அங்குசம் பார்வையில் ‘ஷாட் பூட் த்ரீ ‘ படம் எப்படி இருக்கு ?
‘ஷாட் பூட் த்ரீ ‘ படம் எப்படி இருக்கு
உயர் வகுப்பினர் வாழும் காஸ்ட்லியான அப்பார்ட்மெண்டில் குடியிருக்கும் வெங்கட் பிரபு –சினேகா தம்பதிகளின் மகன் கைலாஷ். அதே அப்பார்ட்மெண்டில் வசிக்கும் பிரணதியும் வேதாந்தும் கைலாஷின் திக் ஃப்ரண்ட்ஸ். மூவருமே லட்சாதிபதிகளின் பிள்ளைகள் படிக்கும் வேலம்மாள் ஸ்கூல் கிளாஸ்மேட்ஸ். ஸ்கூலில் ஒருவனுக்கு பனிஷ்மெண்ட் என்றால், அதை மூவருமே ஷேர் பண்ணிக் கொள்ளும் அளவுக்கு குளோஸ் ஃப்ரண்ட்ஸ்.
கைலாஷுக்கு நாய் வளர்க்க வேண்டும் என்று ஆசை. ஆனால் நாய் வீட்டை நாறடித்துவிடும் என்று சொல்லி ஸ்ட்ரிக்டாக மறுத்து விடுகிறார் சினேகா. ஆனால் அப்பா வெங்கட் பிரபுவோ மகனுக்கு சப்போர்ட்டாக இருக்கிறார். இந்த நிலையில் கைலாஷின் பிறந்த நாள் அன்று சர்ப்ரைஸாக ஒரு நாய்க்குட்டியை கிஃப்ட் கொடுக்கின்றனர் பிரணதியும் வேதாந்தும்.
அப்பா -அம்மா இல்லாத நேரம் பார்த்து அந்த நாயை வீட்டுக்கு எடுத்து வருகிறான் கைலாஷ். ஆனாலும் இது சினேகாவுக்கு தெரிந்து கடுகடுக்கிறார். வெங்கட் பிரபு கூல் பண்ணுகிறார் பணக்கார வீட்டில் நாயும் கொழு கொழுவென வளர்கிறது. அந்த நாய்க்கு பேரு மேக்ஸ். ஒரு நாள் வெங்கட் பிரபுவும் சினேகாவும் வெளியூர் சென்றுவிட, கைலாஷ் வீட்டில் மூவரும் ஜாலி லூட்டியடிக்கிறார்கள். அப்போது மேக்ஸ் வீட்டைவிட்டு வெளியே ஓடி விடுகிறது. அந்த மேக்ஸை கண்டு பிடிக்க மூவரும் படும் பாடு தான் ‘ஷாட் பூட் த்ரீ ‘.
இந்த உலகில் அன்பு ஒன்றே முதன்மையானது, முக்கியமானது என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் டைரக்டர் அருணாசலம் வைத்தியநாதன். படத்தின் முதல் பாதியிலும் க்ளைமாக்ஸிலும் தான் வெங்கட் பிரபு -சினேகா வருகிறார்கள். நாய்க்குட்டியை பார்த்ததும் ஜெர்க்காகி, அதை மறைக்க சினேகா விடம் பயந்து வழிந்து நெளியும் சீனில் வெங்கட் பிரபு, சூப்பர் பிரபு.
நன்றாக’ வெயிட் ‘ போட்டு, முகத்திலும் முதிர்ச்சி தெரியுது சினேகாவுக்கு. முழுக்க முழுக்க பணக்கார வர்க்கத்தின் கதை என்றால் பார்வையாளனுக்கு சலிப்பு தட்டிவிடும் என்பதற்காக தகரக் குடிசையில் வசிக்கும் சிறுவன் பூவையாரை மேக்ஸை கண்டு பிடிக்க உதவும் பரோபகாரியாக காட்டி மேட்ச் பண்ணிருக்கார் டைரக்டர்.
மதன் கார்க்கியின் வரிகளில் ராஜேஷ் வைத்யாவின் இசையில் ஒரு பாட்டு மட்டும் மனசுக்கு இதமா இருக்கு. இடைவேளைக்குப் பின் மேக்ஸை தேடி அலையும் காட்சிகள் முக்கால் வாசி வலிந்து திணிக்கப்பட்டதாகவே தெரிகிறது. ‘ஷாட் பூட் த்ரீ’ குழந்தைகளுக்கான சினிமா.