லஞ்சம் வாங்கியதாக அடுத்தடுத்து கைதாகும் அமலாக்கத்துறை அதிகாரிகள் !
டாக்டரிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது!
திண்டுக்கல்லில் உள்ள மருத்துவர் ஒருவரிடம் அவர் மீதான வழக்கை முடித்து தருவதாகக் கூறி திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை அமலாக்கத்துறையைச் சேர்ந்த அதிகாரி அங்கிட் திவாரி என்பவர் 20 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார்.
இது குறித்து மருத்துவர் ஏற்கனவே அளித்த புகாரின் பேரில் தகவலறிந்து அங்கு வந்த திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜ் தலைமையிலான போலீசார், அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியின் காரிலிருந்து 20 லட்சம் ரூபாய் லஞ்ச பணத்தைக் கைப்பற்றி அவரையும் கைது செய்தனர்.
பின்னர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து சுமார் 6 மணி நேரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர். அப்போது ஏலச் சீட்டு மோசடி விவகாரத்தில் குற்றவாளியைக் கைது செய்யாமல் இருக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு பேர் ரூ.17 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர்.
ஆனால் ரூ. 15 லட்சம்தான் கொடுக்க முடியும் என்று குற்றவாளி கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ரூ.15 லட்சம் பணத்தை வாங்கியபோது அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு பேரையும் கையும் களவுமாக ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவமும் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.