அமைச்சரை துரத்தும் கரூர் பைனான்ஸ் தம்பியை விரட்டும் “கோகுல்!”
அமைச்சரை துரத்தும் கரூர் பைனான்ஸ் தம்பியை விரட்டும் “கோகுல்!”
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைதான அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 200 நாட்களுக்கு மேலாகியும் தொடர்ந்து ஜாமின் மறுக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு காலம் சிறையிலேயே இருக்கும் ஒருவரை இன்னும் எப்படி அமைச்சராக வைத்திருக்கிறீர்கள் என்று நீதிபதிகள் கேள்வியும் எழுப்பியிருக்கிறார்கள்.
இது ஆளும் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறதா? இல்லையா என்பதைவிட, செந்தில்பாலாஜியின் அரசியல் எதிர்காலத்திற்கே கடும் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டதாக கவலைப்படுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
1996 ஆம் ஆண்டு கவுன்சிலராக அரசியல் வாழ்வை தொடங்கியவர் செந்தில்பாலாஜி. முதன்முறையாக 2006 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் கரூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக களமிறங்கிய போதே, கரூர் கவுண்டர் சாதி கந்துவட்டி காரர்களிடம் கடன் வாங்கித்தான் எம்.எல்.ஏ. ஆகியிருக்கிறார். அப்போது ஆளும்கட்சியாக இருந்த திமுக தரப்பில் கரூர் கே.சி.பழனிச்சாமி, வாசுகி முருகேசன் ஆகியோர் உட்கட்சி பூசலில் திளைத்திருந்தார்கள். தொழிலதிபர் என்ற அளவில் கரூரில் கே.சி.பி. கோலோச்சிய காலம் அது. சுற்று வட்டாரத்தில் மணல் அள்ளும் காண்டிராக்ட் மொத்தமும் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது.

எதிர்க்கட்சி என்ற அளவில் இவற்றை யெல்லாம் எதிர்த்து அரசியல் செய்யும் இடத்தில் செந்தில்பாலாஜி இருந்த காலம். நேரடியாகவோ, மறைமுகமாகவோ கே.சி.பி. ஆதரவோடுதான் அவரது வளர்ச்சியும் இருந்ததாக சொல்கிறார்கள். 2011 இல் 2வது முறை எம்.எல்.ஏ. ஆனபோது, கூடவே போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவியும் கிடைக்கிறது. முதல்முறை எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிட்டபோது கரூர் கந்துவட்டிக்காரர்களிடம் வாங்கிய கடனில் கொஞ்சத்தை கொடுத்துவிட்டு அவ்வளவுதான் என கையை விரித்தாராம் செந்தில்பாலாஜி.

ஆளும்கட்சியில் அமைச்சராகவும், செல்வாக்கு மிக்க இடத்திலும் இருப்பதை கண்டும் அவரின் கடைக்கண் பார்வையின் தேவையின் கருதியும் சுருதியை குறைத்துக் கொண்டு திரும்பியிருக்கின்றனர் கந்துவட்டி குரூப்ஸ். இதற்கிடையில், சொத்துப் பிரச்சினை ஒன்றில் கரூரைச் சேர்ந்த ”கோகுல்” என்ற கல்லூரி மாணவரை உருட்டி, மிரட்டி, ஆளைக் கடத்திக் கொண்டுபோய் அவரிடமிருந்து சொத்தை அபகரிக்க மேற்கொண்ட முயற்சியில், எப்படியோ இவர்களிடமிருந்து “கோகுல்” எஸ்கேப் ஆகிவிட, அந்த வழக்கில் வகையாய் சிக்கியிருக்கிறார், அமைச்சரின் தம்பி அசோக்.
காலத்தின் கோலம், அன்று காணாமல் போன ”கோகுல்” இன்றுவரை வீடு திரும்பவில்லை. அன்று கோகுலை விரட்டிய அசோக் மாநிலம் விட்டு மாநிலம் ஓடிக் கொண்டிருக்கிறார். அண்ணன் செந்தில்பாலாஜி சிறைபட்டுக்கிடக்கிறார். கோகுலின் “ஆவி”தான் அமைச்சரையும் அவரது தம்பி அசோக்கையும் விரட்டிவருவதாக விசனப்படுகிறார்கள் அவர்களது ஆதரவாளர்கள். இந்த விவகாரத்திலிருந்து எப்படியாவது விடுபட வேண்டுமென்று கோயில் கோயிலாக அலைந்து கொண்டிருக்கிறாராம், செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா.

அதிமுகவிலிருந்து அமமுகவுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி போனபோதுகூட, அனைத்தையும் அவர்தான் கவனித்துக்கொண்டார் என்கிறார்கள். அங்கிருந்து திமுகவுக்கு தாவியபோதும் பதவிக்கும் பவிசுக்கும் எந்தக் குறைச்சலும் இல்லாதுதான் இருந்தார். ஆனாலும், கரூரில் அவருக்கென்று சொந்த வீடோ, நிலமோ, பெரிய அளவில் சொத்துக்களோ எதுவும் கிடையாது. எல்லாமே, தம்பி அசோக்கின் பெயரில்தான் இருக்கிறது என்கிறார்கள்.
”வருசம் ஒன்னு ஆகப்போகுது. அவரும் இப்போதைக்கு வெளிய வர்ற மாதிரி தெரியல. பேருக்கு ஒட்டிக்கிட்டிருக்க அமைச்சர் பதவியும் என்னைக்கு உதிர்ந்து போகும்னு சொல்லவும் முடியாது. இவரால இனி நமக்கு எந்த பிரயோசனும் கிடையாது.” என கூட்டம் போட்டு பேசிய கவுண்டர் கந்துவட்டி குரூப்ஸ் பழைய பாக்கி என சுமார் 250 கோடியை கணக்கு போட்டு வைத்திருக்கிறார்களாம். வெளியே வந்த கையோடு கணக்கை முடிப்பதற்காக அவர்களும் காத்திருக்கிறார்கள், அமைச்சருக்கு எப்போது பெயில் கிடைக்கும் என்று?
– ஆதிரன்
வீடியோ லிங்:
[…] அமைச்சரை துரத்தும் கரூர் பைனான்ஸ் தம… […]