூவரும் பெரிய அரிவாளைக் கொண்டு ஆளுக்கு வெட்டியுள்ளனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வரவே மூவரும் தப்பி ஓடிவிட்டனர். இருசக்கர வாகனங்களில் காத்திருந்த முன்னாள் மாணவர்கள் மூன்று பேர் அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர். அனைவருமே 17 வயது உடையவர்கள்.
நிகழ்ச்சியை விவரிக்கையில், “அந்த மூன்று அண்ணன்களும் மிரட்டிவிட்டு, கொஞ்சம் அடித்துவிட்டுப் போய்விடுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் ஒரு அண்ணன் அரிவாளை எடுத்து வெட்டியதும் எனக்கு மிகவும் அதிர்ச்சியாகிவிட்டது. தடுக்கப்போன என் கையிலும் வெட்டு விழுந்தது” என்று சின்னத்துரையின் தங்கை கூறியது, அந்தச் சிறுமி எந்தவிதக் காழ்ப்புணர்ச்சியும் இன்றும் வைத்திருக்கவில்லை என்பதை அறிய வைத்தது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரும் கைது செய்யப்பட்டுத் தற்போது கூர்நோக்கு இல்லத்தில் இருக்கின்றனர். அவர்களுக்கு உதவியதாக 20 வயது நிரம்பிய வள்ளி என்கிற முன்னாள் மாணவனும் கைது செய்யப் பட்டுள்ளான். அருகில் வசித்து வந்த சின்னதுரையின் சின்னத் தாத்தா 55 வயதுடைய கிருஷ்ணன் என்பவர் விஷயமறிந்து ஓடி வந்தவர், மயக்க நிலையில் கிடந்த சின்னதுரையைக் கண்டும், வீட்டிற்குள்ளும் படிகளிலும் சிந்திய ரத்தத்தைப் பார்த்து மயங்கி விழுந்து அங்கேயே இறந்தும் விட்டார்.
சின்னத்துரையின் இடது கையில் மூன்று இடங்களிலும், வலது கையில் ஓரிடத்திலும், மொத்தம் ஏழு முதல் எட்டு இடங்களில் ஆழமான வெட்டுக் காயங்கள் உள்ளன. தசை நார்கள், ரத்தக் குழாய்கள், நரம்புகள் காயப்பட்டுள்ளன. எலும்பு முறிவுக்கு முதற்கட்ட அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் தற்போது இரு கைகளிலும் ஏற்பட்ட காயங்களை ஆய்வு செய்து உரிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலிருந்து வந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் ஓய்வு தேவை என்று அக்குழுவின் தலைவர் மருத்துவர் ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.
கொலை முயற்சி, காயம் ஏற்படுத்தும் தயாரிப்புடன் ஆயுதங்களுடன் வீடு புகுந்து தாக்குதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம், சிறார் நீதி சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் நாங்குனேரி காவல்நிலையத்தில் குற்ற எண் 521/2023ஆக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்டம் என்பதால் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜு விசாரணை மேற்கொண்டிருப்பதாக ஆய்வாளர் கூறுகிறார். பொதுவாகச் சிறார் குற்றத்தில் காவல்துறை முதல் தகவலறிக்கை பதிவு செய்வதில்லை. இந்தக் குற்றத்தின் தன்மை தீவிரமானதால், காவல் துறையே மூன்று பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
தலித் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு உரிய பாதுகாப்பு அளித்துக் கண்காணித்து வருவதாகவும், தென்மாவட்டங்களில் பிற பகுதிகளில் உள்ளவர்களைவிட நாங்குனேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள புதூர், மஞ்சக்குளம், மருகால்குறிச்சி, பட்டப்பிள்ளை ஆகிய ஊர்களில் சாதி இந்துக்கள் உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பதாகவும் சமூக அமைப்புகள் சாதிய மன நிலையைப் போக்க, சாதிப் பாகுபாடுகளைக் களைய முன்முயற்சி எடுக்க வேண்டும் என்கிறார் காவல் ஆய்வாளர் ஆதம் அலி. மேலும் தாக்குதல் நடத்திய மாணவர்கள் மனநிலை பற்றி விசாரித்தபோது பின்விளைவுகளை அறியாமல் செய்துவிட்டதாக அம்மாணவர்கள் கூறியதாகவும் கூறினார்.
