கூடுதல் மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது – சிவகாசி பரபரப்பு !
சிவகாசி அருகே கூடுதல் மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது – விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் ரவிச்சந்திரன் (55) இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்பொழுது பட்டாசுக்கு தேவையான பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
நிறுவனத்தில் புதிய இயந்திரம் வாங்கியதால், மின் அளவு குறையாக உள்ளதால், மேலும் கூடுதலாக மின்சாரம் பெற கடந்த 02.02.2024ஆம் தேதி தனியார் கணினி மையத்தில் விண்ணப்பித்த மனுவை வெம்பக்கோட்டை மின்சார வாரியத்தில் பணியில் இருந்த உதவி மின் பொறியாளர் சேதுராமனிடம் கொடுத்துள்ளார்.
அப்போது அவர் உங்கள் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் குறைவாக உள்ளது, புதிதாக ட்ரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் மற்ற பல விதிமுறைகள் இருப்பதாலும் மேலிருந்து கீழ் வரை கவனிக்க வேண்டியவர்களை நானே பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் அலைய வேண்டாம், அதற்காக ரூ.30 ஆயிரம் இலஞ்சம் கொடுத்தால், உடனடியாக அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து நீங்கள் கேட்ட கூடுதல் அளவிலான மின்சாரத்தை தருகிறேன் என கூறியுள்ளார்.
நான் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பார்த்து செய்யுங்கள் என ரவிச்சந்திரன் உதவி மின் பொறியாளர் இடம் தெரிவிக்கவே சரி நான் பார்த்துக் கொள்கிறேன். என கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பின் இணைப்பு கொடுக்காமல் ராணுவ வீரரை நடையாய் நடக்க வைத்துள்ளார்.
பின்னர் இது தொடர்பாக உதவி மின் பொறியாளரிடம் கேட்டபோது முறையாக அதிகாரிகளை கவனித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
மின்சாரம் இல்லாததால் கடந்த பல மாதங்களாக புது இயந்திரத்தை இயக்க முடியாமல் இருப்பதை பார்த்து மிகுந்த உளைச்சலுக்கு ஆளான ராணுவ ரவிச்சந்திரன், இதுகுறித்து விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினரின் உரிய வழிகாட்டுதலின்படி 29.07.2024 இன்று மாலை உதவி மின் பொறியாளர் சேதுராமனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரவிச்சந்திரன் தங்கள் கேட்ட லஞ்சப் பணத்தில் முன் தொகையாக ரூ. 10 ஆயிரம் ரெடியாக உள்ளது.
அதை எங்கு வந்து கொடுக்க என கேட்கவே நீங்கள் அலைய வேண்டாம், நானே உங்களுடைய நிறுவனத்துக்கு வந்து வாங்கிக் கொள்கிறேன், என அங்கு சென்று ரசாயனம் தடவப்பட்ட பணத்தை வாங்கிய போது அங்கு மறைந்திருந்த விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஏ. டி. எஸ் .பி காவல் கண்காணிப்பாளர் இராமச்சந்திரன், தலைமையிலான காவல் ஆய்வாளர்கள் சால்வன் துரை, பூமிநாதன், ஆகியோர் அடங்கிய காவல்துறையினர். சேதுராமனை கைது செய்து வெம்பக்கோட்டை மின்சார வாரிய அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இது குறித்து விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 7 லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் வி.ஏ.ஓ. நகரமைப்பு ஆய்வாளர், ஊராட்சிமன்ற தலைவர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் மின் வாரிய உதவி பொறியாளர் என அரசு அலுவலர்களும், வி.ஏ.ஓ மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஆகியோர்களுக்கு உடந்தையாக இருந்த 2 தனிநபர்களும் என 9 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக இந்த மாதத்தில் (ஜூலை/2024) மட்டும் 4 லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4 அரசு ஊழியர்கள் உட்பட 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
லஞ்ச புகார்கள் தொடர்பாக விருதுநகர் லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இராமசந்திரன் அவர்களின் கைபேசி எண்.94981-05882-க்கு எந்த நேரத்திலும் தகவல் தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவிப்பவர்களின் விபரம் இரகசியம் காக்கப்படும். இவ்வாறு விருதுநகர் லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இராமசந்திரன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
– மாரீஸ்வரன்