அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

போக்சோ வழக்கால் பழிவாங்கப்பட்ட ”கோச்” ! அம்பலப்படுத்திய உயர்நீதிமன்றம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

TEAK WONDO
TEAK WONDO

போக்சோ வழக்கில் பொய் புகார் : என் வாழ்க்கையே போச்சு ! கண் கலங்கும் ”கோச்”! சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து கொண்டு குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது என்பதற்காகத்தான் பெண்கள் மற்றும் வன்கொடுமைகளுக்கு எதிரான குற்றங்களை கையாளுவதற்கென்றே தனிச்சிறப்பான சட்டங்களும் நடைமுறைகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக பொதுவில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் சூழலில், தற்போது போக்சோ வழக்கிலும் பொய்ப்புகார்கள் சாட்டப்படுவதாக வெளியாகும் தகவல் கவலை கொள்ள வைக்கின்றன.
கணவரை பழிவாங்குவதற்காக பெற்ற மகளின் கர்ப்பத்திற்கு காரணம் தந்தைதான் என்று போலீசில் புகார் கொடுத்ததோடு, பொய்யான ஆவணங்களையும் உருவாக்கினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வழக்கில் தற்போது உண்மை அம்பலமாகியிருக்கிறது.

பெரம்பலூர் விளையாட்டு விடுதி
பெரம்பலூர் விளையாட்டு விடுதி

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

இதே கதையாக, பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு சார்பில் நடத்தப்படும் விளையாட்டு விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளிடம் தவறாக நடக்க முற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட தர்மராஜ் என்பவரை நிரபராதி என்று தீர்ப்பளித்திருக்கிறது, சென்னை உயர்நீதிமன்றம்.

புகார் அளித்த மாணவிகள் மூவரையும் தனித்தனியாக நீதிபதி சேம்பரில் வைத்து நடத்தப்பட்ட விசாரணையிலிருந்து, அரவிந்த் மற்றும் பிரதீப் ஆகிய இருவரின் தூண்டுதலின் பேரில்தான் மாணவிகள் பொய்யான புகார் அளித்திருக்கின்றனர் என்றும் போக்சோ சட்டப்பிரிவு 23-இன் படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேசன்
நீதிபதி ஆனந்த் வெங்கடேசன்

”பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கிப் பயிலும் 7 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பகுதி நேர டேக்வாண்டோ (TEAK WONDO) பயிற்சியாளராக 2016 முதல் 2022 வரை பணியாற்றி வந்தேன். இது கொரியன் தற்காப்பு கலை. பெங்களூரில் உள்ள மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சாய் நிறுவனத்தில் இந்த விளையாட்டிற்கான டிப்ளமோ சான்று பெற வேண்டுமானால், இதே விளையாட்டுப் பிரிவில் தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று பதக்கம் பெற்றிருக்க வேண்டும். தமிழகம் முழுவதுமே மொத்தம் 7 பேர்தான் இந்த டேக்வாண்டோ விளையாட்டு பிரிவில் கோச் ஆக இருக்கிறோம்.
2012 முதல் 2022 வரையில் தமிழகத்தில் எங்குமே நிரந்தர பணிக்கு ஆள் எடுக்கவில்லை. 2022-இல் அறிவிப்பு வெளியாக இருந்த சமயத்தில்தான், அதுவும், ஏறத்தாழ ஏழு ஆண்டுகளாக எந்த ஒரு சிறு புகாரும் இல்லாமல் பணியாற்ற வந்த நிலையில்தான் சம்பந்தமே இல்லாமல் இந்த புகார் கிளம்பியது.

கோச் தர்மராஜ்
கோச் தர்மராஜ்

என்னிடம் பயிற்சி பெற்ற மாணவிகள் பலர் சர்வதேச போட்டியில் பங்கேற்கும் தகுதியை பெற்றிருக்கின்றனர். மாணவி ஒருவரின் சாதனை குறித்த செய்தி 6-வது பாடப்புத்தகத்திலும் இடம்பெற்றிருக்கிறது. தனிப்பட்ட முறையில் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த மாணவிகளின் கல்விக்காகவும் உதவி செய்திருக்கிறேன். அடிப்படையில் நான் ஒரு சாப்ட்வேர் என்ஜினியர். விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்திலிருந்துதான் இந்த துறையை தேர்வு செய்தேன். மாணவிகளை தூண்டியதாக சொல்லப்படும் அரவிந்த் என்னிடம் பயிற்சி பெற்ற முன்னாள் மாணவர். பிரதீப் ஷட்டில் விளையாட கிரவுண்டுக்கு வந்து செல்பவர். இவர்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