“சினப்படுதலுக்கு ஆளானதால் அந்த ஆத்திரத்தில் நடந்த சம்பவமாகத் தெரிகின்றது. முன்கூட்டியே திட்டமிட்ட நடவடிக்கையாகத் தெரியவில்லை. சட்டத்திற்கு முரண்பட்ட குழந்தைகள் என்றே அவர்களை அணுக வேண்டும். அவர்களை நல்வழி படுத்த வேண்டியுள்ளது. விசாரித்துச் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்போம்” என்கிறார் சிறார் நீதி குழும உறுப்பினர் ஆரோக்கியமேரி. பின்னர்க் குழுவினர் மாணவர் சின்னத் துரை வசிக்கும் பெருந்தெருவிற்கு சென்றோம்.
நாங்குநேரி பெருந்தெருவில் நுழைந்தவுடன், ஒருவரிடம் மாணவர் சின்னத்துரையின் வீடு எது என்ற போது, ” நீங்க எங்க சாதிக்காரன் பிரச்சினைய தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஒரு சின்னத்துரை வெட்டுப்பட்டால்தான் வருவீங்களா? இன்னும் எத்தனை சின்னத்துரை வெட்டுபடப்போறாங்களோ!” என்று ஆதங்கத்துடன் கேட்டார்.
நாங்குநேரியில் சின்னத்துரை வசிக்கும் பகுதியில் நுழையும்பொழுது இடதுபுறம் ஒரு தேவாலயம். வலதுபுறம் அம்பேத்கர் ஆரம்பப்பள்ளி. சாலையை ஒட்டி ஒரு அங்காடி வளாகம். பள்ளிக்கும் அங்காடிக்கும் இடையே செல்லும் தெரு பெருந்தெரு. 150 ஆதிதிராவிடர் குடும்பங்களைக் கொண்ட குடியிருப்பு பகுதியில் உள்ளே முப்பிடாதி அம்மன் கோவில் ஆகியவை தென்பட்டன.
நியாய விலைக்கடை ஒன்று அப்பகுதியில் இருந்திருக்கின்றது. அது சமீபத்தில் ஒரு கிலோ மீட்டருக்குத் தள்ளி மாற்றப்பட்ட நிலையில் ஆதி திராவிடர்கள் அங்கே பொருட்கள் வாங்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. சின்னத்துரை வெட்டு சம்பவத்திற்குப் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை 13ஆம் தேதி சபாநாயகர், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் வந்து அவசர ஏற்பாடாகப் பகுதி நேர நியாய விலைக்கடையை பழைய இடத்திலேயே அமைத்துத் திறந்து வைத்துள்ளனர். அப்பகுதியின் நுழைவில் போலீசார் முகாமிட்டுக் காவல் புரிவதுடன் இரண்டு கண்காணிப்பு கேமிராக்களையும் தெருவின் முகப்பில் பொருத்தியுள்ளனர். அங்குச் சில பெரியவர்கள், மாணவர்கள், பெண்கள், மற்றும் பலரை ஆய்வுக்குழுவினர் சந்தித்து விபரங்களை அறிந்தோம்.
களத்தில் கிடைத்த சில தகவல்கள்:
• வெட்டப்பட்ட சின்னத்துரை பொதுவாக வீட்டை விட்டு வெளியே வருவதே இல்லை என்பதும் அவன் மிகவும் அடக்கமாகவே இருப்பான் என பலர் கூறினார்கள்.
• வெட்டிய ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த மாணவரின் தந்தை இட்லி வியாபாரம் செய்து வாழ்ந்து வருபவர்.
• குற்றம் செய்த மாணவர் இதற்கு முன்பும் சின்னத்துரை வீட்டிற்கு வந்துள்ளார்.
