கூட்டணியில் வேதனையுடன் மதிமுக – திமுக அரவணைக்குமா ?
கூட்டணியில் வேதனையுடன் மதிமுக திமுக அரவணைக்குமா? பரபரப்பு தகவல்கள்
கடந்த சில நாள்களுக்கு முன்பு திமுக கூட்டணிக் கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தியது. மதிமுக சார்பில் கட்சியின் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூன் கலந்துகொண்டார். பேச்சுவார்த்தை முடிந்து அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக அவைத்தலைவர்,“கூட்டணியில் பேச்சுவார்த்தைத் தொடர்கிறது. எத்தனை தொகுதிகள் என்பது இதுவரை இறுதி செய்யப்படவில்லை. பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. தொடர்ந்து மார்ச்சு 3ஆம் நாளுக்குப் பிறகு பேசுவோம். நல்ல முடிவு கிடைக்கும் என்று மதிமுக எதிர்பார்க்கிறது” என்றார்.
செய்தியாளர் குறுக்கிட்டு,“நீங்கள் எத்தனை தொகுதிகளைத் திமுகவிடம் கோரியுள்ளீர்கள்” கேட்டார். தொடர்ந்து அவைத்தலைவர் பேசும்போது,“நாங்கள் 2 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியையும் மாநிலங்களவை உறுப்பினரும் கேட்டிருக்கிறோம்” என்றார். பின்னர் அறிவாலயத்தைவிட்டு அவைத்தலைவர் கிளம்பினார். அப்போது மதிமுக அவைத்தலைவர் பேச்சில் இருந்த நம்பிக்கை அவர் முகத்தில் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. மதிமுகவுக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப்போலவே ஒரு தொகுதிதான் என்பதை திமுக தெரிவித்திருப்பதாக சமூக ஊடகங்களில் வந்த செய்தியால் மதிமுக தொண்டர்கள் கொதிப்பு நிலைக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பதை சமூக ஊடகங்களில் அவர்கள் ஈடும் பதில் பதிவுகளின் வழியாக அறிந்துகொள்ளமுடிந்தது.
ஒரு செய்தி ஊடகம் தேர்தல் களம் என்ற நிகழ்ச்சியில் மதிமுக குறித்து பேசும்போது, “மதிமுக திருச்சி மற்றும் விருதுநகர் இரண்டு தொகுதிகளையும் ஒரு மாநிலங்களவை உறுப்பினரையும் கோருகின்றது. மதிமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, திருச்சியில் போட்டியிடுவதைவிடவும், தன் தந்தை இருமுறை போட்டியிட்டு தோல்வியடைந்த விருதுநகரில் போட்டியிட்டு வெற்றிப்பெறவே விரும்புகிறார்.
திருச்சி தொகுதியைக் கேட்பதற்குக் காரணம், கட்சிக்குத் தொடக்கக்காலத்தில் சீதக்காதி வள்ளல்போல் விளங்கிய சேக் முகமது அவர்களின் மகள் மருத்துவர் ரொஹையா அவர்கள் தற்போது கட்சியின் துணைப்பொதுச்செயலாளராகவும் உள்ளார். கட்சி நிகழ்ச்சிக்குத் தேவைப்படும் நிதிகளை அவ்வவ்போது வழங்கியும் வருகிறார். திருச்சி மேயர் தேர்தலில் தனித்து நின்று 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றார். இவரைத் திருச்சி தொகுதியில் நிறுத்த தற்போது மதிமுக முடிவு செய்துள்ளது. மேலும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மல்லை சத்யாவுக்கு வழங்கலாம் என்றும் மதிமுக முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில் துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசும்போது,“திமுகவோடு நாங்கள் கொண்டிருக்கும் கூட்டணி என்பது கொள்கை சார்ந்தது. தொகுதி எண்ணிக்கை சார்ந்தது அல்ல. திமுக கூட்டணியில் எங்களுக்குப் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை என்றாலும் நாங்கள் திமுக கூட்டணியில்தான் இருப்போம்” என்று துரை வைகோ கூறியிருப்பதை ஆழ்ந்து நோக்கினால் துரை வைகோவின் பேச்சில் ஒருவித விரக்தி இருப்பதை உணரமுடிகின்றது. மேலும், தான் ஒருவன் மட்டும் தொகுதி வாங்கிக் கொண்டு வெற்றிப்பெற்றால் வாரிசு அரசியல் என்ற பழிக்கு ஆளாவோம் என்ற அச்சமும் துரை வைகோவிடம் உள்ளது என்பதை தெளிவாக உணர்ந்துகொள்ள முடிகின்றது. திமுக மதிமுகவை எப்படி கையாளப் போகிறது என்பது விரைவில் தெரிந்துவிடும்.
-ஆதவன்