செய்யாத குற்றத்துக்கு 29 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். ஜாமீனில் வெளியே வந்த பிறகும்கூட தொடர்ந்து 8 மாதங்கள் நிபந்தனை கையெழுத்து போட்டிருக்கிறேன். இந்தக் குற்றச்சாட்டால், தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் ஒருபக்கம்; குடும்பத்தில் சிக்கல் மறுபக்கம்; இடைப்பட்ட இந்த இரண்டு ஆண்டுகளில் கல்யாணம், காதுகுத்து, கருமாதினு எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள முடியாத வேதனையை அனுபவித்துவிட்டேன். பத்து வருடங்களாக காத்திருந்த அரசு வேலையும் கிடைக்காமல் போய்விட்டது.” என வேதனையை விவரிக்கிறார், குற்றச்சாட்டுக்குள்ளான கோச் தர்மராஜ்.

மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார்
மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார்

இதில் கொடுமையான மற்றொரு விசயம் தர்மராஜ் – க்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அப்போது பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலராக இருந்த சுரேஷ்குமார் என்பவரையும் வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்த்ததுதான். இதுகுறித்து விளக்கம் அறிய, தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட விளையாட்டு அலுவலராக பணியாற்றிவரும் சுரேஷ்குமாரை அங்குசம் சார்பில் தொடர்புகொண்டோம். ”சம்பந்தபட்ட மாணவிகள் நேரடியாக என்னிடம் புகார் அளிக்கவே இல்லை. யாருடைய தூண்டுதலிலோ நேரடியாக நீதிபதியிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் புகார் செய்திருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மாணவிகள் புகார் குறித்து தெரிவித்தார்கள். நானும் எனது உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். அவர்களின் வழிகாட்டுதல்படி தர்மராஜுக்கு ஷோகாஸ் நோட்டீசும் கொடுத்தேன். உயர் அதிகாரிகள் இப்புகார் தொடர்பாக விசாரிக்கும் வரையில் விளையாட்டு மைதானத்திற்கு வரக்கூடாது என்றும் கறாராக அவரிடம் சொல்லிவிட்டேன்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆர்ப்பாட்டம்
இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆர்ப்பாட்டம்

இதற்கிடையில் மகளிர் அமைப்புகள் போராட்டம் நடத்தி அழுத்தம் கொடுக்கவே, வழக்கில் ஏ2 வாக என்னையும் சேர்த்துவிட்டார்கள். எஃப்.ஐ.ஆர் பதிவாகிவிட்டதால், என்னை சஸ்பெண்ட் செய்துவிட்டார்கள். பெரம்பலூர் மாவட்டத்திற்கு மாறுதலாகி வந்து மூன்று மாதங்கள்தான் ஆகியிருந்தது.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உயர் போலீசு அதிகாரிகள் உள்ளிட்டு வி.ஐ.பி.க்கள் பலரும் அப்போது மைதானத்தை பயன்படுத்தி வந்தனர். பணம் கட்டாதவர்களும் மைதானத்தை பயன்படுத்துவதாக தெரிய வந்தால் உங்கள் மீதுதான் நடவடிக்கை எடுப்போம் என்பதாக என்னை உயர் அதிகாரிகள் எச்சரித்தார்கள். நானும் வேறு வழியின்றி இது தொடர்பான அறிவிப்பை பணம் கட்டியவர்கள் பட்டியலோடு தர்மராஜை விட்டு ஒட்ட சொன்னேன். இது அவர்களுக்கு கவுரவ பிரச்சினையாக மாறியது. இதிலிருந்துதான் இந்த பிரச்சினை வெடித்தது.

புகார் கொடுத்த மாணவிகள் சிலரது தூண்டுதலில்தான் இப்புகாரை கொடுத்ததாக அவர்களது பெற்றோர்களுடன் போலீசிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் எடுத்து சொன்னார்கள். வழக்கு பதிவு செய்யப்பட்டு விட்டதால் எங்களால் இனி ஒன்றும் செய்ய முடியாது, நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார்கள். தர்மராஜ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் என் மீதான குற்றச்சாட்டு. ஆனால், பாலியல் புகாரில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சஸ்பெண்ட் என்றெல்லாம் செய்தி வெளியிட்டார்கள். பெரிய மனவேதனையை அனுபவித்துவிட்டேன்” என்கிறார், சுரேஷ்குமார்.

