காரை துரத்திப்பிடித்த லஞ்ச ஒழிப்புப் போலீசார்! கட்டுக்கட்டாக சிக்கிய பணம் ! வசமாக சிக்கிய சார்பதிவாளர் சாய்கீதா
காரை துரத்திப்பிடித்த லஞ்ச ஒழிப்புப் போலீசார்! கட்டுக்கட்டாக சிக்கிய பணம்! கிருஷ்ணகிரியை அதிரவைத்த சார் பதிவாளர் !
தொழில் நகரான ஓசூர் வேகமாக வளர்ந்து வருவதால், இப்பகுதி மட்டுமின்றி சுற்றியுள்ள கெலமங்கலம், தளி தேன்கனிக்கோட்டை சுற்றுப்புறங்களிலும் நிலங்களின் மதிப்பும் கோடிகளில் உயர்ந்து வருகிறது. இதனால் ரியல் எஸ்டேட் தொழில் கொடி கட்டிப் பறக்கிறது. இதனை சுற்றியுள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் தினமும் நுாற்றுக்கணக்கான பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
அதன்படி ஓசூர் அருகே உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திலும் நூற்றுக்கணக்கான பத்திரங்கள் பதிவாகி வருவதை அறிந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் கண்முன்னே சார்பதிவாளர் லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்ட சம்பவம் கிருஷ்ணகிரியை அதிரவைத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக பணிபுரிபவர் தர்மபுரி எஸ்.வி., தெருவைச் சேர்ந்த சாய்கீதா.
தன்னிடம் வரும் பத்திரப்பதிவுகளுக்கு அலுவலகத்தில் வைத்து இலஞ்சப் பணத்தை வாங்காமல்; அலுவலகத்துக்கு வெளியே புரோக்கர்களை வைத்து இலஞ்சப் பணத்தை வசூலிப்பதாகவும்; பணி முடித்து வீடு திரும்பும்போது பணத்தை பெற்றுக் கொண்டு செல்வதாகவும் இலஞ்ச ஒழிப்புப் போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது. மேலும், அங்கீகரிக்கப்படாத நிலங்களுக்கு லஞ்சம் பெற்று, பத்திரப்பதிவு செய்வதாகவும் புகார்களும் சென்று சேர்ந்திருக்கிறது. இதனையடுத்து, இலஞ்ச ஒழிப்புப் போலீசாரும் சார்பதிவாளர் சாய்கீதாவின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிக்க தொடங்கினர்.
இந்த நிலையில், கடந்த 19 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது. அன்றைய தினம் இரவு லஞ்ச பணத்துடன் சாய்கீதா வீட்டிற்கு செல்வதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., வடிவேலுக்கு கிடைத்த தகவலையடுத்து, அதிரடி சோதனைக்குத் தயாராகினர்.
இதை எப்படியோ முன்கூட்டியே அறிந்து கொண்ட, சாய்கீதா இரவு, 9:00 மணிக்கு அலுவலகத்தில் இருந்து, ‘ஹூண்டாய் கிரெட்டா’ காரில் வீட்டிற்கு கிளம்பினார். இலஞ்ச ஒழிப்புப் போலீசார் தனது காரை பின்தொடர்ந்து வருவதை அறியாத சாய்கீதா, கெலமங்கலம் சாலையில் பைக்கில் வந்த இளைஞர் ஒருவரிடமிருந்து இலஞ்சப் பணத்தை பெற்றிருக்கிறார். அந்த பணத்தை பெற்றுக்கொண்டதுமே, சாய்கீதாவின் கார் அங்கிருந்து வேகமாக புறப்பட்டது. இதை எல்லாவற்றையுமே, நோட்டமிட்ட படியே பின் தொடர்ந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் சார் பதிவாளர் காரை தடுக்க முயன்றனர்.
இதனை சற்றும் எதிர்பாராத சார்பதிவாளர் சாய்கீதாவின் கார் வேகமெடுக்க ஆரம்பித்தது. ஆனாலும், விடாமல் அவரது காரை துரத்தி சென்று, இறுதியாக கெலமங்கலம் பழைய சார்பதிவாளர் அலுவலகம் அருகே மடக்கி பிடித்தனர் இலஞ்ச ஒழிப்புப் போலீசார். அப்போது சாய்கீதாவின் காரில் சோதனை செய்ததில் சுமார் ரூ 6 இலட்சத்து 38ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். சாய் கீதாவை கைது செய்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர், ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியில் இருந்த போது லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் சிக்கியவர்தான் இந்த சாய்கீதா. தற்போது மீண்டும் லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கியது கிருஷ்ணகிரி சார்பதிவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கா.மணிகண்டன்