• ஆதிக்கச் சாதியினர் அங்குள்ள தலித் மக்களுக்கு வட்டிக்குப் பணம் கொடுத்துப் பத்துப் பைசா வட்டி என்ற கந்துவட்டி வசூலிப்பதும் அதீதமாகக் கணக்கிட்டுப் பின்னர்ச் சொத்துகளை எழுதி வாங்குவது, காலியாக இடம் ஏதேனும் இருந்தால் அவற்றில் வைக்கோல் படப்பு வைத்து அடைப்பது, சில ஆண்டுகள் விவசாயம் செய்யாமல் இருக்கும் ஆதி திராவிட மக்களுக்குச் சொந்தமான நிலங்களில் உழுது பயிரிடுவது, கேட்டால் சொற்பத் தொகையை முன்பணமாகப் பெற்றுக்கொள், கிரையமாக எழுதிக்கொள்ளலாம் என்று மிரட்டுவது என பல சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் சொத்துகளை இழந்து ஊரை விட்டுச் சிலர் போய்விட்டனர்.
• “வயதில் முதியவர்களாகிய நாங்கள் முன்பு அவர்களிடம் பணிவாக நடந்து எங்கள் வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றோம். இன்றைய இளைஞர்கள் அவ்வாறு இருப்பதில்லை.” என்கின்றார் ஊர் பெரியவர் ஒருவர்.
• “எந்த ஒரு காரியத்திற்கும் ஆதிக்கச் சாதியினர் இருக்கும் பகுதி வழியாகவே செல்ல வேண்டியிருக்கின்றது. எங்களது இளைஞர்களுக்கு ஆட்டோ சொந்தமாக வாங்கிக் கொடுத்து ஓட்ட நினைத்தாலும் அது சாத்தியப் படுவதில்லை. எனவே இளைஞர்கள் பலரும் வேலை தேடிச் சென்னை மும்பை போன்ற பெரு நகரங்களுக்குச் சென்று விடுகின்றனர். சங்கர் ரெட்டியார் மேல்நிலைப்பள்ளி நாங்குநேரியில் இருந்தபோதும் தலித் மாணவர்கள் அங்குக் கல்வி பயில முடிவதில்லை. எனவே தலித் மாணவர்கள் பக்கத்து வெளியூர்களுக்குச் சென்றும் விடுதிகளில் தங்கியும் பயின்று வருகின்றனர்.” என்று கூறினார் மற்றுமொருவர்.
• கடந்த இருபது ஆண்டுகளில் இப்படியொரு வன்முறை சம்பவம் அந்தப்பகுதியில் நடைபெறவில்லை. ஆனால் அடக்குமுறைகளும். மேலாதிக்கமும் தொடர்ந்து நிலவுகின்றன என்றவர்களும் உண்டு.
• அவ்வப்போது சில அந்நியர்கள் மோட்டர் பைக்கில் அப்பகுதியில் சுற்றிச் செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
• வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் முதற்கட்டமாக இருவருக்கும் சேர்த்து ரூ.1,92,000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்திற்குப் பின் மிகவும் அச்சத்துடனே தாங்கள் ஒவ்வொரு நாளையும் கடத்துவதாகப் பலர் அங்குக் கூறினார்கள்.
தரவுகளின் அடிப்படையில் சில புரிதல்களும் வேண்டுகோள்களும்
• சாதியப் படிநிலையில் தாங்கள் மேல் தட்டில் உள்ள நிலையில் தங்களுக்கு எதிராக ஒரு தாழ்த்தப்பட்ட சாதி மாணவன் அதுவும் இதுகாறும் அடங்கிக் கிடந்த ஒருவன் தங்களுக்கு எதிராக மனு கொடுப்பதா என்ற சாதிய ஆதிக்க மனநிலையே இந்தக் இந்த கோரத்தாக்குதலின் ஆணி வேர்.
• மேலும் இது மட்டும்தான் காரணமா இல்லை வேறு வலுவான காரணங்கள் இருக்கக் கூடுமா என்பதை அறிய வேண்டியுள்ளது.
• பள்ளி மாணவர் மீதான சக மாணவர்களின் தாக்குதல் என்பது சாதி உணர்வுகள் சிறுவர்கள் மத்தியிலே எவ்வளவு கூர்மை அடைந்துள்ளது என்பதை உணர்த்துகின்றது.