இந்த விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய ”கோச் தர்மராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்ற வேண்டும்” என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய மகளிர் அமைப்புகள் போராட்டங்களை நடத்தியிருக்கின்றன.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலர் கல்யாணியிடம் அங்குசம் சார்பில் பேசினோம், ”அந்த குறிப்பிட்ட கோச் தொடர்ந்து மாணவிகளிடம் அத்துமீறி நடந்து வருவதாக ஒரு தகவல் உலவி வந்த நிலையில் தான் மாணவிகள் புகார் அளித்திருந்தனர். நாங்களும் சம்பந்தபட்ட மாணவிகளிடம் விசாரிக்க முயற்சி செய்தோம். விடுதி நிர்வாகம் எங்களை அனுமதிக்கவில்லை. வெளியில் யாரிடமும் பேசிவிடக்கூடாது என்று மாணவிகளை மிரட்டிதான் வைத்திருந்தார்கள். அந்த கோச்-சுக்கு ஆகாத அரவிந்த் மற்றும் பிரதீப் ஆகிய இருவரும்தான் மாணவிகளை தூண்டிவிட்டதாக அப்போதே எங்கள் கவனத்திற்கும் வந்தது. அதனடிப்படையில் அவர்களையும் சந்திக்க முயற்சித்தோம். போலீசிடமும் விசாரித்தோம் அவர்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டதாக சொல்லிவிட்டார்கள்.” என்றார்.

வழக்கறிஞர் விவேகானந்தன்
வழக்கறிஞர் விவேகானந்தன்

“பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் முன்வைத்த குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றிருந்த மாணவிகளின் வாக்கு மூலத்தின் அடிப்படையிலிருந்து தான் இந்த வழக்கையே தொடுத்தோம். புகார் அளித்த மாணவிகளை நீதிபதியே தனிப்பட்ட முறையில் விசாரித்ததன் அடிப்படையிலிருந்துதான் இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறார். சட்டப்பிரிவு 23 – இன்படி, அம்மாணவிகளை பொய்ப்புகார் அளிக்கத்தூண்டிய அரவிந்த், மற்றும் பிரதீப் ஆகியோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். இதன்படி அதிகபட்சம் மூன்றாண்டுகள் வரையில் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.” என்கிறார்.இந்த வழக்கை நடத்திய சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் விவேகானந்தன்.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கலா அவர்களிடம் பேசினோம். ”எங்களது தரப்பில் மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துவிட்டோம். தற்போது நான் இடமாறுதல் பெற்று வேறு இடத்திற்கு வந்துவிட்டேன். இதற்குமேல் நான் எதுவும் கருத்து கூறுவது பொருத்தமாக இருக்காது.” என்கிறார்.

பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலையம்
பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல்நிலையம்

வழக்கில் ஒரு வாதியாக சேர்க்கப்பட்டிருக்கும் மாவட்ட குழந்தைகள் நல சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் டி.கோபிநாத்தை அணுகினோம். “விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறேன். பல வழக்குகளை கையாண்டு வருகிறோம். கோப்புகளை சரிபார்க்காமல் கருத்து கூற முடியாது. அடுத்த வாரம் அலுவலகம் வந்ததும் போதுமான விளக்கம் தருகிறேன்.” என்றார், அவர்.

போலீசின் நடவடிக்கைக்கு பயந்து பிரதீப் மற்றும் அரவிந்த் ஆகியோர் தலைமறைவாகி விட்டதாக சொல்கிறார்கள். மாணவிகளை தூண்டிவிட்டது பிரதீப் மற்றும் அரவிந்த் என்று அடையாளம் காட்டியிருக்கிறது, சென்னை உயர்நீதிமன்றம். இவர்கள் இருவரையும் தூண்டி விட்டது, யார்? இந்த வழக்கில் இப்போதைக்கு விடை காண வேண்டிய கேள்வி இதுவொன்றுதான் !

– அங்குசம் புலனாய்வுக் குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.