சீருடையில் பள்ளி மாணவிகள் சாராயம் குடிப்பதாக சர்ச்சை வீடியோ ! பாஜக நிர்வாகி சௌதாமணி கைது !
சீருடையில் பள்ளி மாணவிகள் சாராயம் குடிப்பதாக சர்ச்சை வீடியோ ! பாஜக நிர்வாகி சௌதாமணி கைது ! சமூக வலைதளங்களின் வழியே வதந்தியைப் பரப்பியதான குற்றச்சாட்டின் கீழ் திருச்சி மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார், பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினரான சௌதாமணி. அவரது @sowdhamani7 (மோடியின் குடும்பம்) என்ற X-தள கணக்கில், “மனது வலிக்கிறது, வருங்கால இந்தியாவின் தூண்கள் இப்படி அலங்கோலப்பட்டு கிடக்கிறது! திராவிட மாடல் இந்த வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தை சிதைக்கும் கொடுமைகளைத் தானே செய்கிறது. மது…..கஞ்சா…திராவிட ஆட்சி தமிழகத்திற்கு சாபக்கேடு” என்ற வாசகங்களோடு அதனுடன் வீடியோ ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார். பள்ளி மாணவிகள் மூவர் சீருடையுடன் மது அருந்துவதைப் போன்ற காட்சி அதில் இடம்பெற்றிருக்கிறது.
“அந்த வீடியோவை பார்க்கும் போது, யாரோ மேற்படி திரவத்தை கொடுத்து, குடிக்க சொல்லி வீடியோ எடுத்து, அந்த பதிவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளதாகவும், இவ்வாறாக சமுதாயத்தை சீர்கெடுக்கும் விதமாகவும், குழந்தைகளை அச்சுறுத்தும் விதமாகவும், அரசுக்கும், அரசு பள்ளிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தோடும், பொது அமைதியை கெடுக்கும் விதமாகவும் மேற்படி வீடியோ மற்றும் பதிவு உள்ளதாகவும், ஏதோ உள்நோக்கத்துடன் வதந்தியை பரப்பியும், குழந்தைகள் சம்மந்தப்பட்ட இதுபோன்ற செய்தியை சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் வெளியிடுவது சட்டபடி குற்றம் என தெரிந்தும் மேற்படி வீடியோவை @sowdhamani7 என்ற ID மூலமாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். எனவே, மேற்படி சவுதாமணி என்பவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி” திருச்சியைச் சேர்ந்த ஏ.கே.அருண் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மேற்படி சௌதாமணியை கைது செய்து சிறையிலடைத்திருக்கிறார்கள்.
நாகர்கோவிலை பூர்வீகமாகக் கொண்ட சௌதாமணி தூர்தர்ஷன் தொடங்கி சன் டி.வி., என்.டி.டி.வி. இந்து தமிழ், தந்தி டி.வி இறுதியாக புதுயுகம் தொலைக்காட்சி போன்றவற்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழிசை சவுந்திரராஜன் தமிழக பாஜக தலைவராக இருந்தபோது, அவரது முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டவர் சௌதாமணி. கட்சியில் சேர்ந்த புதிதிலேயே செயற்குழு உறுப்பினர் பதவி கிடைக்க, பொதுக்கூட்ட மேடைகளில் சகட்டு மேனிக்கு பேசி சர்ச்சையில் சிக்குவதையும் வாடிக்கையாக கொண்டவர் சௌதாமணி என்கிறார்கள்.
இதே எக்ஸ் தளம் இதற்கு முன்னர் டிவிட்டராக செயல்பட்டபோது மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டதற்காக, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரியில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
– ஆதிரன்.