• வெட்டுவதற்கான அரிவாளைக் கொண்டு வருகின்றான் என்றால், அரிவாள் மூலம் வெட்டுதல் என்பது பற்றி அந்த மாணவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை என்பதை உணர்த்துகின்றது. மேலும் அப்படிப்பட்ட ஆயுதம் அவனுக்கு எளிதாகக் கிடைக்கும் நிலையும் அங்கு உள்ளது.
• இந்த வெட்டு சம்பவம் ஏதோ கோபத்தில் எதிர்வினையாக நிகழ்த்தப்பட்ட சம்பவம் அல்ல. மிகவும் நிதானமாகத் திட்டமிடப்பட்டு, அதுவும் மூவரும் ஒவ்வொருவராக உடலின் ஒவ்வொரு பகுதியில் வெட்டியுள்ளனர். இதில் உயிர் போகாமல், ஆனால் முற்றிலும் வாழ்நாள் முழுவதும் செயலிழந்து போகவேண்டும் என்ற நோக்கம் புரிகின்றது.
• இந்தத் திட்டமிடலுக்கு ஆலோசகராக யாரேனும் பின் புலமாக இருக்கும் வாய்ப்பும் உள்ளது.
• தொடர்ந்து பலவீனமானவரை சித்திரவதைக்கு ஆளாக்கும் போக்கு என்பது கல்வி நிலையங்களில் ஆபத்தான போக்கு ஆகும்.
• ஆதிக்கச் சாதியினரின் பண்பாட்டு ஆதிக்கம் என்பது வன்முறை தவிர்த்த ஒன்றாகவே அப்பகுதியில் வெகு காலம் இருந்து வந்த நிலையில், தற்போது இளையதலைமுறை ஆயுதம் கொண்டு தாக்கி அதை நிலை நிறுத்த முயல்வதின் முதற் கட்டமாக இதைப் பார்க்கின்றோம்.
• கடந்த 20 ஆண்டு காலமாகக் குறிப்பிட்ட அதீதச் சம்பவங்கள் எதுவும் நடந்திராத நிலையில் தற்பொழுது தலித் மாணவன் தாக்கப்பட்டு இருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. தலித் சமூக இளைஞர்கள் நகரங்களுக்குச் சென்று பணம் ஈட்டி முன்னேற்றம் காண்பதும் ஆதிக்கச்சாதியினர் இடையே ஒரு வெறுப்புணர்வை வளர்த்திருக்கிறது.
• நாங்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலம் மாண்புமிகு ஜெயலலிதா அரசால் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்டு, தற்போது மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளது. எனவே அந்தப் பகுதியில் நிலம் சார்ந்த உடமைகளின் தேவை அதிகரித்து வருகின்றது. தலித் மக்களிடம் இருக்கின்ற உடைமைகளை அவர்களது குடியிருப்பு பகுதிகளை ஆக்கிரமிக்க வேண்டும் என்கிற நீண்டகாலத் திட்டத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
• மதவாதக் கட்சிகள் மக்களை மத அடிப்படையில் ஒன்று சேர்க்க வேண்டும் என்றால் அந்தந்தப் பகுதிகளில் உள்ள சாதி அமைப்புகளின் துணை கொண்டு மக்களை ஒன்றுதிரட்ட வேண்டியுள்ளது. அதனால் இதுவரை சற்று இறுக்கம் தளர்ந்து காணப்பட்ட சாதியப் படிநிலை உறவுகள் மீண்டும் இறுக்கமடைகின்றன. சாதி அமைப்புகள் மீண்டும் தங்களைச் சாதி அடையாளத்தில் ஒன்றிணைத்துக் கொள்வதும் அதன் வெளிப்பாடாகச் சாதியப் பாகுபாடுகளும் சாதிய முரண்பாடுகளும் அதிகமாக வெளிப்படுவதைக் காணமுடிகின்றது.
• பத்தாம் வகுப்பு வரை தேர்வு அடிப்படையில் தேர்ச்சி நிறுத்தி வைக்கக்கூடாது, உடல் சார்ந்த தண்டனைகள் அளிக்கக்கூடாது என்பவை இடைநிற்றலைத் தவிர்க்க உதவுமென்ற அணுகுமுறை இருந்தபோதும் மாணவர்களிடையே கீழ்ப்படிதலின்மை அதிகரித்து வருவதைக் காணமுடிகின்றது.
