இயற்கையின் அரண்களான மேற்கு, -கிழக்கு தொடர்ச்சி மலைகள்! வனங்களின் வழியே… தடங்களைத் தேடி… காட்டுயிர் பயணம்! (பகுதி – 4)
இயற்கை நமக்குத் தந்த கொடையாகிய மலை களையும், அதனோடு ஒன்றிப்போன இயற்கையின் உறவுகளாகிய உயிரினங்களையும் பாதுகாத்து வளப்படுத்துவது மனிதர் களாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும். ஆகையினால், இப்போதே இயற்கையை காப்பதில் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் எதிர்காலத் தலைமுறையினர் சுவாசிப்பதற்கு நல்ல காற்றாவது கிடைக்கும்.
நதி, மலை மற்றும் சமவெளிப் பரப்புகள் என அபரிமிதமான சுற்றுச்சூழல் வளங்களை தன்னகத்தே கொண்டுள்ள நாடு நமது இந்தியா. இந்திய புவிப்பரப்பின் தென்பகுதியில் உள்ள தீபகற்பத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் இயற்கை அரண்கள் போன்று அமைந்துள்ளன. இதில் கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரானது மேற்கு தொடர்ச்சி மலையைவிடப் பழமை வாய்ந் தது என்பதற்கு பவுத்த இலக்கியங்கள் ஆதாரமாக உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலை அரபிக்கடலுக்கு இணையாக அதாவது இந்தியாவின் மேற்குக் கடற் கரைக்கு இணையாக அமைந்துள்ளது.
பொதுவாக மலைகள் ஒன்றையொன்று அடுத்தடுத்து அமைந்து ஒரு நீண்ட சுவர்போல் எழும்பிக் காணப்படுவதால் மலைத்தொடர் என்று அழைக்கிறார்கள். கிழக்குத் தொடர்ச்சி மலைகளும், ’மலைத் தொடர்’ என்று அழைக்கப்பட்டாலும்கூட இத்தொடரிலுள்ள மலைகள் இடைவெளிகள் விட்டும், சிறுசிறு குன்றுகளாகவும் காணப்படுகின்றன.
இம்மலைத் தொடர் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையான வங்காள விரிகுடா கடற்கரைக்கு இணையாக மேற்கு வங்காள மாநிலத்தில் துவங்கி ஒரிசா, ஆந்திரா வழியாக தெற்காகச் சென்று மீண்டும் தென்மேற்காகத் திரும்பி தமிழ்நாட்டிலுள்ள நீலகிரியில் மேற்குத் தொடர்ச்சி மலையுடன் இணைகிறது.
மேற்கு வங்காளம், ஒரிசா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இம்மலைத்தொடர் பரவியிருந்தாலும் இதன் பெரும்பகுதி ஒரிசா, ஆந்திரா மாநிலங்களில் தான் அமைந்துள்ளது. மேற்கிலிருந்து கிழக்காக நிலப்பகுதி சரிந்திருப்பதால் இந்தியாவின் ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகி கிழக்கு நோக்கி ஓடிவந்து வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது. அதனால் கிழக்குத் தொடர்ச்சி மலையில் ஆறுகள் உற்பத்தியாகவில்லை.
தென் இந்தியாவின் பெரிய ஆறுகளான மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆகியவை கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஊடாகச் செல்கின்றன. இவ்வாறுகளால் இம்மலைத்தொடரானது அரிக்கப்பட்டு தொடர்ச்சியாக இல்லாமல் உள்ளது. உயரம் குறைவான கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தனித்தனிக் குன்றுகளாகவே இருந்தாலும் பசுமை நிறைந்த பகுதிகளாகவே காணப்படுகின்றன. கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர் 1750 கிலோ மீட்டர் நீளமுடையது. 75,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இம்மலைத் தொடரில் மிக உயர்ந்த சிகரம் 1501 மீட்டர் உயரமுள்ள ஒரிசா மாநிலத்தின் மகேந்திரகிரி ஆகும் .
(தடங்கள் தொடரும்)
– ஆற்றல் ப்ரவின் குமார் (யானைகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்)
முந்தைய தொடரை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்…
வலசை தொலைத்த பேருயிர்…. வனங்களின் வழியே… தடங்களைத் தேடி… காட்டுயிர் பயணம்! பகுதி – 3