செயல்படாத செயலி – வருகை தராத நூலகர்கள் – பரிதவிப்பில் வாசகர்கள் !
செயல்படாத செயலி – வருகை தராத நூலகர்கள் – பரிதவிப்பில் வாசகர்கள் !
டிஜிட்டல் மயமான இந்தியா என பெருமை பேசுகிறது மோடி அரசு. காகிதமில்லா சேவை, விரைவான சேவை, துல்லியமான சேவை என்றெல்லாம் சொல்லி அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கி வருகிறார்கள். எல்லா துறைகளிலும் வருகைப்பதிவு என்பது கைரேகை பதிவோடு பொருத்தப்பட்ட கருவிகளின் வழியே டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருக்கிறது.
இதன் நோக்கத்தையே சிதைக்கும் வகையில், வருகை பதிவேட்டிற்கான செயலியே செயலிழந்து போன நிலையில், நூலகங்களுக்கு முறையாக வருகை புரியாமல் நூலகர்கள் ஏமாற்றி வருவதாக வாசகர்கள் சிலர் குற்றச்சாட்டை எழுப்பியிருக்கின்றனர்.
தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் 1948 இன் படி, தமிழ்நாட்டில் பொது நூலகங்கள் நிறுவப்பட்டன. பொது நூலகங்களின் சேவையை மேம்படுத்தும் நோக்கில் 1972-ஆம் ஆண்டில் பொது நூலக இயக்ககம் உருவாக்கப்பட்டது. பொது நூலக இயக்ககக் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகமெங்கும் மாவட்ட நூலக ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. கன்னிமாரா பொது நூலகம் தனி அலகாகவும், அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றொரு தனி அலகாகவும் மற்ற நூலகங்கள் மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் தனி அலகாகவும் செயல்படுகின்றன.
கன்னிமாரா பொது நூலகம்; அண்ணா நூற்றாண்டு நூலகம்; மாவட்ட மைய நூலகங்கள் -32; கிளை நூலகங்கள்-1926; நடமாடும் நூலகங்கள்-14; ஊர்ப்புற நூலகங்கள்-1915; பகுதி நேர நூலகங்கள்-745 என ஆக மொத்தம் 4634 நூலகங்கள் தற்போது இயங்கி வருகின்றன.
தகவல், எழுத்தறிவு, கல்வி மற்றும் கலாச்சார கருப்பொருளை மையமாகக் கொண்டு பொது நூலகச் சேவையானது குழந்தைகளுக்கு இளம் பருவத்திலேயே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி வலுப்படுத்துதல்; அனைத்து தரப்பினருக்கும் சுயகல்வி மற்றும் முறையான கல்விக்கு துணை நிற்றல்; தனிமனித படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல்; குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே கற்பனை மற்றும் படைப்பாற்றலைத் தூண்டுதல்; பாரம்பரிய கலாச்சார விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் கலைகள்; அறிவியல் சாதனைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல்; நடத்து கலைகளின் வளர்ச்சிக்கு உதவுதல்; அனைத்து தரப்பினருக்குமான கலை, இலக்கிய, கல்வி சார்ந்த செயல்பாடுகளில் பங்கெடுத்தல் உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.
நூலகத்துறைக்கென்று பிரத்தேயமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் கைசாலா செயலி மூலம் நூலகர் வருகை பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் செயலி செயல்படாததால் பல நூலகர்கள் நூலகத்திற்கு வராமல் வருகையை பதிவு செய்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள் வாசகர்கள்.
சர்வர் பிரச்சினை, டெக்னிக்கல் பிரச்சினை இருந்த போதிலும், கைசாலா ஆப் பயன்பாட்டில் இருந்த சமயத்தில், நூலகர் சரியான நேரத்திற்கு நூலகத்தை திறந்ததை ஆப் வழியே உறுதிபடுத்த வேண்டும். அதேபோல, நூலகம் மூடும் நேரத்தையும் முறையாக பதிவிட வேண்டும். மேலும், ரேண்டம் முறையில் குறிப்பிட்ட பகுதியை (அறிவியல் நூல்கள் – பொதுஅறிவு நூல்கள் போன்ற) புகைப்படம் எடுத்து பதிவேற்றச் சொல்லி கட்டளையிட்டு நூலகரின் இருப்பு மற்றும் நூலக பராமரிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைந்த முறையில் மேற்பார்வையிடும் வசதியை அந்த ஆப் வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆப் செயல்பாட்டில் இல்லாத நிலையில், பழைய முறையிலான வருகைப்பதிவேடு முறையே பராமரிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நூலகங்களிலும் நூலகர்கள் உரிய நேரத்திற்கு வந்திருக்கிறார்களா? உரிய முறையில் நூலகங்களை பராமரிக்கிறார்களா? என்பதையெல்லாம் மாவட்ட நூலக அலுவலர் நேரடியாக கண்காணிக்கும் சாத்தியமற்று போகிறது.
கிளை நூலகங்கள் ஊர் புற நூலகங்கள் திறக்கப்படாமலே இருப்பது அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது என்கிறார்கள். அதுமட்டுமின்றி நவநாகரிக கணினி யுகத்தில் நூலகத்தில் வருவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பல நூலகர்கள் வாசகர்கள் வருகை பதிவேட்டில் வாசகர்கள் வருகை புரிந்ததாக பலர் கையொப்பமிட்டு பதிவேட்டினை முறைகேடான முறையில் ஆவணப்படுத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
இப்பிரச்சினை தொடர்பான கருத்தறிய திருச்சி மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் அவர்களை தொடர்புகொண்டோம். “பிரச்சினைக்குரிய செயலியை மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். மற்றபடி, எந்த நூலகத்தில் எந்த நூலகரிடத்தில் பிரச்சினை என்பதாக குறிப்பிட்டு சொன்னால் உரிய நடவடிக்கை எடுக்கிறேன்.” என்றார்.
செயலி செயல்படாமல் இருப்பது தமிழகம் தழுவிய பிரச்சினை. நம் கவனத்திற்கு வந்த தகவலை உறுதிபடுத்தும் பொருட்டே, மாவட்ட நூலக அலுவலரிடம் கருத்து கேட்டறிந்தோம். மற்றபடி, கூடிய விரைவில் புதிய செயலியை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்; நூலகங்கள் உரிய முறையில் பராமரிக்கப்பட வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.
டிஜிட்டல்மயமான காலத்தில் வாசிப்பு பழக்கம் என்பதே அருகிவிட்ட சூழலில், புத்தக வாசிப்பையே ஒரு “இயக்கமாக” முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ள நிலையில், வாசிப்பை நேசிக்கும் ஜீவன்களையும் நூலகங்களை விட்டு துரத்திவிட்டு விடக்கூடாதல்லவா?
– அங்குசம் புலானாய்வு குழு.