• பள்ளியில் சாதி குறித்த பிரச்சினைகள் வெளிப்படாமல் கட்டுப்படுத்தப்படுகின்றனவே தவிர, சாதியத்திற்கு எதிரான மனநிலை வளர்ப்பதற்கான செயல் திட்டங்கள் எவையும் இல்லை.
• அப்பகுதி தலித்துகள் ஆதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பு என்பதைவிட அதைத் தவிர்த்து விலகிச் செல்லவே முயல்கின்றனர்.
பரிந்துரைகள்
• குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கையில் சின்னதுரை மீது கொடுங்காயம் ஏற்படுத்தியதற்கான குற்றத்தை இந்தியத் தண்டனை சட்டம் பிரிவு 326இல் பதியவேண்டும். ஒரு வேளை கொலை முயற்சி எனும் பிரிவு 307லிருந்து குற்றவாளிகள் தப்பித்தாலும், இது தண்டனையை உறுதிசெய்யும்.
• குறிப்பிட்ட இந்தச் சம்பவம் ஏதோ தற்செயலாக நடந்தது என்ற அணுகுமுறையை விடுத்துச் சம்பவத்திற்கு முன்னே சின்னத்துரையின் வீட்டிற்கு வந்த அவனது பாட்டி மற்றும் சகோதரர் ஏன் அங்கே வந்தார்கள், இரண்டு அடி நீளமுள்ள அரிவாள் அந்த மாணவனின் கையில் எப்படிக் கிடைத்தது, மூன்று பேரும் மாறி மாறி ஒரு அப்பாவி மாணவனைத் தாக்கும் அளவிற்குத் திட்டமிட்டார்கள், இந்தச் சதிச் செயலில் ஈடுபட்டவர்கள் யாரெல்லாம் என்ற கோணத்தில் காவல்துறை தனது விசாரணையைத் தொடரவேண்டும் என்று கோருகின்றோம்.
• குற்றம் இழைத்தவர்கள் பல சட்டப்பிரிவுகளின் படி குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும், அவர்கள் சிறுவர்கள் நீதி சட்டத்தின் கீழ்தான் தண்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அப்படி இல்லாமல் 13-7-20 நிர்பயா வழக்கை ஒட்டி உச்சநீதிமன்றத்தில் நீதியரசர்கள் தினேஷ் மற்றும் விக்ரம நா அவர்கள் வழங்கிய வழிகாட்டுதலின் படி 15 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் குற்றம் இழைக்கின்ற பட்சத்தில் அவர்கள் குற்றத்தின் தன்மையைப் புரிந்து கொள்ளக் கூடிய பக்குவம் பெற்றவர்களா? அதன் பின்விளைவுகளை அறிந்து செய்திருக்கிறார்களா? அதை நிறைவேற்றக்கூடிய உடல் திறன் அவர்களிடம் இருக்கின்றதா? என்பதை உரிய சிறப்பு நிபுணர்களைக் கொண்டு ஆய்ந்து மன நிலை உறுதியாகவும், தெளிவாகவும் உள்ள 16 வயது முதல் 18 வரை உள்ள சிறுவர்கள் கொடுங்குற்றமிழைத்தால், அவர்களைப் பெரியவர்களாகவே பாவித்துத் தண்டனை வழங்கலாம் என்ற அடிப்படையில் இவர்களுக்குப் பெரியவர்களுக்கான சட்டப்பிரிவின்படி தண்டிக்கப்படவேண்டும்.
