“அரசு அங்கன்வாடியில் கலெக்டர் மகளும்; மேற்கூரையில்லாத அங்கன்வாடியும்”… அங்குசம் செய்தி எதிரொலி!
“அரசு அங்கன்வாடியில் கலெக்டர் மகளும்; மேற்கூரையில்லாத அங்கன்வாடியும்” அங்குசம் செய்தி எதிரொலி!
“அரசு அங்கன்வாடியில் கலெக்டர் மகளும்; மேற்கூரையில்லாத அங்கன்வாடியும்!” என்ற தலைப்பில் கடந்த டிசம்பர்-30 அன்று அங்குசம் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
மாவட்ட ஆட்சியராக பணியாற்றும் நிலையிலும், தனது மகளை அரசு அங்கன்வாடியில் சேர்த்து முன்னுதாராணமான ஆட்சியராக பெயரெடுத்த திருமதி சரயு அவர்கள் ஆட்சியராக பணியாற்றும் அதே கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் இந்த அவலமான அங்கன்வாடியும் அமைந்திருக்கிறது என்பதையும் பதிவு செய்திருந்தோம்.
இணையத்தின் வழியே செய்தியை அறிந்த மாத்திரத்திலேயே, கள விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அக்கறையோடு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறார், ஆட்சியர் சரயு அவர்கள். இதன்படி, சிக்க பூவத்தி ஊராட்சிக்குட்பட்ட மூங்கில்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள சிதில மடைந்த அங்கன்வாடிக்கு கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்; கிருஷ்ண கிரி மாவட்ட திட்ட அலுவலர் (PO); பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் என அடுத்தடுத்து படையெடுத்து வந்தார்கள் அரசு அதிகாரிகள்.
”சிதிலமடைந்த கட்டிடத்திற்கு மாற்றாக, புதிய கட்டிடம் கட்டித்தருவதாகவும்.” அக்கிராம மக்களிடையே வாக்குறுதியும் அளித்து சென்றிருக்கிறார்கள். இதற்கிடையில், கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் அவர்களும், சம்பந்தபட்ட அங்கன்வாடியை பார்வையிட்டார். அப்போது பாராளுமன்ற உறுப்பினரை சூழ்ந்துகொண்ட மலைவாழ் கிராம மக்கள், செல்போன் சிக்னலுக்காக ஒரு கிலோமீட்டர் தூரம், அரசு டவுன் பஸ்ஸை பிடிக்க 4 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டிய அவலம் நிலவுவதையும் அவரது கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
தன்னால் ஆன உதவிகளை அவசியம் செய்து தருவதாக அப்பகுதி இளைஞர்களிடம் உறுதியளித்திருக்கிறார். ”SO, BDO முதல் தொகுதி எம்பி வரை எங்க ஊருக்கு இதுவரை வராதவர்களையெல்லாம் வரவைத்து விட்டது. அங்கன் வாடிக்கும் விடிவு பிறந்துவிட்டது” என அங்குசம் இதழுக்கு நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தார்கள் பகுதி இளைஞர்கள். மூங்கில்பட்டி அங்கன்வாடி மட்டுமல்ல; இதுபோல் சிதில மடைந்த 10-க்கும் மேற்பட்ட அங்கன்வாடிகளையும் கண்டறிந் திருக்கிறார்கள். அவையனைத்தும் படிப்படியாக மாற்றியமைக்கப்படும் என்பதாகவும் அறிவித்திருக் கிறார்கள்.
– மணிகண்டன்