தலைநகரை திரும்பிப் பார்க்க வைத்த ”திருமா” மாநாடு !
தலைநகரை திரும்பிப் பார்க்க வைத்த ”திருமா” மாநாடு !
இந்தியா கூட்டணியின் முதல் நிகழ்வாக, தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் “வெல்லும் சனநாயகம்” அரசியல் மாநாடாக நடந்து முடிந்திருக்கிறது. ஜன-26, திருச்சி – சிறுகனூரில் நடைபெற்ற “வெல்லும் சனநாயகம்” மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 78,000 வாகனங்களில் 13 இலட்சத்து 60 ஆயிரம் பேர் பங்கேற்றதாகவும் உளவுத்துறையின் அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்பட்டிருப்பதாக தகவலை பகிர்ந்து பூரிப்படைகிறார்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.
இந்தியா கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் திபங்கர் பட்டாச்சாரியா, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி வீரமணி, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்று உரையாற்றியிருக்கின்றனர்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தைக் கைவிட வேண்டும். அதற்காக அமைக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவைக் கலைக்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஒப்புகை சீட்டு இயந்திரத்தோடு இணைக்கப்பட வேண்டும். நாடு முழுவதுமாக தொகுதி மறு சீரமைப்பில், தென் மாநிலங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவின் இரண்டாவது தலைநகராக சென்னையை அறிவிக்க வேண்டும். மாநில அரசின் சட்டம் – ஒழுங்கு நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுவதை நிறுத்த வேண்டும்.
ஜி.எஸ்.டி., வரி விதிப்பைத் திரும்பப் பெற வேண்டும். மாநில அரசு நிர்வாகத்தில் தலையிடும் ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும். ஆளுநர் பதவி ஒழிக்கப்படும் வரை, ஆளுநரை, பல்கலைக்கழக வேந்தராக நியமிப்பதைக் கைவிட வேண்டும். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும் அதை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும். தனியார்த் துறையில் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். அமைச்சரவை மற்றும் மேலவையில் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும். விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவ முறையைக் கொண்டு வர வேண்டும்.

நீதிபதிகள் நியமனத்தில், சமூக நீதியைப் பின்பற்ற வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதிகளை, மாநில அரசுகளே நியமனம் செய்ய வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக, தமிழை அறிவிக்க வேண்டும். என்பது உள்ளிட்ட 33 தீர்மானங்களை திரளாக திரண்ட தொண்டர்களின் கரவொலிகளுக்கிடையே நிறைவேற்றியிருக்கிறார்கள்.
“ஒப்பீட்டளவில் திமுக கூட்டங்கள், மாநாடுகளைவிட மிக அதிகமாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கூட்டங்கள், மாநாடுகளில் அதிக அளவில் நூல்கள் விற்பனையாகின்றன.” என திகவைச் சார்ந்த நூல் விற்பணையாளர் ஒருவர் பகிர்ந்த தகவலை பதிவு செய்து, ”வாசிப்பை நேசிக்கும் சிறுத்தைகளுக்கு வாழ்த்துகள்!” என முகநூலில் பதிவிட்டிருக்கிறார், அரசெழிலன் ரத்னம்.

”சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திருமா பற்றிய எந்த செய்திகளும் தொலைக்காட்சிகளில் வரவே வராது. ஆனால் அதில் மலையளவு மாற்றம். இதற்காக அவர் 30 ஆண்டுகால உழைப்பை கொட்டியிருக்கிறார். சாதியின் காரணமாக ஒதுக்கப்பட்ட அவரை, அவர்டைய அறிவாற்றல் காரணமாக சமூகம் எற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டது. ” எனக் குறிப்பிடுகிறார், விமலாதித்தன் மணி. தேர்தல் புறக்கணிப்பில் தொடங்கி, ”கட்டப்பஞ்சாயத்து கட்சி”, ”சாதிக்கட்சி” என்ற பல முத்திரைக் குத்தல்களை கடந்து, தமிழகத்தின் தவிர்க்கமுடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்திருக்கும், விடுதலை சிறுத்தைகளின் அடுத்த பாய்ச்சல், “வெல்லும் சனநாயகம்” அரசியல் மாநாடு!
– 2 ஆதிரன்