• டெல்லியில் பாலியல் வன்முறை, மற்றும் கொலையில் முடிந்த நிர்பயா வழக்கில் அதன் பிறகு அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா தலைமையிலான குழு பரிந்துரையின் படி 18 வயதுக்குக் கீழானவர்களுக்கான குற்ற வழக்குகளுக்குப் பல்வேறு சிறப்பு கூறுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதன்படி கடுமையான குற்றம் புரிந்ததாகக் குற்றச்சாட்டு இருப்பின், 16 வயதுக்கு மேற்பட்டவர்களை எவ்வாறு நடத்துவது என்பது குறித்துச் சிறார் நீதி சட்டம் 2015 ஆம் ஆண்டு திருத்தப்பட்டுள்ளன. பெரும் குற்றம் செய்த சிறுவர்களை இளையவர்களாக அல்லாமல் பெரியவர்களுக்கான குற்ற விசாரணை முறைப்படி விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று அச்சட்டத் திருத்தம் வலியுறுத்துகின்றது
• பாதிக்கப்பட்ட மாணவன் சின்னத்துரை உடல் நலம் பெறுவதற்குச் சில காலம் ஆகக்கூடும். அப்படியே நலம் பெற்றாலும் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது தெரியாது. ஒரு இளைஞனின் வாழ்க்கையை ஒட்டு மொத்தமாக இந்த வன்முறை அழித்துவிடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே அரசு சின்னத்துரைக்கு வரும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத எல்லாவித வசதிகளையும் செய்து கொடுப்பதோடு, அவனுக்கு அவன் விரும்பும் மேற்படிப்பிலும் சேருவதற்கு வகைசெய்யும் சிறப்பு ஆணை (Special Order) பிறப்பிக்கவேண்டும்.
• அதே போலச் சின்னதுரையின் தங்கை சந்திரா செல்வியின் மேற்படிப்புக்கும் அரசு சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும். ஒரு பெண்ணின் எதிர்காலம் அவரின் இந்த உடல் பாதிப்பால் தடைபடக்கூடாது.
• சின்னத்துரையின் வாழ்க்கை பாதிப்புக்குச் சிறப்பு ஈட்டுத் தொகையாக 25 இலட்சம் வழங்க வேண்டுகிறோம்.
• சின்னத்துரைக்கு பாதுகாப்பன சூழலைத் திட்டமிட்டு உருவாக்கித் தருவதும் மிகவும் அவசியம்.
• அப்பகுதியில் மிகுந்த அச்சத்துடன் இருக்கும் மக்களின் அச்சம் போக்கும் நடவடிக்கைகள் மிகவும் தேவை.
• குற்றம் இழைத்த மாணவர்கள் பகுதியில் அரசு வல்லுநர்களை அனுப்பிச் சாதி மேலாதிக்க உணர்வு கொண்டால் என்னென்ன பாதிப்புகள் வரும் என்பது பற்றிய விழிப்பை ஏற்படுத்த முயலவேண்டும். மேலும் அப்பகுதி சாதி மேலாதிக்கச் சிந்தனைகளை நீக்கத் திட்டமிட்டு முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும்.
• மேலும் சாதியத் தாக்குதல் மேலும் அங்கு நிகழா வண்ணம் நல்லிணக்கம் பேண வகை செய்ய வேண்டும்.
கல்வியில் தேவை
• நல்லொழுக்க வகுப்புகள் மற்றும் விளையாட்டுக்கான வகுப்புகள் பள்ளிகளில் அரிதாகிவிட்டது. அனைத்துச் சமூக மாணவர்களும் இணைந்து பழகுகின்ற வகையில் விளையாட்டுத்துறை, தேசியச் சேவை திட்டம், சாரணர் பயிற்சி, தேசிய மாணவர் படை, பசுமைப்படை போன்ற திட்டங்கள் முக்கியத்துவம் கொடுத்து வளர்க்கப்பட வேண்டும்.
• பயிற்சி பெற்ற ஆற்றுப்படுத்துநர்கள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் முழு நேர ஊழியர்களாக நியமிக்கப்பட்டு அவர்கள் அப்பகுதி பள்ளிகளுக்குத் தொடர்ந்து சென்று மாணவர்களின் உளவியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் தரவேண்டும். மற்றும் நட்பு ரீதியான முறையில் பழகி அவர்களுக்கு நல்வழி காட்டவேண்டும். இது திட்டமிடப்பட்ட செயல் முறைகளால் செய்யப்படுவதும் அவசியம்.
• சாதிய அடையாளங்கள் பள்ளிக்குள் எந்த வகையிலும் அனுமதிக்கக்கூடாது.
• பாலியல் வன்கொடுமை குறித்த புகார்களைப் பரிசீலிப்பதற்குத் தனிக் குழுக்கள் அமைப்பது போன்று சாதியப் பாகுபாடு மற்றும் ஆதிக்க உணர்வு வெளிப்படும் நிகழ்வுகளைக் கண்காணிக்கவும் ஆரம்பத்திலேயே அவற்றைக் களைவதற்காகவும் சிறப்பு குழுக்கள் கல்வி நிலையங்களில் அமைக்கப்படவேண்டும். சாதியப் பாகுபாடுகளைக் களைவது மட்டுமல்ல சாதி ஒழிப்பு என்ற நோக்கத்தில் விழிப்புணர்வு திட்டங்கள் கொண்டு கொண்டுவரப்பட வேண்டும்.
• சாதி மறுப்பு சிந்தனைகள் பரந்தளவில் மாணவர்கள் மத்தியில் வளர்க்கப்படவேண்டும். பாடத்திட்டங்களில் அதற்கான சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சாதிய உணர்வுகளை வளர்க்கின்ற ஆசிரியர்கள் மற்றும் பள்ளி பணியாளர்கள் இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை உடனடியாக எடுக்கப் படவேண்டும். பாடத்திட்டங்கள் மதிப்பெண்களுக்காக மட்டுமின்றி மனித நேயத்தைப் பலப்படுத்தும் வகையிலும் அமையவேண்டும்.
பிற ஆலோசனைகள்
• பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கான சிறப்பு துணை திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி செலவழிக்கப்படாமல் மீண்டும் மத்திய அரசிற்குத் திருப்பி அனுப்பப்படுவதைக் கைவிட்டு மாறாக ஒவ்வொரு கிராமங்களிலும் பட்டியலின மக்கள் வசிக்கின்ற பகுதியில் குடிநீர் வசதி, பொதுக்கழிப்பிட வசதி, கல்வி பாதுகாப்பு, வேலைவாய்ப்பு பயிற்சி போன்ற துறைகளிலே கவனம் செலுத்தப்பட வேண்டும்.
• பட்டியலின மற்றும் பழங்குடி மக்களின் சொத்துகள் ஆதிக்கச் சாதியினரால் அபகரிக்கப்படாமல் காக்க வேண்டும்.
• கந்து வட்டி குறித்த கண்காணிப்பு மேற்கொண்டு, அதை ஒழிக்கவேண்டும்.
• சமூக வலைதளங்களில் சாதியப் பெருமை பேசும் கருத்துகளைப் பரப்புவோர் கண்காணிப்புக்கு உட்படுத்தப் படுவதோடு தடைகளுக்கும் தண்டனைக்கும் உள்ளாக்கப்பட வேண்டும்.
• கல்வி நிலையங்களில் சாதிய மனோபாவம் நீக்கும் பாடத்திட்டங்கள் மட்டுமின்றிப் பலவிதத் தொடர் களச் செயல்பாடுகளை உண்டாக்கி மாணவர்களுக்குள் நல்ல புரிதலை உண்டாக்க வேண்டும்.
கள ஆய்வுக் குழுவினர்:
பேராசிரியர் இரா. முரளி, தேசியத் துணைத் தலைவர் மக்கள் சிவில் உரிமைக் கழகம்
வழக்கறிஞர் ஜான் வின்சென்ட் மாநிலப் பொதுச் செயலாளர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்.
எழுத்தாளர் பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம்,
பேராசிரியர் சாமுவேல் ஆசீர் ராஜ், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம்,
திரு. ஊசிக்காட்டான், மாவட்டத் தலைவர், மத்திய மாநில எஸ்சி/எஸ்டி அரசு ஊழியர் கூட்டமைப்பு, திருநெல்வேலி,
திரு. ஜெகநாதன், தலித்திய ஆய்வாளர்,
திரு. மதிகண்ணன், எழுத்தாளர்
திரு. கலீல் இரகுமான், சமூகச் செயல்பாட்டாளர், தென்காசி
(சட்ட காரணங்களுக்காக மாணவர்கள் பெயர்கள், பள்ளியின் பெயர் கொடுக்கப்படவில்லை)
பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம்
நன்றி